Author Topic: ~ சிலுசிலு...குளுகுளு! சம்மர் சமையல்! ~  (Read 1842 times)

Offline MysteRy

கிர்ணி மில்க் ஷேக்



தேவையானவை:

கிர்ணிப் பழம் - 1, சர்க்கரை - ஒரு கப், பால் - 500 மி.லி. 

செய்முறை:

 கிர்ணிப் பழத்தின் தோல், விதை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் சர்க்கரை சேர்த்து அரைக்கவும். பாலைக் காய்ச்சி ஆறவைத்துக் கலந்து, ஃபிரிட்ஜில் வைத்து, குடிக்கலாம்.

குறிப்பு:

 சர்க்கரைக்குப் பதிலாக நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் சேர்க்கலாம்.

பலன்கள்:

 உடனடி எனர்ஜியைத் தரும்.  களைப்பு, சோர்வைப் போக்கும்.  சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும். ஓடி விளையாடு
பவர்கள், உடல் உழைப்பாளிகள் அருந்த ஏற்றது.

Offline MysteRy

ஆரஞ்சு பச்சடி



தேவையானவை:

கமலா ஆரஞ்சுப் பழம் - 2,  புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, பனை வெல்லம் - 50 கிராம், பச்சை மிளகாய் - 1,  இஞ்சி, - ஒரு சிறிய துண்டு (தோல் சீவிப் பொடியாக நறுக்கவும்), கடுகு  - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஆரஞ்சுப் பழத்தின் தோலை நீக்கிய பின், தோலைப் பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கி, தனியே வைக்கவும்.  இஞ்சி, பச்சை மிளகாயை நன்றாக வதக்கி, வெந்ததும் புளியைக் கரைத்து, உப்பு, பனை வெல்லம் சேர்த்து, கொதிக்கவைக்கவும்.  சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து இறக்கவும். பழத்தின் விதையை எடுத்துவிட்டு, சுளையைச் சேர்த்து, நன்கு கலக்கவும்.

குறிப்பு:

தோல் சுவையும் சுளை ருசியும் சேர்ந்த, மிகவும் ருசியான பச்சடி. ஆரஞ்சுத் தோலில் துவையலும் செய்யலாம்.

பலன்கள்:

இதில் நீர்ச்சத்து,மாவுச்சத்து, தாது உப்புக்கள் கிடைக்கின்றன. கமலா ஆரஞ்சுத் தோலை அதிகம் வதக்காமல் சாப்பிட்டால், வைட்டமின் சி அப்படியே கிடைக்கும். கலோரி நிறைந்தது. நல்ல எனர்ஜியைக் கொடுக்கும். வளரும் குழந்தைகள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

Offline MysteRy

அன்னாசி - வெந்தயப் பணியாரம்



தேவையானவை:

 இட்லி அரிசி - 200 கிராம், அன்னாசிப் பழம் நறுக்கிய துண்டுகள் - ஒரு கப், வெந்தயம், உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய்- 100 மி.லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பை ஒன்றாக ஊறவைத்து, நைஸாக அரைக்கவும். அன்னாசித் துண்டுகளைத் தனியாக அரைத்துக் கலக்கவும். உப்பு சேர்த்துக் கலந்து, பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, மாவை ஒரு சிறு கரண்டியால் ஊற்றி, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:

சாஸ் அல்லது சட்னி சிறந்த காம்பினேஷன்.

பலன்கள்:

கார்போஹைட்ரேட், தாது உப்புக்கள், நார்ச்சத்து நிறைந்திருக்கின்றன. வெந்தயத்தில் நார்ச்சத்து மிக அதிகம்.  சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கொழுப்பைக் குறைக்கும்.  வயிற்று வலி உள்ளவர்கள், இதய நோயாளிகள் சாப்பிட ஏற்றது.
 

Offline MysteRy

தக்காளி ஜாம்



தேவையானவை:

 தக்காளி - 250 கிராம், சர்க்கரை - 100 கிராம், இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

தக்காளியைப் பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கவும். தண்ணீர் சிறிது வற்றியதும், சர்க்கரை, இஞ்சி பேஸ்ட் சேர்த்து, நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:

பிரெட், சப்பாத்தி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிடலாம்.

பலன்கள்:

தக்காளியில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால்,  கேன்சர் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடியது. பசியைத் தூண்டி, வாய்க் கசப்பைப் போக்கும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

Offline MysteRy

புதினா - இஞ்சி - எலுமிச்சை ஜூஸ்



தேவையானவை:

புதினா - ஒரு கைப்பிடி, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எலுமிச்சைப் பழம் - 1, சர்க்கரை - ஒரு கப்.

செய்முறை:

 இஞ்சியைத் தோல் சீவி நறுக்கி, புதினா சேர்த்து, அரைத்து வடிக்கட்டி, எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, தண்ணீர், சர்க்கரையைக் கலந்து குடிக்கலாம்.

குறிப்பு:

புதினாச் சாறு, வாய்க்குப் புத்துணர்ச்சி தரும். ஜீரணசக்திக்கு உதவும்.

பலன்கள்:

புதினா, எலுமிச்சையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி இருப்பதால், கண், தோலுக்கு மிகவும் நல்லது. ஜீரணசக்தி அதிகரிக்கும். இதய நோயாளிகளுக்கு நல்லது. மலச்சிக்கலைப் போக்கும். தாகத்தைத் தணிக்கும்.  சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம்.

Offline MysteRy

வாழைப்பழப் பருப்புப் பாயாசம்



தேவையானவை:

வாழைப்பழம் - 1, பாசிப்பருப்பு, பொடித்த வெல்லம் -  தலா 100 கிராம், ஏலக்காய்த் தூள் - சிறிதளவு, பால் - 250 மி.லி, வறுத்த முந்திரிப் பருப்பு - 10.

செய்முறை:

வெறும் கடாயில் பாசிப்பருப்பைப் பொன்னிறமாக வறுத்து, குழைவாக வேகவைத்து, வெல்லத்தைச் சேர்க்கவும். பாலைக் காய்ச்சிவிட்டு, ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும். வாழைப்பழத்தைப் பொடியாக நறுக்கி, சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு:

முந்திரிக்குப் பதிலாக, கொப்பரைத் தேங்காயைப் பொடியாக நறுக்கி, நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம்.

பலன்கள்:

இதில், அதிக அளவு மாவுச்சத்து இருக்கிறது. இரும்புச்சத்து, புரதம், மாவுச்சத்து சேரும்போது, உடலுக்கு நல்ல எனர்ஜியைத் தரும்.  வளரும் குழந்தைகள், தாய்மார்கள், வயோதிகர்களுக்கு மிகவும் நல்லது.

Offline MysteRy

கொய்யா மல்டி ஃப்ரூட் சாலட்



தேவையானவை:

கொய்யாப்பழத் துண்டுகள், மாதுளம்பழ முத்துக்கள், அன்னாசித் துண்டுகள், பப்பாளித் துண்டுகள் - தலா ஒரு கப், சாட் மசாலா தூள் - கால் டீஸ்பூன், ஆரஞ்சுச் சுளை, வாழைப்பழத் துண்டுகள் - 2, தேன் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

கொய்யா, மாதுளை, அன்னாசி, பப்பாளி, வாழைப்பழத் துண்டுகள், விதை நீக்கிய ஆரஞ்சுச் சுளையைச் சேர்த்து, தேன் கலந்து ஒரு அகலமான பவுலில் போட்டுக் கலக்கவும்.

குறிப்பு:

சாப்பாட்டுக்கு இடைப்பட்ட நேரத்தில் அதாவது, காலை 11 மணி, மாலை நான்கு மணிக்குச் சாப்பிடுவது நல்லது.

பலன்கள்:

 பப்பாளியில், பீட்டா கரோட்டின், இரும்பு, வைட்டமின் சி, தாது உப்புக்கள்; மாதுளையில், இரும்புச் சத்து; வாழையில், கார்போஹைட்ரேட்; கொய்யாவில், நார்ச்சத்து, வைட்டமின் சி என, எல்லா சத்துக்களும் இந்தப் பழக்கலவையில் அடங்கியிருக்கின்றன. உடலுக்கான அத்தனை சத்துக்களையும் அள்ளித்தரும். அனைவருக்கும் உகந்தது.

Offline MysteRy

திராட்சை தோசை



தேவையானவை:

இட்லி அரிசி - 500 கிராம், உளுந்து - 100 கிராம், தோசை மாவு - 250 கிராம், கறுப்புத் திராட்சை - 100 கிராம், எண்ணெய் - 50 மி.லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

இட்லி அரிசி, உளுந்தைத் தனித்தனியே ஊறவைத்து அரைத்து, உப்புச் சேர்த்து, ஒன்றாகக் கலக்கினால், தோசை மாவு ரெடி.  கறுப்புத் திராட்சையை அரைத்து, தோசை மாவுடன் கலந்து, தோசைக் கல்லில் பரவலாக ஊற்றி, இருபுறமும் சிறிது எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:

தோசைப் பிடிக்காத குழந்தைகளுக்கு மாதுளை ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், திராட்சை எனப் பலவித பழங்களை ஜூஸாக்கி, தோசைமாவுடன் கலந்து, தோசை தயாரித்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள்.

பலன்கள்:

கறுப்புத் திராட்சையில் வைட்டமின் சி, தாது உப்புக்கள் உள்ளன. திராட்சையை விதையுடன் சேர்ப்பதால், கொலஸ்ட்ராலைக் குறைக்கும். புதினா, தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

Offline MysteRy

மாதுளை உலர் திராட்சை லஸ்ஸி



தேவையானவை:

மாதுளம்பழ முத்துக்கள் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், உலர் திராட்சை - 20, தயிர் - 250 மி.லி.

செய்முறை:

மாதுளம்பழ முத்துக்களை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, ஜூஸாக்கி, உலர் திராட்சையைப் போட்டு அரைக்கவும். சர்க்கரை, தயிர் சேர்த்துக் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து, குடிக்கலாம்.

குறிப்பு:

குழந்தைகள், சிறுவர்களுக்கு வடிகட்டாமல் அப்படியே கொடுக்கலாம்.

பலன்கள்:

 சர்க்கரைக்குப் பதில், தேன் கலந்து குடிக்கலாம். சோர்வை நீக்கி எனர்ஜியைத் தரும் பானம். ரத்தசோகைக்கு மிகவும் நல்லது. இதிலும், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.  வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் இருப்பதால், கண், தோல், எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடலாம்.

Offline MysteRy

பலாச்சுளை போளி



தேவையானவை:

கொட்டை நீக்கிய பலாச்சுளை - 20, கோதுமை மாவு - 100 கிராம், பொடித்த வெல்லம் - 200 கிராம், கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கப், ஏலக்காய்த் தூள் - சிறிதளவு, நெய் - 50 மி.லி, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

கோதுமை மாவைச் சிறிது தண்ணீர், எண்ணெய் சேர்த்து, கெட்டியாகப் பிசையவும்.  கடலைப் பருப்பை லேசாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து, தேங்காய் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.  பலாச்சுளைகளை வேகவைத்து, தேங்காய்ச் சேர்த்து அரைக்கவும். வெல்லத்தைக் கரைத்து, லேசாகக் கொதிக்கவிட்டு வடிகட்டி,  அரைத்த தேங்காய்ப் பருப்புடன் சேர்த்து, கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த் தூள் சேர்த்து, பூரணமாக உருட்டிக்கொள்ளவும். பிசைந்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். இலையில் சிறிது நெய் தடவி, உருண்டைகளை அப்பள வடிவில் இட்டு, நடுவில் பூரணத்தை வைத்து மூடி, போளியாகத் தட்டி, தோசைக் கல்லில் போட்டு, மிதமான தீயில், இருபுறமும் நெய் தடவி, வாட்டிஎடுக்கவும்.

குறிப்பு:

இதேபோல், நெல்லிக்காய், அன்னாசி சேர்த்தும் போளி தயாரிக்கலாம்.

பலன்கள்:

பலாச்சுளையில் வைட்டமின் சி, தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், நல்ல எனர்ஜியைத் தரும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

Offline MysteRy

அத்திப்பழ அல்வா



தேவையானவை:

உலர் அத்திப்பழம் - 20, நெய் - 100 மி.லி, ஏலக்காய்த் தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு - 10,  பனை வெல்லம்  - 100 கிராம்.

செய்முறை:

 அத்திப்பழத்தை ஊறவைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பனை வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சி, பாகு ஓரளவு காய்ந்ததும், அரைத்த அத்திப்பழத்தையும் சேர்த்து நெய்விட்டு, மிதமான தீயில் கிளறவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:

அதிகக் கொழுப்பு உள்ளவர்கள், இதய நோயாளிகள் நெய் சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ளலாம்.

பலன்கள்:

அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.  வைட்டமின் சி, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் இருப்பதால், பார்வைத்திறனுக்கு மிகவும் நல்லது.  நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடியது. வயிற்றுவலி, மூல நோய் இருப்பவர்கள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது.