அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் ஆட்சியே திணறிக் கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஒருபக்கம் என்றால், அதைவிட முக்கியமான விஷயம், நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள் சத்துள்ளதாக, நமக்கு ஆரோக்கியத்தைத் தருவதாக இருக்கிறதா என்பதுதான்.
"உணவுப் பொருட்கள் சத்தில்லாமல் வெறும் சக்கையாக இருப்பதற்குக் காரணம், நமது பாரம்பரியமான இயற்கை முறை விவசாயத்தைப் பின்பற்றாமல், அதிக மகசூலுக்காக வேண்டி வீரிய விதைகளையும், "பயிர்களைப் பாதுகாக்கிறேன் பேர்வழி" என்று அவற்றிற்கு பூச்சி கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி, விளை நிலங்களை, விஷ நிலங்களாக்கி விட்டதுதான்..." என்கின்றனர் இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தும் நம்மாழ்வார் போன்ற வேளாண் விஞ்ஞானிகள்.
பாரம்பரியமான இயற்கை முறை விவசாயத்தில் விளைந்த பொருட்களை மக்களின் பயன்பாட்டிற்காக, கடந்த ஆறு வருடங்களாகச் சந்தைப்படுத்தி வருகிறார் திருப்போரூரைச் சேர்ந்த இயற்கை முறை விவசாயியான ரங்கநாதன். தற்போது சென்னை, தியாகராய நகரிலிருக்கும் ஹோட்டல் பெனின்சுலா வளாகத்தில் ஞாயிறு தோறும் இயற்கை பொருட்களுக்கான சந்தையை நடத்துகிறார். இவர், நம்மாழ்வாரின் "இந்தியா இயற்கை உழவர் இயக்கத்தின்" செயற்குழு உறுப்பினரும் ஆவார். இயற்கை முறை விவசாயத்தால் விளைந்த பொருட்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதால் விளையும் நன்மைகளைப் பற்றியும், அதைப் பயன்படுத்தாததால் விளையும் தீமைகளைப் பற்றியும் நம்மிடம் அவர் பேசியதிலிருந்து...
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கும், உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கும் என்ன காரணம்?
அரசாங்கம் விவசாயிகளுக்குத் தரும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நேரடியாக விவசாயிகளுக்கே அளிக்க வேண்டும். தற்போது அளிக்கப்படும் உதவிகள் எல்லாம், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஏஜென்ட்களுக்குமே போகிறது. டிராக்டருக்குத் தரும் மானியம் அதைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்திற்குப் போகிறது. ரூபாய் 2000-த்திற்குக் கிடைக்கும் ஒரு நிறுவனத்தின் உரம், மானியத்தில் கிடைக்கும்போது ஒரு விவசாயிக்கு அது ரூபாய் 3000-க்கே கிடைக்கிறது.
நம்மிடையே விளைச்சலுக்குப் பயன்படுத்தாத விளைநிலங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதில் சிறுதானியங்களைப் பயிரிடுவதற்கு அரசு வாய்ப்புகளை உருவாக்கலாம். விவசாயத்திற்கு கால்நடைகள் மிகவும் முக்கியம். அவற்றை அடிமாட்டுக்காக கேரளத்திற்கு கொண்டு செல்லப்படுவதை அரசு தடுக்கவேண்டும். பொதுமக்களுக்கும் தென்னம்பிள்ளைகள், வாழை மரங்கள் போன்றவற்றை வளர்ப்பதற்கு அரசு உதவ வேண்டும். இளைய தலைமுறை விவசாயிகளை அரசு ஊக்குவிக்க வேண்டும். காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளிலேயே நிறைய விளைச்சல் நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் இருக்கின்றன. இதற்கு நகர விரிவாக்கம் முதன்மையான காரணம்.
உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு வீரிய விதைகளைக் கொண்டு மகசூலை அதிகப்படுத்துவது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. விலை கொடுத்து வாங்கலாமா விஷத்தை?
சிறு தானியங்களை அதிகம் நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் கொண்டு வரவேண்டும். நெல், கோதுமை போன்றவற்றில் வீரிய விதை முயற்சியைச் செய்வது, முழுக்க முழுக்க ஆரோக்கியமில்லாத சமுதாயத்தை உருவாக்கும், வியாபார நோக்கமின்றி வேறில்லை!
உங்களின் ஞாயிறு சந்தையில் என்னென்ன பொருள்கள் விற்பனைக்கு இருக்கின்றன?
புழுங்கல், பச்சை, கைக்குத்தல் அரிசி, சீரக சம்பா, பொன்னி, மாப்பிள்ளை சம்பா, மடுமழுங்கி போன்ற அரிசி ரகங்கள், சிறு தானிய வகைகள், காய்கள், கனிகள், எண்ணெய் வகைகள் போன்றவை விற்பனைக்கு உள்ளன.
திறன் கூட்டப்பட்ட விதைகளைப் பயன்படுத்தி விளையும் பொருட்களால் என்ன கெடுதல்? இயற்கை முறை விவசாயத்தில் விளையும் பொருட்களால் என்ன நன்மை?
பெரிய பெரிய கத்தரிக்காய்கள், வழக்கத்தை விட மிக நீளமாக பளபளப்புடன் காட்சி தரும் வாழைப்பழங்கள், பூச்சிகள் தின்னாத கீரைகள், விதவிதமான நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் ஆப்பிள்கள், ரசாயனக் கரைசல்களில் முக்கி எடுக்கப்பட்டு விற்பனைக்கு வரும் திராட்சைக் கொத்துகள், கார்பைடைக் கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்... இவை எல்லாமே நமது நுட்பமான உடல் உறுப்புகளின் திறனை படிப்படியாக குறைக்கக் கூடியவைதான். இப்போதே நிறையப் பேர் நோய் எதிர்ப்புத் திறன் அறவே இல்லாமல் பெரிதும் துன்பப்படுகின்றனர்.
பூச்சி கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் பயன்படுத்தாத இயற்கையான விவசாய முறையில் விளையும் பொருட்களை உண்பதால், அஜீரணக் கோளாறுகள், வயிற்று உபாதைகள், படபடப்பு, வாயுத் தொல்லைகள், ரத்த அழுத்தம் ஆகியவை அறவே விலகுகின்றன. நோய் எதிர்ப்புத் திறன் நம் உடலில் அதிகரிக்கின்றது.
ஆறு வருடங்களுக்கு முன் என்னுடைய இடது காலை நிலத்தில் ஊன்றி நடக்க முடியவில்லை. புகழ்பெற்ற நரம்பு நிபுணர் ஒருவரை அணுகினேன். "அமினோ ஆசிட்" குறைபாடு எனக்கு இருப்பதால், காலில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார். அந்த நேரம்தான், நடிகை ஒருவருக்கு காலில் தவறாக ஆபரேஷன் செய்யப்பட்டதற்காக அவர் நீதிமன்றத்தை அணுகிய சம்பவம் நடந்தது. என்னுடைய நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி, ஸ்ரீபெரும்புதூர், மடுவங்கரையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்திவந்த ஆயுர்வேத மருத்துவமனையில் நான் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அதுவரை 40 சதவீதம் இயற்கை முறை விவசாயத்தில் விளைந்த பொருட்களை உண்டு வந்த நான், முழுவதுமாக இயற்கை முறை விவசாயத்தில் விளைந்த பொருட்களை மட்டுமே சாப்பிடத் தொடங்கினேன். இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களைப் பயன்படுத்துவதால் விளையும் நன்மைக்கு நானே சிறந்த உதாரணம்!
மக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இயற்கை முறை சாகுபடி தன்னிறைவு அடைந்துள்ளதா?
இந்திய அளவில் உத்ராஞ்சலுக்கு அடுத்தபடியாக இயற்கை முறை சாகுபடியில் முன்னணியில் இருக்கும் மாநிலம் தமிழகம்தான். இங்கு ஏறக்குறைய 20 ஆயிரம் விவசாயிகள், 30000 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறை சாகுபடி செய்கின்றனர். அதோடு, ஈரோடில் இயற்கை விவசாயிகளுக்கென "பசுமை அங்காடி" செயல்படுகிறது, கும்பகோணம், கோவை, ஊட்டி, திருச்சி, திருநெல்வேலி, சிவகங்கை... என தமிழ்நாடு முழுவதிலிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிலும் எங்களைப் போன்று விவசாயிகள் சாகுபடி செய்யும் பொருட்களை நாங்கள் பெறுவதற்கும், இங்கு விளையும் பொருட்களை அவர்களுக்கு அனுப்புவதற்கும் வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம். இதன்மூலம் கோதுமை, திராட்சை, மாதுளம் பழம், துவரம் பருப்பு, கடலை பருப்பு போன்றவற்றை மகாராஷ்டிராவிலிருந்து பெறுகிறோம். வரும்நாளில் இயற்கை முறை சாகுபடி விளை நிலங்களின் பரப்பு நிச்சயமாக அதிகரிக்கும்.