நமது பூமியின் உட்கருவில் உள்ள பந்து போன்ற திட இரும்பின் அளவு ஒரு கோளை விடப் பெரியது! இதைக் கேட்கும்போது யாராலும் நம்ப முடியாது, ஏனென்றால் ஒரு கோளின் உட்கருவிலுள்ள இரும்பு மட்டுமே எப்படி மற்றொரு கோளைவிட பெரியதாக இருக்க முடியும்? ஆனால், இது தான் உண்மை, நண்பர்களே! நமது பூமியின் உட்கருவில் உள்ள திட இரும்பு பந்தின் விட்டம் 1500 மைல்கள், இது புளூட்டோ கோளை விட பெரியது.
பூமியின் உட்புறம் மூன்று திட அடுக்குகள் மற்றும் ஒரு திரவ அடுக்கு என நான்கு அடுக்குகளால் ஆனது. இந்தத் திரவ அடுக்கு சூரியனின் மேற்பரப்பு அளவுக்கு வெப்பம் கொண்ட உருகிய நிலையிலுள்ள உலோகங்களால் ஆனது. மிகவும் உட்புறமாக அமைந்துள்ள அடுக்கு ராட்சத இரும்புப் பந்து ஆகும், இதன் அளவு மட்டும் 1500 மைல்கள் அதாவது 2400 கிலோமீட்டர்கள் இருக்கும்.
பூமியின் உட்கருவில் இருந்தாலும் அங்குள்ள அழுத்தம் மற்றும் இதனுடன் சேர்ந்துள்ள இதர உலோகங்களால் இது உருகாமல் உள்ளது. இந்த இரும்புப் பந்தில் நிக்கல், சல்ஃபர் மற்றும் இதரப் பொருட்களும் சேர்ந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் வெப்பநிலை 9,000-13,000 டிகிரி ஃபாரென்ஹீட் அதாவது 5,000-7,000 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இவ்வளவு வெப்பமான இரும்பு பந்து அதைவிட வெப்பம் குறைந்த திரவ இரும்பாலான மேலடுக்கினால் பாதுகாக்கப்படுகிறது. இந்த திரவ இரும்பின் வெப்பம் 7,200-9,000 டிகிரி ஃபாரென்ஹீட் அதாவது 4,000-5,000 டிகிரி செல்சியஸ். என்ன நண்பர்களே, ஆச்சரியமாக இருக்கின்றதா?