இந்த உலகில் எதையுமே நிச்சயமாக நடைபெறும் என்று கூறமுடியாது, இறப்பைத் தவிர. ஆனால் நீங்கள் இறந்த உடன் உங்கள் உடலை உறைய வைத்து, மருத்துவ அறிவியல் பன்மடங்கு வளர்ந்த பின்னர், அதாவது மருத்துவம் உங்கள் உடல் குறைபாடுகள் மற்றும் நோய்களைக் குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடித்த பின், உங்களை மீண்டும் இறப்பிலிருந்து எழுப்ப முடியும் என்றால் எப்படி இருக்கும்? ஆம், கிறியோனிக்ஸ் (Cryonics) இயக்கத்தின் அபிமானிகள் இந்தக் கோட்பாட்டைத் தான் நம்புகிறார்கள்!
கிறியோனிக்ஸ் என்பது கிரேக்கத் தழுவல் வார்த்தை. அது நவீன மருத்துவ முறைகளால் தீர்க்க இயலாத நோய்களால் பாதித்த மனிதர்கள் மற்றும் மிருகங்களை உறைந்த நிலையில், அதாவது குறைந்த வெப்பத்தில் பதப்படுத்தி எதிர் காலத்தில் மீள் இயங்கச் செய்யலாம் என்ற நம்பிக்கை முறையைக் குறிக்கும். மருத்துவம் மற்றும் சட்ட வரையறைகளால் இறந்தவர் என கருதப்படுபவர், தகவல் தேற்றத்தின் (Information theorem) படி சடலமாகக் கருதப்படமாட்டார். அவர்கள் உறைநிலையில் பதப்படுத்தப்பட்டால், ஒரு நாள் அதி நவீன தொழில்நுட்பத்தால் மீண்டும் எழுப்பப் படலாம் என இந்தத் தத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் 62 அறிவியலாளர்களைக் கொண்ட குழு நம்புகிறது.
2013 வரை, ஏறத்தாழ 270 மனிதர்களுக்கு உறைநிலைப் பதப்படுத்தல் செய்யப்பட்டுள்ளது. ஆச்சரியமாக இல்லையா நண்பர்களே?