மனமே நீ ஒரு
அதிசய பிறவி
கடிவாளம் இல்லாத
காட்டுப் புரவி
உன்னால் நான் கட்டிய
மனக் கோட்டைகள் எத்தனை
என் அந்தப்புரத்தில்
எத்தனை அழகிகள்
உறங்கும் போது
விழித்திருப்பதும்
விழித்துக் கொண்டே உறங்குவதும்
நீ மட்டும் தானே
என் உடலில்
பலமில்லாவிட்டாலும்
உன்னால் எத்தனை எதிரிகளை
வெட்டி வீழ்த்தி இருப்பேன்
வெளியே ஒன்று பேசிக்கொண்டு
உள்ளே ஒன்று நினைக்கவும்
உன்னால் மட்டுமே முடியும்
என் நண்பனும் நீயே
என் பகைவனும் நீயே
என்னை ஆள்பவனும் நீயே
என்னை ஆட்டி வைப்பவனும் நீயே
என்னை ஆனந்தக் கடலில்
மிதக்க வைப்பவனும் நீயே
துன்பக் கடலில் மூள்கடிப்பவனும் நீயே
என்னை நானே
உரசிப் பார்க்கும்
உரைகல்லும் நீயே