வீழ்வது வெட்கமில்லை
வீழ்ந்து கிடப்பது தான்..........
எழுந்து நின்று
எம்பிக் குதிப்பவனால் தான்
வீழ முடியும்
காலம் பூராவும்
காலை நீட்டி
படுத்துக் கிடப்பவன்
வீழ்வதில்லை
சரித்திரம்
வீரர்கள் புகழ் பாடும்
வெற்றி பெறாவிட்டாலும் கூட
கயத்தாற்றில் கட்டபொம்மன்
தூக்கிலே தொங்கினாலும் கூட
சரித்திரத்தில் முதல் பக்கம்
கட்டபொம்மனுக்குத் தான்
ஜாக்சனுக்கில்லை
வாட்டர்லூ யுத்தத்தில்
வாளுடைந்து போனாலும்
நெப்போலியன் நெப்போலியன் தான்
சுட்டெரிக்கும் சூரியன் கூட
மாலையில் மறைவது
மீண்டும் எழுவதட்குத்தான்
நீ உயரப் பறக்கும்
பட்டம் பூச்சி
காற்றுக்குப் பயந்து
கதிகலங்காதே
உயிரில் உணர்ச்சி இருக்கும் வரை
பற
வானம் உனது வசமாகும்