இசையைக் கேட்டால் பூக்கள் வேகமாகப் பூக்கும். என்ன நம்ப முடியவில்லையா? இது உண்மை தான், நீங்களே முயற்சித்துப் பாருங்கள்! செடிகளிடம் இசையை வாசிப்பதால் அவற்றிற்குப் பலன் உள்ளதா என்பதைப் பற்றி விதம் விதமான கருத்துகள் நிலவி வந்தன. ஆனால், நமது பேச்சை மற்றும் இசையைக் கேட்பதன் பலனை, தங்களுடைய வளர்ச்சியில் காட்டிச் செடிகள் நடந்து கொள்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்து விட்டன. 1848ம் ஆண்டு ஜெர்மனியில் பேராசியராக இருந்த குஸ்டாவ் ஃபெக்னர் (Gustav Fechner) என்பவர் எழுதிய Soul-Life of Plants என்ற நூலில் உரையாடல்களால் செடிகள் பலனடைகின்றன என்று எழுதிய போது, இந்த விஷயம் ஆரம்பித்தது. அப்பொழுதிலிருந்தே, இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற நூல்கள் வெளியிடப்பட்டு பல்வேறான ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தன.
பேத்தோவனின் (Beethoven) இசையை வயல்வெளிகளில் இசைத்துப் பார்த்த கொரிய அறிவியல் ஆய்வாளர்கள், இந்த ஆய்வின் மூலம் தாவரங்களில் உள்ள கேட்கும் மரபணுக்களைக் (genes) கண்டறிந்தார்கள். சில குறிப்பிட்ட அலைவரிசைகளில் மரபணுக்கள் இசையை அறிந்து கொள்ளவும், தூண்டப்படவும் செய்கின்றன என்கிறார்கள். இவ்வாறு பூ பூப்பதில் இருந்து, வளர்வது வரை எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். சரி அப்படி என்றால் எந்த வகையான இசை பூக்களுக்கு மிகவும் ஏற்றது என்று தெரியுமா? விஞ்ஞானிகளின் கருத்துப் படி மேல்நாட்டுச் செந்நெறி இசை (classical music), மென்மையான இசையான ஜாஸ், ரிதம் அண்ட் புளூஸ் (R&B) போன்ற இசை இருந்தாலே போதுமாம்!
என்னைப் பொறுத்தவரை, நாம் மேல்நாட்டு இசை ஒன்றையும் தேடிப் போகத் தேவையில்லை! தமிழர்களின் இசையில் கூட பூக்கள் நிச்சயமாக வளரக்கூடும். நாம் இதைச் செய்து பார்ப்போம்: மதராசபட்டினம் படத்தில் வரும் „பூக்கள் பூக்கும் தருணம்“ என்ற பாடலுடன் முயற்சித்துப் பார்ப்போமா?