வாழ்க்கைப் படகு
தலைகீழாய்
புரளப் போவதறியாமல்
கைவீசி களித்திருந்த நாட்கள்
பறிபோனது…
கண்ணீர் தானிப்போ
எங்கள் வாழ்க்கையானது
வலிகள் தாங்கி
எங்கள் துயர்கள் பகிர்ந்திட
எந்தத் தோள்களும் இல்லை
ஆறுதல் கூற இங்கு-யாருக்கும்
வார்த்தைகளேனும் வருவதில்லை
நறுமணமாய் வந்து மோதும்
முன்னைய ஞாபகங்களும்
நிகழ்கால வலிகளின்
முனகல்களுமே
எங்கள் வாழ்க்கையாய் ஆனது!
முகாரி ராகம் கொண்டு பாடமுடியாது
எம் வலியின் உணர்வுகள்...
உறைபனியின் முகடுகளிலும் கரையாது
எரியும் வலியின் தணல்கள்..
முக்காடு போட்டு
மறைத்தாலும் - எரிமலைக்குழம்பாய்
பொத்துக் கொண்டு வெளிவருகின்றது
சப்தமின்றி மனதுக்குள்
சத்தியங்கள் செய்திட்ட போதிலும்
கடந்து வந்த பாதையை
மறந்திடத் தயங்கிடும் மனது...
வருங்கால விடியல்
எதுவென்று அறியாமல்
இருளைக் கண்டு
விசமம் செய்கின்றன விழிகள்!
இமையோரம் எட்டிப் பார்க்கும்
உவர் நீரின் துணை கொண்டு
உள்ளேயிருந்து ஒரு மூச்சை
துள்ளி வருகின்றது பெருமூச்சாய்..
இறக்கை பிய்த்து எறியப்பட்ட
மலர் தேடும் பட்டாம்பூச்சியாய்..
தத்தித் திரியும் தும்பி
துண்டுகளாக்கப்பட்டதாய்
கணம் தோறும் கூடும்...
மனதின் கனமான வலி!
எதை இழந்த போதிலும்
நம்பிக்கை ஒன்றையே
நம்பி காத்திருக்கிறேன்..
நாளைய விடியலை நோக்கி..