Author Topic: ~ குட்டி... சுட்டி சூப்பர் ரெசிப்பி! ~  (Read 1609 times)

Offline MysteRy

மேத்தி ரொட்டி



தேவையானவை:
 கோதுமை மாவு - 100 கிராம், மேத்தி/ வெந்தயக் கீரை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, சீரகத்தூள் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
மேத்தி கீரையை தண்டிலிருந்து உருவி, கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். கோதுமை மாவுடன், கீரை, உப்பு, சீரகத்தூள் கலந்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். தோசைக்கல்லில் நெய்/எண்ணெய் விட்டு பொன்னிறமாக வார்க்கவும்.

பலன்கள்:
வெந்தயக் கீரை வளரும் பருவத்தினருக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம் இதயக் கொதிப்பை சமன் செய்யும். செரிமானத்தை எளிதாக்கும். உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். கல்லீரல் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், பசியின்மைக்கு சிறந்த மருந்து.

Offline MysteRy

முருங்கைக்கீரை பொடி சாதம்



தேவையானவை:
 முருங்கைக்கீரை - தேவையான அளவு, எள்ளு, சீரகம் - தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
முருங்கைக்கீரையை உருவி 4-5 நாட்கள் நிழலில் உலர்த்திக்கொள்ளவும். கடாயில் எள்ளு, சீரகம், காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து உப்பு, கீரை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். தேவைப்படும்போது தாளித்துக் கொட்டி, வடித்த சாதத்துடன் நெய்விட்டு கிளறிச் சாப்பிடலாம்.

குறிப்பு:
விருப்பப்பட்டால், வேர்க்கடலைப் பொடி சேர்த்துக்கொள்ளலாம்.

பலன்கள்:
பசியைத் தூண்டும். வயிற்றுப் புண்ணுக்கு சிறந்த மருந்து. ரத்தத்தை சுத்திகரிக்கும். கழிவுகளை வெளியேற்றும். இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. கண் பார்வை மற்றும் கேசத்தைப் பராமரிக்கும். உடல் வெப்பத்தை சீராக்கும்.

Offline MysteRy

பயறு கிச்சடி



தேவையானவை:
பாசிப்பயறு - 50 கிராம் (இரண்டாக உடைத்தது), பச்சரிசி - 100 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கிராம்பு - 2, இஞ்சி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - தேவையான அளவு, மஞ்சள்தூள் - சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
குக்கரில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், கிராம்பு போட்டு லேசாக பொரித்துப் இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில், கறிவேப்பிலை, 3 பங்கு தண்ணீர் வைத்து அரிசி, பயறு இரண்டையும் களைந்துபோட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குக்கரில்வைத்து 2 விசில் வந்ததும் இறக்கி, 'கடி’யுடன் பரிமாறவும்.

கடி தயாரிக்கும் முறை:
100 கிராம் கடலை மாவை, 250 மில்லி தயிரில் கலந்து சிறிது தண்ணீர் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம், பட்டை, கிராம்பு, மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் போட்டு வதக்கி, கரைத்துவைத்துள்ள கரைசலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் உப்பு போட்டு 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

பலன்கள்:
இரும்பு, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு.

Offline MysteRy

பலாப்பழ பிரியாணி



தேவையானவை:
அரிசி -100 கிராம், பலாப்பழ சுளை - 5 (இனிப்பானது, கொட்டை நீக்கியது) தக்காளி - 2, புதினா இலைகள் - ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை, பச்சை கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, தயிர் - 100 மில்லி, மஞ்சள்தூள், கரம் மசாலாதூள் - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சை சாறு -  5 டீஸ்பூன், இஞ்சி விழுது - 2 டீஸ்பூன், முந்திரி, திராட்சை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, நெய்/வெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
முதலில் அரிசியை நன்றாகக் களைந்து அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு குக்கரில் நெய் அல்லது எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பிரியாணி இலை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலா தூளையும் சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை நன்றாக வதக்கவும். இதில் ஊறவைத்த அரிசியையும் சேர்த்து வதக்கவும். அரிசியில் இந்த மசாலா சேரும்போது, உணவின் சுவை கூடும். கடைசியாக பலாச்சுளைகள் உடையாமல் கிளறவும். தயிரை, முந்திரி, உலர்ந்த திராட்சைகளை சேர்க்கவும். ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரை வைத்து, 2 விசில் வந்ததும் இறக்கவும். குறிப்பு: இதே முறையில் 'பைனாப்பிள்’ சேர்த்தும் செய்யலாம். 

பலன்கள்:
பலாப்பழத்தில் ஃப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் இருப்பதால் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும். இதில் உள்ள வைட்டமின் சி சளி ஏற்படாமல் தடுத்து, எதிர்ப்பு சக்தி தருகிறது. வைட்டமின் ஏ நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது.

Offline MysteRy

கீரை மசித்த சாதம்



தேவையானவை:
பொன்னாங்கன்னிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, காசினிக் கீரை, மணத்தக்காளிக் கீரை - இதில் ஏதேனும் ஒன்று, பாசிப்பயறு - 100 கிராம் (கீரை, பருப்பை தனித்தனியே குழைய வேகவைக்கவும்), சீரகத்தூள், கடுகு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் உப்பு, மஞ்சள்தூள், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள், சீரகத்தூள், வேக வைத்த பாசிப்பயறு மற்றும் கீரையுடன் தேங்காய் துருவல்,  உப்பு சேர்த்து, குழைத்து வடித்த சாதத்துடன் பரிமாறவும்.

பலன்கள்:
கால்சியம், இரும்புச் சத்து அதிகம். சாப்பிட்ட திருப்தி இருக்கும்.  வயிறு நிறையும்.  குழந்தைகள் ஓடி விளையாடுவதற்கான எனர்ஜியைக் கொடுக்கும்.

Offline MysteRy

ஃப்ரெஷ் புதினா ரைஸ்



தேவையானவை:
புதினா, பச்சைக் கொத்தமல்லி - தலா கைப்பிடி, பச்சைமிளகாய் - 3 முதல் 4, அரிசி - 250 கிராம், உப்பு - தேவையான அளவு, சீரகம், சோம்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய் - 25 மில்லி, தாளிப்பதற்கு: பெரிய வெங்காயம் - 1, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, புதினா, கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய், சீரகம், சோம்பு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி விழுதாக அரைக்கவும்.  கடாயில் நெய், எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அரைத்துவைத்துள்ள புதினா கொத்தமல்லி விழுது, கழுவிவைத்துள்ள அரிசியையும் சேர்த்து, பிரஷர் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும். பிறகு இறக்கி, நெய் சேர்த்து உதிரியாகக் கிளறவும்.

பலன்கள்:
புதினா, பசியைத் தூண்டும். எளிதில் ஜீரணமாகும். புதினா - கொத்தமல்லியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், ரத்த சோகை வராமல் தடுக்கும்.  நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். கொத்தமல்லியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Offline MysteRy

வரகரிசி தயிர் சாதம்



தேவையானவை:
வரகு - 100 கிராம், தயிர் - 200 மில்லி, பால் - 50 மில்லி, தண்ணீர் - வரகு அளவைவிட 2 மடங்கு, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, வெள்ளரிக்காய், கேரட், மாதுளை முத்து, மாங்காய், அன்னாசித் துண்டுகள், பச்சைமிளகாய், திராட்சை - தலா 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:
கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெள்ளை உளுந்து.

செய்முறை:
வரகை நன்றாகக் கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்க வேண்டியப் பொருட்களைப் போட்டுத் தாளித்ததும், அடுப்பை அணைக்கவும். இவற்றில் காய்கறிகள், பழங்கள் சேர்த்து சமைத்த வரகுடன், பால், தயிர், வெண்ணெய் சேர்த்து நன்றாக மசித்துக் கிளறவும்.

குறிப்பு:
இதே முறையில் அரிசியிலும் சமைக்கலாம்.

பலன்கள்:
பால் மற்றும் தயிரில் அதிக கால்சியம் சத்தும், தயிர் எளிதில் ஜீரணமாகவும் உதவுகிறது. காய்கறிகள், பழங்கள் சேர்ப்பதினால், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் எளிதில் கிடைக்கும். அரிசிக்குப் பதிலாக சிறுதானிய வரகைப் பயன்படுத்துவதால், ஊட்டச்சத்து மிகுந்து இருக்கும். வரகில் மக்னீசியம், நார்ச்சத்து, கால்சியம், பி வைட்டமின்கள் நிறைந்து இருப்பதால், உடலின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்கிறது.

Offline MysteRy

மசாலா சப்பாத்தி



தேவையானவை:
சப்பாத்தி, தக்காளி - தலா 2, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, பச்சை கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு - சிட்டிகை, கடுகு, கடலைப்பருப்பு, சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
சப்பாத்தியை மெல்லியதாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து தக்காளி சேர்த்து வதங்கியதும், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெட்டி வைத்த சப்பாத்தியை சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை மேலாகத் தூவிக் கிளறி இறக்கவும்.

பலன்கள்:
புரதம், நார்ச்சத்து,பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் இதில் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.   

Offline MysteRy

ரைஸ் வித் மஷ்ரூம்



தேவையானவை:
பாசுமதி அரிசி, மஷ்ரூம் - தலா 100 கிராம், வெங்காயம் - 50 கிராம், பூண்டு - 2 பல், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன், எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை நன்றாகக் கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும். வெங்காயம், மஷ்ரூம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி மஷ்ரூம் என ஒன்றன் பின் ஒன்றாக பொன்னிறமாக வதக்கவும். உப்பு சேர்த்து அரிசியுடன் தண்ணீர் சேர்த்து உதிரியாக இருக்கும்படி நன்கு வேக வைக்கவும்.

பலன்கள்:
மஷ்ரூம், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.  வைட்டமின் பி6, தாமிரம், துத்தநாகம் சத்து இதில் அதிகம். தேவையான தாது உப்புகளும், நீர்ச்சத்தும் நிறைந்தது. ஆன்டிஆக்சிடன்ட், வைட்டமின் இ இருப்பதால், நோய்களை எதிர்த்து, செல்களைப் பாதுகாக்கிறது. மஷ்ரூமில், தாமிரம் அதிகம் உள்ளதால், இதயத் தசைகளைப் பாதுகாக்கிறது.

Offline MysteRy

டிப்ஸ்:



பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்கவும். பிளாஸ்டிக்கில், சூடான சாதத்தை  வைக்கும்போது, அதில் உள்ள டைஆக்சின் என்ற வேதிப்பொருளுடன் சேர்ந்து நோய்களுக்கு வழி வகுத்துவிடும்.  மேலும், தொடர்ந்து இதுபோல் கொடுக்கும்போது புற்றுநோய் வரவும் வாய்ப்புகள் உண்டு. 
 
11 மணிக்கு சாப்பிட நட்ஸ், முளைகட்டிய தானியங்கள், பழங்களைக் கொடுக்கலாம்.
 
அதிகக் கெடுதலை ஏற்படும் ஜங்க் புட்ஸ் கொடுத்து அனுப்பாதீர்கள்.  உடலை மந்தமாக்கி, சோர்வை உண்டுபண்ணும்.
 
தினமும் ஒரே மாதிரியான உணவு, சாப்பிடும் எண்ணத்தைப் போக்கிவிடும். எனவே, குழந்தைகள் விரும்பி, பிடித்து சாப்பிடும் உணவு வகைகளாக கொடுங்கள்.
 
அதிக அளவு புரதம் நிறைந்த உணவாக இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள்.  அன்றாட செயல்பாட்டுக்கு எனர்ஜியை அள்ளித் தரும்.
 
இரண்டு விதக் காய்கறிகள், மூன்று விதப் பழங்கள், கீரை, பருப்பு, தானியங்கள் என அன்றாட உணவில் அனைத்தும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.