70 ஆண்டு கால அம்பாசிடர் சகாப்தம் முடிந்தது

இந்திய சாலைகளில் கடந்த 70 ஆண்டுகளாக கம்பீரமாக வலம் வந்த அம்பாசிடர் கார் தனது பயணத்தை முடித்துக் கொண்டது. அந்த காலத்தில் கார் என்றால் அது பணக்காரர்களின் அடையாளமாகவே இருந்தது. அதுவும், வெளிநாட்டு கார் என்றால் அவர்களின் அந்தஸ்து இன்னும் ஒருபடி மேலே இருக்கும். இந்த சூழ்நிலையில் தான் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றான, அம்பாசிடர் கார் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய சாலைகளில் தவழ தொடங்கியது. இந்நிலையில், கடந்த 1983ம் ஆண்டு, மாருதி&800 கார் அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறிய வடிவமைப்பில், மிக கச்சிதமாக இருந்த மாருதி கார் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து கார் சந்தையில் தனக்கு என்று இடத்தையும் மாருதி தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையிலும், அரசியல்வாதிகள், பிரதமர், மத்திய&மாநில அமைச்சர்கள், கவர்னர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் அம்பாசிடர் காரில் வலம் வந்து கொண்டுதான் இருந்தனர்.இந்நிலையில், காலமாற்றத்தினாலும், வேகமான பொருளாதார வளர்ச்சியினால், பிஎம்டபுள்யூ, பென்ஸ், போர்டு போன்ற வெளிநாட்டு கார்கள் அதிகளவில் வரத்தொடங்கியது. தற்போது விதமான, விதமான கார்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ள நிலையில், மிக பழமையான அம்பாசிடர் காரின் மவுசு மெல்ல, மெல்ல குறைந்துவிட்டது. இன்னொரு பக்கம், அரசாங்க கார் என்ற பட்டப்பெயருடன் செல்ல பிள்ளையாக இருந்த அம்பாசிடர் காரை பல மாநில அரசுகளும் தற்போது கைவிட்டுவிட்டு சொகுசுகார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் அம்பாசிடர் கார் உற்பத்தி நேற்று முன் தினமும் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தி அம்பாசிடர் கார் பிரியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், உத்தரபார பகுதியிலுள்ள ஆலையில் இருந்துதான் அம்பாசிடர் கார் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த கார் விற்பனையை மேம்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததாலும், பல்வேறு காரணங்களாலும் வேறு வழியில்லாமல் இந்த கார் ஆலையின் பணி மே.24 முதல் நிறுத்தப்படுகிறது என்று சிகே பிர்லா குரூப் கம்பெனி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.