Author Topic: ~ எட்வர்டு ஜென்னர் அறிவியல் அறிஞர்கள் பற்றி அறிவோம்:- ~  (Read 745 times)

Offline MysteRy

எட்வர்டு ஜென்னர் அறிவியல் அறிஞர்கள் பற்றி அறிவோம்:-




ஆயிரத்து எண்ணூறு வரை பெரியம்மை நோய் ஒரு கொடிய உயிர் கொல்லி நோயாகவும், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்து வந்தது. முகம், கை, கால்களில் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அருவருப்பான தழும்புகளைப் பெற்றிருந்தனர். கண்களில் இந்நோய் வந்தால் பார்வை பறி போய்விடும் நிலையும் இருந்தது.

எட்வர்டு ஜென்னர் கி.பி. 1800 இறுதியில் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பெரும்பான்மை மக்கள் இந்நோய்க்கு ஆளாகி வந்தனர்.

எட்வர்டு ஜென்னர் 1749 - ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள பெர்க்கிலி என்ற நகரில் பிறந்தார். மருத்துவப் பயிற்சி முடித்த இவர் தனது ஊரிலேயே தொழில் செய்து வந்தார்.

பெரியம்மை நோயைக் குணப்படுத்த ஜென்னர் இருபது ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதன் மூலம் ஏற்கனவே இந்நோய் ஏற்பட்டு பிழைத்தவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதையும், மீண்டும் இந்நோய் அவர்களைத் தாக்குவது இல்லை என்பதையும் கண்டறிந்தார்.

1796 - ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் ஜென்னர் அவர்களின் வீட்டிற்குப் பால் கொண்டு வரும் சாரா நீல்ஸ் என்கிற பெண்மணி தனது கையில் மாடுகளுக்கு ஏற்படும் அம்மை நோய் லேசாகத் தாக்கியிருப்பதைக் காட்டி இனி தனக்கு பெரியம்மை ஏற்படாது என்று திட்டவட்டமாகக் கூறினார். இது, அக்கால மக்கள் அனுபவப்பூர்வமாகக் கண்டறிந்த உண்மை.

இக்கூற்று ஜென்னரை சிந்திக்க வைத்தது. எனவே மாடுகளுக்கு ஏற்பட்டிருந்த அம்மை நோய் கட்டியிலிருந்து அந்நோய் திரவத்தைப் பிரித்தெடுத்த அவர் அதனை ஜேம்ஸ் பிலிப்ஸ் என்கிற 8 வயது சிறுவனின் கையில் லேசான சிராய்ப்பு ஏற்படுத்தி அதன் வழி உள்ளே செலுத்தினார். அவனுக்கு கோவசூரி என்னும் அம்மை நோய் ஏற்பட்டது. ஆனால், விரைவில் குணமடைந்தான். தொடர்ந்து அவனது உடலில் பெரியம்மை நோய் திரவத்தைச் செலுத்தினார். அவர் எதிர்பார்த்தது போலவே அவனுக்கு பெரியம்மை நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்பட்டிருந்தது. இதுவே அம்மை குத்துதலாக உருவானது. இவர் தான் கண்டுபிடித்த அம்மை குத்துதலை எவ்வித பயனையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு இலவசமாகவே செய்து வந்தார்.

இவரது சேவையை பாராட்டிய பிரிட்டிஷ் அரசாங்கம் 1802 - ஆம் ஆண்டு10,000 டாலர் பரிசும், மீண்டும் இரண்டு ஆண்டு கழித்து 20,000 டாலர் பரிசும் வழங்கி கௌரவித்தது.

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததன் வாயிலாக மக்களுக்கு அளப்பரிய தொண்டு புரிந்த எட்வர்டு ஜென்னர் 1823 - ஆம் ஆண்டு ஜனவரி 26 - ஆம் தேதி தான் பிறந்த ஊரான பெரிகிலியில் தனது 73 - வது வயதில் மரணமடைந்தார்.
« Last Edit: June 12, 2014, 07:34:33 PM by MysteRy »