Author Topic: பதிவுகள்  (Read 1167 times)

Offline Maran

பதிவுகள்
« on: April 21, 2014, 11:31:44 AM »
இந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது

சார்லி சாப்ளின்


 மன்னித்துக்கொள்ளுங்கள், நான் ஒரு பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலையும் அல்ல. நான் யாரையும் ஆளவோ வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை. முடிந்தால், அனைவருக்கும் உதவி செய்யவே விரும்புகிறேன்.

யூதர்கள், யூதரல்லாதவர்கள், கருப்பினத்தவர், வெள்ளையினத்தவர் என்று அனைவருக்கும் உதவவே விரும்புகிறேன். நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை.

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது. நம்முடைய நல்ல பூமி வளம் மிக்கது, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடியது.

தொலைத்துவிட்ட பாதை

வாழ்க்கைப் பாதை என்பது சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் இருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை நாம் தொலைத்துவிட்டோம். மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசை விஷத்தைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பால் இந்த உலகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் நம்மைத் தள்ளிவிட்டது. வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம்.

ஆனால், நாம் நமக்குள்ளே முடங்கிப்போயிருக்கிறோம். ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது. மிதமிஞ்சி சிந்திக்கிறோம், மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே.

புத்திசாலித்தனத்தைவிட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே. இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும். அப்புறம் நமது கதை அவ்வளவுதான்.

கண்டுபிடிப்புகளின் அடிப்படை

விமானமும் வானொலியும் நம் அனைவரையும் மிகவும் நெருங்கி வரச் செய்திருக்கின்றன. மனிதர்களின் நற்குணத்தையும், உலகளாவிய சகோதரத்துவத்தையும், அனைவரது ஒற்றுமையையும் வலியுறுத்துவதுதான் இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படை இயல்பே.

இந்த உலகில் உள்ள கோடிக் கணக்கானவர்களை என் குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது. நம்பிக்கையை இழந்த ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் என்று கோடிக் கணக்கான மக்களைச் சென்றடைகிறது. அதாவது, அப்பாவி மக்களை சக மனிதர்களே கொடுமைப்படுத்துவதும் சிறைப்படுத்துவதுமான ஒரு சித்தாந்தத்தின் பலிகடாக்களை எனது குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது.

சுதந்திரம் ஒருபோதும் அழியாது

நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லுகிறேன்- நம்பிக்கை இழக்காதீர்கள். நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறொன்றுமில்லை, பேராசையின் விளைவுதான் அது. மனித முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களின் கசப்புணர்வுதான் அது. மனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள், மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும்வரை, சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது.

நீங்கள் இயந்திரங்கள் அல்ல

போர்வீரர்களே, கொடூரர்களிடம் உங்களை ஒப்படைக் காதீர்கள். அவர்கள் உங்களை வெறுப்பவர்கள், உங்களை அடிமைப்படுத்துபவர்கள், உங்கள் வாழ்க்கையைக் கடுமையாகக் கட்டுப்படுத்தக்கூடியவர்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன நினைக்க வேண்டும், எதை உணர வேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள்! உங்களைப் பழக்குவார்கள், உங்களைக் குறைவாக உண்ண வைப்பார்கள், கால்நடைகளைப் போலவே உங்களை நடத்துவார்கள்.

உங்களைப் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாக்குவார்கள். மனித இயல்பற்ற அவர்களுக்கு அடிபணிந்துவிடாதீர்கள். இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள் தான் அவர்கள். நீங்களெல்லாம் இயந்திரங்கள் அல்ல, நீங்களெல்லாம் கால்நடைகள் அல்ல, நீங்கள் மனிதர் கள்! மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் - நேசிக்கப் படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள்! போர்வீரர்களே, அடிமைத்தனத்துக்காகப் போரிடாதீர்கள்! சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்!

கடவுளின் சாம்ராஜ்யம்

17-வது அதிகாரத்திலே புனித லூக்கா சொல்லியிருக்கிறார்: “கடவுளின் சாம்ராஜ்யம் மனிதனுக்குள்தான் இருக்கிறது.” ஒரு மனிதனுக்குள்ளோ, ஒரு குழுவுக் குள்ளோ என்பதல்ல இதன் அர்த்தம். எல்லா மனிதருக் குள்ளும் என்பதுதான் இதன் அர்த்தம்! உங்களுக் குள் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்! மக்களே, உங்களிடம்தான் இருக்கிறது சக்தி - இயந்திரங்களை உருவாக்குவதற்கான சக்தி.

மகிழ்ச்சியை உருவாக்கு வதற்கான சக்தி! இந்த வாழ்க்கையைச் சுதந்திரமான தாகவும் அழகானதாகவும் ஆக்குவதற்கான சக்தியும், இந்த வாழ்க்கையை அற்புதமான சாகசமாக்குவதற்கான சக்தியும் மக்களே உங்களிடம்தான் இருக்கின்றன.

புதியதோர் உலகைப் படைப்போம்!

அப்படியென்றால், ஜனநாயகத்தின் பெயரால், நாமெல்லோரும் அந்த சக்தியைப் பயன்படுத்துவோம், நாமெல்லோரும் ஒன்றுசேர்வோம். புதியதோர் உலகைப் படைப்பதற்காக நாமெல்லோரும் போராடுவோம். மனிதர்களுக்கு வேலை பார்ப்பதற்கான வாய்ப்பையும், இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு அரவணைப்பையும் தரக்கூடிய கண்ணியமான அந்தப் புதிய உலகத்துக்காகப் போராடுவோம்.

இதையெல்லாம் வாக்குறுதிகளாகக் கொடுத்துதான் கொடூ ரர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். அவர்கள் சொன்ன தெல்லாம் பொய்! அவர்கள் தங்களுடைய வாக்குறு திகளை நிறைவேற்றவில்லை, அவர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது!

சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்! அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் ஒருங்கிணைந்து போராட இதுவே தருணம்! நாடுகளுக்கிடையிலான பாகுபாடுகளைத் தகர்க்கவும், பேராசையையும் வெறுப் பையும் சகிப்பின்மையையும் குழிதோண்டிப் புதைக்கவும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம், புதிய உலகைப் படைக்க.

அறிவியலும் முன்னேற்றமும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதையே நோக்க மாகக்கொண்டிருக்கும் அந்த உலகத்துக்காக, பகுத்தறிவின் உலகத்துக்காக அனைவரும் போராடுவோம். வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால், அனைவரும் ஒன்றுசேர்வோம்!

(ஹிட்லரைப் பகடிசெய்து சார்லி சாப்ளின் 1940-ம் ஆண்டு உருவாக்கிய ‘த கிரேட் டிக்டேட்டர்' திரைப்படத்தின் இறுதியில் சாப்ளின் ஆற்றும் உரை.)


Offline Maran

Re: பதிவுகள்
« Reply #1 on: April 21, 2014, 11:44:52 AM »

Offline Maran

Re: பதிவுகள்
« Reply #2 on: April 21, 2014, 11:46:29 AM »

Offline Maran

Re: பதிவுகள்
« Reply #3 on: April 21, 2014, 11:50:08 AM »
பிரேசில் நாட்டில், இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்ட ஐம்பதாண்டு நிறைவை நினைவு கூரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பிரேசிலில், 1964 முதல் 1985 வரையிலான, 21 வருட இராணுவ ஆட்சிக் காலத்தில், ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் கைது செய்யப் பட்டு, சித்திரவதை செய்யப் பட்டனர். 400 பேரளவில் கொல்லப் பட்டனர், அல்லது காணாமல் போயுள்ளனர். இராணுவ சதிப்புரட்சி நடந்து ஐம்பதாண்டுகளுக்குப் பின்னரும், கொலைக் குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப் படவில்லை.

April 1, 1964 ம் ஆண்டு, பொதுத் தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இடதுசாரி ஜனாதிபதி Joao Goulart, இராணுவ சதிப்புரட்சி ஒன்றின் மூலம் பதவியில் இருந்து அகற்றப் பட்டார்.

அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கென்னடி, மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் சதிப்புரட்சியை ஆதரித்திருந்தன. "பிரேசிலில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது" என்ற காரணத்தைக் காட்டி, அவர்கள் ஒரு இராணுவ சர்வாதிகார அரசை, 1985 ம் ஆண்டு வரையில் ஆதரித்து வந்தனர்.



Offline Maran

Re: பதிவுகள்
« Reply #4 on: April 21, 2014, 11:52:57 AM »

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஹிட்லரின் உதவியுடன், ஜெர்மனியில் இந்திய வீரர்களைக் கொண்ட, இந்திய தேசிய இராணுவம் ஒன்றை அமைத்தார்.  வெளிநாட்டு தொண்டர் படைகளை நிர்வகிக்கும், நாஸிகளின் SS தலைமையின் கீழ் அது இயங்கியது. ஹிட்லரும், நாஸி அரசும், நேதாஜியின் வேண்டுகோளை ஏற்று, இந்திய விடுதலைப் படை அமைப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர். இருப்பினும், "இந்தியர்கள், வெள்ளை இனத்தவரை விட, அறிவிலும், ஆற்றலிலும் குறைந்தவர்கள்..." என்ற இனவாத மனப்பான்மை அவர்களின் மனதை விட்டு அகன்றிருக்கவில்லை. இந்திய துணைப் படை பற்றி, ஹிட்லர் தெரிவித்த கருத்து அதனை நிரூபிக்கின்றது.

"இந்திய துணைப் படை என்பது கேலிக்குரியது. ஒரு மூட்டைப் பூச்சியை கூட கொல்வதற்கு தைரியமற்ற இந்தியர்கள், ஒரு ஆங்கிலேயனை கொல்வார்கள் என்று நம்ப முடியாது. அவர்களை உண்மையான சண்டைக்கு அனுப்புவது நகைப்புக்குரியது." - ஹிட்லர்

இறுதிப் போரில், இந்திய துணைப் படையினர், பிரான்சில் நடந்த யுத்தத்தில், நாஸி இராணுவத்தோடு சேர்ந்து, நேச நாடுகளின் படைகளுக்கு எதிராக போராடியுள்ளனர். அந்த சண்டையில் சிலர் கொல்லப் பட்டனர். மிகுதிப் பேர் சரணடைந்தனர். பிரெஞ்சுப் படையினர்,  சரணடைந்த வீரர்கள் சிலரை சுட்டுக் கொன்றுள்ளனர். எஞ்சியோர் பிரிட்டிஷ் இராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டனர். பிரிட்டன் அவர்கள் மேல் தேசத் துரோகக் குற்றம் சுமத்தி தண்டித்தது.


(நன்றி:  Hitler's Renegades: Foreign Nationals in the Service of the Third Reich ) 

Offline Maran

Re: பதிவுகள்
« Reply #5 on: April 21, 2014, 12:04:52 PM »

ஒருகாலத்தில் நகரமயமாக்கலையும் சிறுதொழில் துறையையும் வளர்த்தெடுத்த மகாராஷ்டிரம், இன்றைக்கு நகர மயமாக்கலை ஊக்குவிக்கும் ஏனைய மாநிலங்களுக்கு ஒரு பாடம் என்பதுபோல இருக்கிறது. நாட்டின் மாபெரும் நகரமான மும்பையில் ஒருபுறம் அதன் அற்புதமான கட்டமைப்புக்கும் மறுபுறம் அது ஏழைகளுக்கு அளிக்கும் அசிங்கமான வாழ்க்கைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் தடயங்கள் ஏதும் தென்படவில்லை.

நவிமும்பை, புனே, நாக்பூர், நாசிக், ஔரங்காபாத், கோலாப்பூர், தானே, சோலாப்பூர், அமராவதி, சாங்லி நகரங்கள் யாவும் அடிப்படை வசதிகளை அளிக்கவே போராடுகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் கிராமப்புற வாழ்க்கையை மகாராஷ்டிர ஆட்சியாளர்கள் எவ்வளவு சீரழித்திருக்கிறார்கள் என்பதற்கு விதர்பா விவசாயிகள் ரத்த சாட்சியம் அளிக்கிறார்கள். நாட்டிலேயே ஏழ்மையான வாழ்க்கை நிலவும் மேற்கு இந்தியாவின் எல்லையோரமான விதர்பா பிரதேசம் சுமார் 11 மாவட்டங்களை உள்ளடக்கியது.

இந்திய விவசாயிகளின் தற்கொலைத் தலைநகரமாக அறியப்பட்ட இந்தப் பிராந்தியத்தில், இதுவரை கிட்டத்தட்ட 1.4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். “கடந்த மாதம்கூட 23 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள்” என்று தொடங்கினார் விவசாயியும் விதர்பா ஜன் அந்தோலன் சமிதியின் பிரதிநிதியுமான பாபு ராம்.

“மகாராஷ்டிரத்தின் மூன்றில் இரு பங்கு கனிம வளம் இங்கு இருக்கிறது. அரசாங்கம் அக்கறை காட்டியிருந்தால், இந்த வறண்ட பிரதேசத்தின் வறுமையைப் போக்கியிருக்க முடியும். ஆனால், அரசாங்கம் புறக்கணிக்கிறது... தொடர்ந்து புறக்கணிக்கிறது. மகாராஷ்டிர விவசாயிகளுக்குத் தண்ணீர் பெரிய பிரச்சினை. நியாயமாக நீராதாரங்களை உருவாக்குவதுதான் அரசியல்வாதிகளின் முதல் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், அவர்களைப் பொறுத்த அளவில் கொள்ளையடிப்பதற்கான துறை பாசனத் துறை.

ரூ. 70 ஆயிரம் கோடியைப் பாசனத்துக்கு என ஒதுக்கி 0.1% பாசன வசதியை மட்டுமே உருவாக்குபவர்களை நீங்கள் உலகில் எங்காவது பார்க்க முடியுமா? தண்ணீர் கேட்டுப் போராடும் மக்களுக்கு, ‘அணையில் நான் வேண்டுமானால் மூத்திரம் பெய்துவிடவா?’ என்று கேட்கும் அரசியல்வாதிகளை நீங்கள் எங்காவது பார்க்க முடியுமா? மகாராஷ்டிரத்தில்தான் பார்க்க முடியும். துணை முதல்வராக இருந்த அஜித் பவார் பொது மேடையில் அப்படிக் கேட்டார். பாசனத் திட்டங்களின் பெயரால் ரூ. 70 ஆயிரம் கோடியை அவர் காலிசெய்தார் என்பதைப் பின்னாளில் முதல்வரே சொன்னார். இவ்வளவு கொடூரமான வர்களை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது” என்கிறார் பாபு ராம்.

இன்னும் அதிரவைக்கின்றன ‘பிரயாஸ்’அமைப்பு சொல்லும் உண்மைகள். மகாராஷ்டிரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் 23 பாசனத் திட்டங்களின் கீழ் பெறப்பட்ட தண்ணீரில் 40% முதல் 80% வரை தொழிற்சாலைகளுக்குத் திருப்பிவிடப்பட்டதை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய அமைப்பு இது. “அரசின் கொள்கை, மொத்தம் உள்ள தண்ணீரில் 72% விவசாயத்துக்கும் 7% தொழிற்சாலைகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறது. நடப்பதோ தலைகீழ்” என்கின்றனர் இந்த அமைப்பினர்.

“இப்படி ஒருபுறம் எங்களை வஞ்சிக்கும் அரசாங்கம், மறுபுறம் பி.டி. பருத்தி சாகுபடி செய்யச் சொல்லி எங்களைப் பரிசோதனை எலிகளாக்கிக்கொண்டது. தண்ணீர் பாடு பெரும்பாடு. பத்துக் காசு வட்டிக்குக் கடன் வாங்கிதான் பருத்தி விவசாயத்தில் ஈடுபடுகிறோம். பத்தாண்டுகளில் உற்பத்திச் செலவு ஐந்து மடங்கு அதிகம் ஆகியிருக்கிறது. பருத்தி விலையோ முன்னைவிடவும் குறைந்திருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், விளைச்சலும் பொய்த்தால் ஒரு விவசாயிக்குத் தற்கொலையைத் தவிர என்ன வழி இருக்கிறது?” என்று கேட்கும் அம்பே தானூரா அடுத்துச் சொன்ன விஷயங்கள் மனசாட்சி உள்ள எவரையும் உலுக்கக் கூடியவை. “வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். எங்களுக்குப் பல நாள் இரவு உணவு வெறும் தண்ணீர்தான். பசியில் இருக்கும் பிள்ளைகளுக்குத் தண்ணீரை உணவாகக் கொடுப்பதைவிடவும் ஒரு கொடுமை உலகில் கிடையாது. இங்குள்ள விவசாயிகளில் பாதிப் பேர் அந்தக் கொடுமையைத்தான் தினமும் செய்கிறோம்.

சிறுநீரகத்தை விற்றால் கிடைக்கும் காசில் கொஞ்ச நாள் சாப்பிடலாம் என்பதால், பலர் சிறுநீரகத்தை விற்றார்கள். அப்படி விற்றவர்களில் ஒருவன்தான் நானும்” என்று அறுவைச் சிகிச்சை தழும்பைக் காட்டுகிறார். சிங்னபூர், டோர்லி, லெஹேகான் போன்ற கிராமங்களில் சர்வ சாதாரணமாக மும்பையின் பெரு மருத்துவமனைகளின் சிறுநீரக விற்பனைத் தரகர்களை அணுக முடிகிறது. “விதர்பா தனி மாநிலம் ஆக வேண்டும். அதுதான் இப்போதைக்கு ஒரே தீர்வு” - இதுதான் விதர்பா எங்கும் ஒலிக்கும் ஒரே குரல்.

நீண்ட காலத்துக்கு முன் தமிழகத்திலிருந்து நாக்பூரில் குடியேறிய காஷ்யபனிடம் பேசியபோது சொன்னார்: “தொழில் வளர்ச்சியினால் மட்டுமே நாட்டை வளப்படுத்திவிட முடியும் என்று நினைப்பவர்கள் ஒருமுறை மகாராஷ்டிரத்துக்கு - விதர்பாவுக்கு வந்து செல்ல வேண்டும். எப்படிப்பட்ட நரகமாக இந்த நாட்டை உருவாக்க விரும்புகிறோம் என்பது அவர்களுக்குப் புரிந்துவிடும்!”


Offline Maran

Re: பதிவுகள்
« Reply #6 on: April 21, 2014, 12:19:58 PM »
இராஜராஜ சோழன்




Offline Maran

Re: பதிவுகள்
« Reply #7 on: April 21, 2014, 12:23:57 PM »
பக்கோடா புராணம்


பக்கோடா என்பது ஏதோ ஒரு தின்பண்டமல்ல. மனிதன் கண்டு பிடித்த அமிர்தம் அது. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்பது  சொலவடை. மாங்காய் எல்லா நேரத்திலும் கிடைக்குமா என்ன? மனிதனின் தீனிக் கண்டுபிடிப்பில் ஆகச் சிறந்தது பக்கோடா.

பக்கோடாவில் முந்திரிப்பருப்பு பக்கோடா, வேர்க்கடலை பக்கோடா, பனீர் பக்கோடா, காலி ஃப்ளவர் பக்கோடா என்று பல இருந்தாலும் மேட்டுக்குடி மனிதரிலிருந்து டாஸ்மாக் குடிமகன் வரை காற்றில் மிதந்து வரும் வெங்காயப் பக்கோடா மணத்துக்கு வாயில் வெள்ளம் பொங்காத மனித ஜந்து எதுவுமே இருக்க முடியாது.

பக்கோடா என்ற ஒன்று கண்டு பிடிக்கப்படாமலிருந்தால் தானே சமைக்கிறேன் என்ற பெயரில் வைக்கும் கலர் தண்ணீர் சோற்றை பேச்சிலர்கள் தின்றிருக்க முடியுமா? அதற்குச் சற்றும் குறையாத தரத்தில் ஒரு குழம்பை வைத்துவிட்டு உருளைக்கிழங்கு ஃப்ரை உங்களுக்கு பிடிக்கும்னு செஞ்சனா. அப்பதான் ஃபோன் பண்ணீங்களா? லைட்டா தீஞ்சிடுச்சுங்க என்று 7வது டிகிரி பர்ன் என்ற அளவுக்கு நிலக்கரி பொரியலிலிருந்து கொலைக்கேசில் தப்புவித்து தம்பதியரைக் காப்பாற்றும் சமய சஞ்சீவியல்லவா அது?

ஏசி ரூமில் உட்கார்ந்து அள்ளிச்சாப்பிட்டால் ஏற்படக்கூடிய பின் விளைவுக்கு பயந்து கொரிப்பது முந்திரிப் பக்கோடாவாக இருக்கலாம். ஆனால் அது முழுமையான பக்கோடா ஆக முடியாது. தனியாகச் சாப்பிட்டாலும் பக்கோடாவாகச் சாப்பிட்டாலும் கடைசி கடலை சொத்தையாகவே அமைவது ஏன் என்பது எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்கப்படாத ரகசியம் என்பதால் சரக்கு கசப்பா சைட் டிஷ் கசப்பா என்றறிய முடியாத போதத்திலிருப்பவர்களுக்கான வேர்க்கடலைப் பக்கோடாவையும் பக்கோடா என்றேற்பதற்கில்லை.

பல்லிருக்கவன் பகோடா திங்கான் என்று தனக்காக ஒரு பழமொழியையே கொண்ட ஒரே தின்பண்டம் பக்கோடாதான், பகோடாவைத் தின்னவும் முடியாமல் அதற்காக ஏங்குவதை தவிர்க்கவும் முடியாமல் தவிப்பவர்கள் செய்த கூட்டுச்சதி காலிஃப்ளவர் மற்றும் பனீர் பக்கோடா. மேற்படி எதுவுமே மூலப் பொருளோடு சுருதி சேராமல் பக்கோடா மாவு டேஸ்ட், மூலப் பொருள் டேஸ்ட் என்று அபஸ்வரமான கலியாணக் கச்சேரி மாதிரிதான் இருக்கும்.

ஒரு தேவ ரகசியம் சொல்லட்டுமா? கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கும் மிகப் பிடித்தது பக்கோடாவாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தான் பள்ளியிலேயே விடைத்தாளைக் கொடுக்கும் ஆசிரியர் பக்கோடா மடிக்கத்தான் லாயக்கு என்று ஆசீர்வதித்துக் கொடுப்பார். இதப் பகடி என்போர் சயனைட் கவுஜ சரஸ்வதி, கல்வியைத் தன்பேரில் சுமந்திருக்கும் வித்யா என்கிற விதூஷ் தன்னுடைய படைப்புக்களை பக்கோடா பேப்பர் என்ற வலை மனையில்தான் மடித்துத் தருகிறார் என்பதற்கு வேறேதும் மறுப்பு சொல்லக் கூடுமோ?

‘ன்னாச்சி’ என்று திரும்பத் திரும்ப வரும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தவர்கள், அறிவார்களா? இது ஒன்றும் புதுமையில்லை. மதராஸ் டு பாண்டிச்சேரி படத்தில் ‘அப்பா பக்கோடா’ என்ற ஒரே வசனத்தை படம் முழுதும் பேசி பக்கோடா காதர் என்ற மாபெரும் கலைப் பொக்கிஷத்தை அளித்த ஒரே தின்பண்டம் பக்கோடாதான்.

சும்மா கண்ட மானிக்கு வெங்காயம் நறுக்கி, கடலை மாவில் பிரட்டி எருமைமாடு நடந்து கொண்டே சாணி போடுவது போல் வாணலிக்குள் விழுவதல்ல பக்கோடா. பக்கோடாவின் பெயரைக் கெடுத்து

“நசுகு பித்து பித்தி நா கொம்ப கூல்ச்சேவு
டர்ருமனி பித்தரா நா பாக்ய சாலுடா”
 என்று கவி வேமனவை அலறவைத்த சதி அதில் எழவெடுத்த பூண்டைப் போடுவது.

நல்ல கடலை மாவில் (கோதுமை அரைத்த பிறகு அரைக்கலாகாது) அளவாக அரிசி மாவு சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய், புதிதாய்க் காய்ச்சிய சுட்டெண்ணெய் (பஜ்ஜி, அப்பளம் எல்லாம் காய்ச்சி ட்ரான்ஸ்ஃபார்மர் ஆயில் கணக்காய் கரேலென்றிருக்கும் சுட்டெண்ணெய் அல்ல) கொஞ்சம் விட்டு உப்பு போட்டு பிசிறி வைத்து விட்டு, வெங்காயம் நீள நீளமாய் நறுக்கி உதிர்த்து விட்டு பச்சை மிளகாய் வட்ட வட்டமாக மெல்லிசாய் நறுக்கிஅதில் போட்டு கலந்து, பின்னும் சிறிது எண்ணெய் ஊற்றிப் பிசிறிவிட்டு பத்து நிமிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் நீர் விட்டு பிசைந்து கெட்டியான பதத்திலேயே பின்னும் ஒரு பத்து நிமிடம் விட்டு, கருவேப்பிலை உருவிப் போட்டு, கொஞ்சமே கொஞ்சம் ஒரு சிட்டிகைப் பெருங்காயப் பொடியிட்டு தண்ணீர் அளவளவாகச் சேர்க்கவேண்டும். ஒரு கை மாவெடுத்து பிசிறி விட்டால் மொத்தையாக கொஞ்சம், தூள்தூளாக மீதி விழக்கூடாது. அப்படிப் பிசிறுவது பரதநாட்டிய அடவு மாதிரி அத்தனைக் கலை நயத்தோடும் பதமாகத் தண்ணீர் சேர்ப்பது ஒரு விஞ்ஞானியின் கவனத்தோடும் செய்யப்பட வேண்டியது. Practice brings perfection.

புகையாமல் நன்றாகச் சுட்ட எண்ணெயில் ஒரு சுண்டைக்காய் மாவு போட்டால் ஒலிம்பிக் வீரர் பெல்ப்ஸ் மாதிரி போட்ட வேகத்தில் மேலே வந்து சுவாசிக்க வேண்டும். அதே சூட்டை கடைசி வரை மெயிண்டெய்ன் செய்வதும், பக்கோடா, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாமே பொன்னிறத்தில் வரும்போது சுவாசம் மட்டுப் பட்டிருக்கும் போது சரியான பதத்தில் எடுப்பதும் பழக்கத்திலேயே வரும்..

பக்கோடா செய்வது மட்டுமல்ல. தின்பதும் கலையே. சுடச்சுட ஹாவு ஹாவு என்று தின்பதோ நமர்த்துப் போய் தின்பதோ பக்கோடாவுக்குச் செய்யும் அவமரியாதை. கை பொறுக்கும் சூட்டில் ஒவ்வொன்றாக வாயிலிட்டால் பொறபொறவென உதிர்ந்து மெத்தென்ற உள்ளொளி காட்டும். பச்சை மிளகாய், வெங்காயம், கடலைமாவு எல்லாம் உமிழ்நீரின் தம்பூராச் சுருதி சேர்ந்து ஆத்மானுபவம் அளிக்கும்.

கடைப் பக்கோடா என்பது வணிக நோக்குடன் செய்யப்படுவது. அது ஒரு ரசிகனுக்கு உகந்ததல்ல. அத்தகைய பக்கோடாவைத் தின்பதன் மூலம் ஒருவன் உப்புசம், ஏப்பம், லிஃப்ட், மீட்டிங்கில் பங்கேற்க முடியாத அவஸ்தை, மண்ணைத் தின்றது போன்ற புறவயமான அனுபவங்களை மட்டுமே பெறவியலும். நல்ல பக்கோடா என்பது செவ்விலக்கியத்துக்கு ஒப்பானதாகும். ஒரு தேர்ந்த பக்கோடாக் கலைஞர் ஒரு யோகியின் அர்ப்பணிப்போடு, யாகத்தின் கவனத்தோடு, கலை ரசனையோடு செய்யும்போது கிட்டும் தரிசனம். அதை உண்ணும் ரசிகனும் அதற்கான தகுதியை உருவாக்கிக் கொள்ளும்போதே பக்கோடா முழுமை பெறுகிறது.

மாறாக வணிகநோக்கு பக்கோடாக் கலைஞனை மட்டுமல்ல அது மடிக்கும் பேப்பரையும் காலம் புறந்தள்ளி ஏதோ ஒரு கடையில் முழங்கை வரை மாவைக் கலக்கி வேர்வையும், தூசுமாய் கரேலென்று வழித்து விட்டு வருடக்கணக்காய் ஊறிய சோடாமாவை ஊற்றி ட்ரான்ஸ்ஃபார்மர் எண்ணெயில் பஜ்ஜி போடவும், அதைப் பிழிந்து விட்டெறியவும் வைக்கும்.


பதிவிட்டது Vasu Balaji

Offline Maran

Re: பதிவுகள்
« Reply #8 on: April 21, 2014, 12:38:03 PM »
விகடன் மேடை - via Vikatan EMagazine


''இத்தனை கனமான உடலை வைத்துக்கொண்டு தம் கட்டி, 'மண்ணில் இந்தக் காதலின்றி...’, 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்...’ பாடல்களை எப்படிப் பாடினீர்கள்?''

''ஆஹா... இந்தக் கேள்வியை இத்தனை வருஷம் கழிச்சும் தவிர்க்க முடியலையே! என் ரசிகர்கள் எல்லார்கிட்டயும் நான் ஸாரி கேட்டுக்கிறேன். அதுலாம் தம் கட்டிப் பாடின பாடல்கள் தான். ஆனால் மூச்சுவிடாமல் பாடினது இல்லை. டெக்னாலஜி உதவியோட பண்ண ஜிம்மிக்ஸ்.

'மண்ணில் இந்தக் காதலின்றி...’ பாட்டை நான் மூச்சுவிடாமப் பாடலைங்க’னு சொல்லிட்டு அந்த மேடையிலேயே அந்தப் பாட்டை நான் மூச்சு வாங்கிப் பாடிக் காமிச்சாலும் கைதட்டுறாங்க. இத்தனைக்கும் அந்தப் பாட்டு ஒலிப்பதிவு பண்ண காலத்துல டிஜிட்டல் டெக்னாலஜி கிடையாது. கேப் கிடைச்சாத்தான் பன்ச் பண்ண முடியும். அதுக்காக ரொம்பக் கஷ்டப்பட்டு எடுத்தோம். ஆனா, அந்தப் பாட்டுக்கு முன்னாடியே, 'கண்மணியே காதல் என்பது...’ பாட்டை இளையராஜா கம்போஸிங்ல நான் மூச்சுவிடாமல் பாடியிருக்கேன்.
இத்தனைக்கும் 'கேளடி கண்மணி’ படத்துல ஆரம்பத்துல, 'மண்ணில் இந்தக் காதலின்றி...’ பாட்டே கிடையாது. 'டேய்... பாலுவை வைச்சுக்கிட்டு பாட்டு வைக்கலைனா எப்படிடா? அவனுக்கு ஏதாவது பாட்டு வைக்கணுமே’னு பாலசந்தர் சார் வஸந்த்கிட்ட சொல்ல, அவர் இளையராஜாகிட்ட சொல்ல, 'அந்த கேரக்டருக்கு அவனுக்கு எப்படிப்பா பாட்டு வைக்கிறது?’னு ராஜா கேட்டிருக்கார். 'ஏதாவது ஜிம்மிக்ஸ் பண்ணணும்’னு வஸந்த் சொல்ல, 'அவன் தடிச்சு இருக்கான். அவன் மூச்சுவிடாமப் பாடினா ஆடியன்ஸுக்குப் பிடிக்கும்’னு ராஜா கொடுத்த ஐடியாதான் அந்தப் பாட்டு.

'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்...’ பாட்டு ஆறுக்கு மேல பஞ்சமம் வரைக்கும் இருக்கும். பரத்வாஜ், 'சார் அந்த லைன் மட்டும் தனியா ஒரே அடியில அடிச்சிட்டு எடுத்துடலாம்’னார். கட் அண்டு பேஸ்ட்தான். மூச்சுவிடாமல் பாடிறது டெக்னாலஜி இல்லைனா முடியாது. ஸ்டேஜ்ல ரெண்டு தடவை மூச்சுவிடாமப் பாட முயற்சி பண்ணேன். தலை சுத்திடுச்சு. சில சமயங்கள்ல சில லைன்களை விட்டுட்டுப் பிறகு டேக்-ஆஃப் பண்ணுவேன். ஏன்னா, மூச்சுவிடாம ஏக் தம்ல பாடுறது ரொம்பச் சிரமம்!''



Offline Maran

Re: பதிவுகள்
« Reply #9 on: April 21, 2014, 12:47:06 PM »
லெனினின் புரட்சிக்கு ஜெர்மனி நிதி வழங்கியதா?


 முதலாம் உலகப்போரின் முடிவில், போல்ஷெவிக்குகள் ஜெர்மனியிடம் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அதற்குக் காரணம், லெனின் உட்பட முக்கியமான போல்ஷெவிக் கட்சி உறுப்பினர்கள், சுவிட்சர்லாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி இருந்தனர். முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், ரஷ்யாவில் சார் மன்னராட்சி, ஒரு புரட்சி மூலம் தூக்கியெறியப் படும் என்று சொன்னால், அன்று யாரும் எளிதில் நம்பியிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு, சார் மன்னரின் அரசு மிகப் பலமாக இருந்தது. உள்நாட்டில் அரசுக்கு எதிரான சக்திகள் மூச்சு விடக் கூட அவகாசம் கொடுக்கவில்லை. இதனால், பல அரச எதிர்ப்பாளர்கள் பிற ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி இருந்தனர்.

ரஷ்யாவில், விளாடிமிர் இலியானோவிச்சின் (லெனின்) குடும்பம், ஒரு வசதியான மத்தியதர வர்க்க குடும்பம் தான். அவரது மூத்த சகோதரன் அலெக்சாண்டர் ஒரு அராஜகவாதி (அனார்க்கிஸ்ட்). சார் மன்னன் நிக்கொலாயினை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார். தோல்வியைத் தழுவிய கொலை முயற்சியில், அலெக்சாண்டர் கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்டார். அந்தச் சம்பவம் காரணமாக, லெனினின் குடும்பம் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானது.

விளாடிமிர் வளர்ந்து பெரியவனாகி, தமையனின் வழியில் புரட்சிக்கான ஆயுதப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டான். லெனின் என்ற புனைப் பெயரை வைத்துக் கொண்டான். கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல்களை படித்த லெனின், சோஷலிசப் புரட்சிகர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அன்று கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல்கள், பல ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப் பட்டிருந்தன. ஆனால், ரஷ்யாவில் அவை தடை செய்யப் படவில்லை. "அந்த நூல்கள், தனது இருப்பிற்கு ஆபத்தானவை அல்ல" என்ற எண்ணத்தில், சார் அரசு அவற்றை உதாசீனப் படுத்தி வந்தது.

சார் மன்னராட்சிக்கு எதிராக, பல்வேறு எதிர்ப்பியக்கங்கள் இயங்கி வந்தாலும், அவை எல்லாம் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தன. 1905 ல் ஏற்பட்ட புரட்சிக்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போன்ற, லிபரல் அரசியல் கட்சிகளுக்கு சிறிதளவு அரசியல் சுதந்திரம் கிடைத்திருந்தது. ஆனால், சோஷலிசக் கட்சிகள் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்து வந்தன.

லெனின் போன்ற தலைவர்கள், சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரி இருந்தனர். ரஷ்யாவுடன் கூட்டணி அமைத்திருந்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், அந்த அரசியல் அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுத்தன. அதனால், தவிர்க்கவியலாது, ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு நடுநிலை நாடாக இருந்த, சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் கோர வேண்டி இருந்தது. அந்த நிலைமையை, ஜெர்மனி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணியது.

அன்றைய ரஷ்யாவை ஒரு சக்கரவர்த்தி ஆண்டது போல, அன்றைய ஜெர்மனியும் சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்தது. ரஷ்ய சக்கரவர்த்தி நிக்கோலாஸ், ஜெர்மன் சக்கரவர்த்தி வில்லெம், இருவரும் நெருங்கிய உறவினர்கள்! இருவரும் மைத்துனர் முறையானவர்கள். என்ன தான் தாயும், பிள்ளையும் என்றாலும், வாயும் வயிறும் வேறு தானே? அதனால், பிராந்திய வல்லரசுப் போட்டி, இரண்டு மைத்துனர்களுக்கு இடையில் பகைமையை வளர்த்து விட்டிருந்தது.

ரஷ்ய சாம்ராஜ்யம், நாற்திசைகளிலும் தன்னை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. மேற்குத் திசையில், இன்னொரு சாம்ராஜ்யமான ஜெர்மனியுடன் மோத வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அன்றைய ஜெர்மனி, பிருஷிய சாம்ராஜ்யம் என்று அழைக்கப் பட்டது. இன்றைய போலந்தின் வட பகுதியில், இன்றைய ரஷ்யாவின் மேற்குப் பகுதியில், அதன் தலைமையகம் அமைந்திருந்தது. ஆனால், ரஷ்ய சாம்ராஜ்யமானது அந்தப் பகுதிகளை விழுங்கி விட்டிருந்தது.

ரஷ்யாவுடனான ஏகாதிபத்திய போர்களில், தனது புராதனப் பழைமை வாய்ந்த பகுதிகளை இழந்த ஜெர்மனி, அவற்றை மீட்பதற்கு கடுமையாக முயற்சித்தது. அன்றிருந்த ஐரோப்பிய வல்லரசு நாடுகளின், நாடு பிடிக்கும் போட்டி தான், முதலாம் உலகப் போருக்கு வித்திட்டது. முதலாம் உலகப்போரில், ஜெர்மனி தோற்கடிக்கப் பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனாலும், ஜெர்மனி தனது பிராந்தியத்திற்கான உரிமை கோரலை கை விடவில்லை. முதலாம் உலகப்போர் முடிந்த பின்னரும், கிழக்குத் திசையில் முன்னேறிய ஜெர்மன் படைகள், எஸ்தோனியா, லாட்வியா போன்ற பால்ட்டிக் கடலோர நாடுகளை ஆக்கிரமித்தன.

ரஷ்யாவில் சார் அரசு பலமாக இருந்தாலும், அது பல்வேறு அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தது. அரசு விரும்பினாலும், ஜெர்மனியுடனான போரை நிறுத்த முடியாத அளவுக்கு, ரஷ்ய பேரினவாதிகளின் கை ஓங்கி இருந்தது. மறுபக்கத்தில், நகரங்களில் தொழிலாளர்களும், கிராமங்களில் விவசாயிகளும் போர் காரணமாக கடுமையான விலை கொடுக்க வேண்டி இருந்தது. அதனால், ஆங்காங்கே கலவரங்கள் வெடித்தன. ரஷ்ய அரசு, ஒரு புறம் உள்நாட்டு கலகங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிக் கொண்டே, மறுபுறம் ஜெர்மனியுடன் போரிட்டுக் கொண்டிருந்தது.

ஜெர்மனியும் அதே மாதிரியான நெருக்கடிக்குள் சிக்கி இருந்தது. மேலும் அதன் எதிரி ரஷ்யா மட்டுமல்ல. பிரிட்டன், பிரான்சை எதிர்த்தும் போரிட வேண்டி இருந்தது. இந்தக் கட்டத்தில் தான், எப்படியாவது சார் மன்னனின் ஆட்சி கவிழ்ந்தால் போதும், ரஷ்யாவுடனான யுத்தம் முடிந்து விடும் என்ற நிலைப்பாட்டிற்கு ஜெர்மனி வந்தது. 1915 ம் ஆண்டு, பார்வுஸ் என்ற ரஷ்ய வர்த்தகர் ஒருவர், ஜெர்மன் சக்கரவர்த்தியை சந்தித்துப் பேசினார். ரஷ்யாவில் சார் மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு, தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக கூறினார். அதற்குத் தேவையான ஆயுதங்கள், நிதியை வழங்கினால் போதும், மிச்சத்தை தான் பார்த்துக் கொள்வதாக கூறினார்.

அலெக்சாண்டர் ஹெல்ப்ஹான்ட் என்ற இயற்பெயர் கொண்ட பார்வுஸ், சட்டவிரோத ஆயுதக் கடத்தல்கள் மூலம் பிரபலமான வர்த்தகர் ஆவார். சார் மன்னருக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தார். இவரது வீட்டில் இருந்த அச்சுக்கூடத்தில் தான், லெனின் எழுதிய நூல்கள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப் பட்டன. அதனால், லெனினுக்கும் பழக்கமானவர்.

லெனின் உட்பட பல சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள், பார்வுஸ் மீது நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கவில்லை. கடைசி வரைக்கும், பார்வுஸ் தனக்கு பழக்கமானவர் என்று லெனின் காட்டிக் கொள்ளவில்லை. பார்வுஸ் ஒரு சாதாரண வணிகர் மட்டுமல்ல, கள்ளக்கடத்தல்கள், டாம்பீகம், ஊதாரித்தனம், பெண் பித்து போன்ற கெட்ட பழக்கங்களையும் கொண்டிருந்தார். அவரைத் தெரிந்ததாக காட்டிக் கொண்டால், தங்களுக்கும் கெட்ட பெயர் வந்து விடும் என்று சோஷலிஸ்டுகள் அஞ்சினார்கள்.

என்ன இருந்தாலும், பார்வுஸ்ஸிடம் ஒரு நல்ல குணம் இருந்தது. அவர் முதலாளித்துவ நலன்களை பயன்படுத்தி செல்வந்தராக வாழ்ந்த ஒருவர் தான். ஆனாலும், அவருக்குள் ஒரு சோஷலிஸ்ட் இருந்தார். ஒரு பொருளாதாரப் பட்டதாரி. மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றவர். அவரது சொந்த வாழ்க்கைக்கும், அவரது அரசியல் சித்தாந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்கவில்லை. ஆனால், ரஷ்யாவின் எதிர்காலம் சோஷலிசப் புரட்சியில் தங்கியிருப்பதாக, உறுதியாக நம்பினார்.   

ரஷ்யாவில் சார் மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு, ஜெர்மனி ஆயுதங்களும், நிதியும் வழங்க காத்திருக்கிறது என்ற செய்தியுடன், பார்வுஸ் சுவிட்சர்லாந்துக்கு பயணமானார். பேர்ன் நகரில், லெனினை சந்தித்துப் பேசினார். ஆனால், அவரது திட்டத்திற்கு இணங்க லெனின் மறுத்து விட்டார். "பார்வுஸ் ஒரு ஜெர்மன் சோஷலிச- பேரினவாதி" என்று திட்டிய லெனின், கதவைத் திறந்து வெளியே அனுப்பி விட்டார். "கல்லடி பட்ட நாய் மாதிரி, பார்வுஸ் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடியதாக..." பிற்காலத்தில் லெனின் அந்த சம்பவம் பற்றி விபரித்திருந்தார்.

ஜெர்மன் வெளிவிவகார அமைச்சின் இரகசிய ஆவணம் ஒன்றில், "பார்வுஸ் 20 மில்லியன் ரூபிள்கள் (இன்றைய பெறுமதி 25 மில்லியன் யூரோ) கேட்டிருந்ததாக..." எழுதப் பட்டுள்ளது. ஜெர்மன் அரசு வழங்கிய பணம், டென்மார்க்கின் தலைநகரம் கோபன்ஹெகன் ஊடாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளது. அன்றைய கோபன்ஹெகன் கள்ளக் கடத்தல்காரர்கள், பங்குச்சந்தை சூதாடிகள், ஆகியோரின் சொர்க்கமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களை பயன்படுத்தி, சட்டவிரோத வியாபாரம் செய்து, கொள்ளை இலாபம் அடித்த வர்த்தகர்கள் எல்லோரும் அங்கே தான் பதுங்கி இருந்தார்கள்.

ஜெர்மன் அரசிடம் இருந்து நிதியுதவி பெற்ற பார்வுஸ், கோபன்ஹெகன் நகரை தளமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஏராளமான ஆயுதங்கள், வெடி குண்டுகளை ரஷ்யாவுக்கு கடத்திச் சென்றார். ரஷ்யாவில் தலைமறைவாக இருந்த சோஷலிசப் புரட்சியாளர்களுக்கு அவற்றை விநியோகம் செய்தார். உண்மையில், ஜெர்மனியின் நிதியுதவி, நேரடியாக லெனினின் ஆதரவாளர்களிடம் மட்டும் சென்றது என்று சொல்ல முடியாது. பல்வேறு போராளிக் குழுக்கள், அந்த உதவியைப் பயன்படுத்தி இருக்கலாம். அன்று ரஷ்யாவில் இருந்த எல்லா எதிர்ப்பியக்கங்களுக்கும், ஜெர்மன் சக்கரவர்த்தி நிதி வழங்கியுள்ளமை, ஆவணங்களில் இருந்து தெரிய வருகின்றது. அவற்றில் சில, லெனினின் போல்ஷெவிக் கட்சிக்கு எதிரான குழுக்கள் ஆகும்.

1917 ம் ஆண்டு, பெப்ரவரி மாதம் மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட்டது. இம்முறை சார் மன்னர், அதிகாரத்தை விட்டுக் கொடுக்க முன்வந்தார். மேற்கு ஐரோப்பாவில் இருப்பதைப் போன்ற, பாராளுமன்ற ஜனநாயக முறைக்கும், இடைக்கால அரசு அமைப்பதற்கும் ஒத்துக் கொண்டார். மென்ஷெவிக் போன்ற சமூக ஜனநாயகவாதிகளும், ரஷ்ய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடிந்தது. இந்தத் தருணத்தில், அவர்களுக்கும், லெனினின் போல்ஷெவிக் ஆதரவாளர்களுக்கும் இடையிலான முரண்பாடு விரிவடைந்தது. லெனின் இடைக்கால அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். அதே நேரம், ஏகாதிபத்திய போர்களை நிறுத்தி, சமாதானம் நிலைநாட்டப் பட வேண்டும் என்றார்.

அன்று சார் மன்னரின் அதிகாரம் வெகுவாக குறைக்கப் பட்டிருந்தாலும், இடைக்கால அரசாங்கம், சக்கரவர்த்தி சாரின் ஏகாதிபத்திய போருக்கு ஆதரவாக இருந்தது. லெனின் தலைமையிலான குழுவினர், போருக்கு எதிராக இருந்ததைக் காரணமாகக் காட்டி, மக்கள் மத்தியில் அவர்களை தனிமைப் படுத்த எண்ணியது. போரை எதிர்த்த போல்ஷெவிக்குகள், தேசத் துரோகிகளாக சித்தரிக்கப் பட்டனர். லெனின் குழுவினருக்கு, ஜெர்மனியிடம் இருந்து நிதி கிடைப்பதாக பிரச்சாரம் செய்யப் பட்டது. அன்று, இடைக்கால அரசாங்கம் ஆரம்பித்து வைத்த, "ஜெர்மன் நிதி பற்றிய பிரச்சாரம்" இன்று வரையில் தொடர்கின்றது. "லெனினுக்கு ஜெர்மனி நிதி வழங்கியது" என இன்றைக்கும் பரப்பப்படும் தகவல்கள், பெரும்பாலும் அன்றைய இடைக்கால அரசின் பிரச்சாரத்தை ஆதாரமாக கொண்டுள்ளன.

ஜெர்மன் நிதியுதவி பற்றி இடைக்கால அரசாங்கம் பிரச்சாரம் செய்து வந்த போதிலும், அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. இதற்கிடையே, ரஷ்யா இன்னொரு புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருந்தது. அரசு மீது அதிருப்தியுற்ற மக்கள் பரவலாக கிளர்ச்சி செய்தனர். முதலாளிகள் மாதக் கணக்காக சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்த படியால், தொழிலாளர்கள் வீட்டு வாடகையை கூட கட்ட முடியாமல் கஷ்டப் பட்டனர். பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் நிர்வாகத்தை கைப்பற்றினார்கள். நாட்டுப்புறங்களில், விவசாயிகள் நிலங்களை தமது உடமையாக்கிக் கொண்டார்கள். இராணுவத்தினர், கடற்படை வீரர்கள் கூட கிளர்ச்சி செய்தனர். சில மாதங்களுக்கு முன்னர் கூட எண்ணிக்கையில் குறைவாக இருந்த போல்ஷெவிக் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்தது. 

இந்தத் தருணத்தில், சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த லெனின் குழுவினர், தாயகம் திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதற்கு ஜெர்மனியின் உதவி தேவைப் பட்டது. லெனின் குழுவினர் ரஷ்யாவின் ஆட்சியை கைப்பற்றினால், சமாதானம் ஏற்படும் என்று ஜெர்மன் அரசு நம்பியது. அதனால், லெனின் குழுவினரை ஒரு புகைவண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தது. ரயில் பயணத்திற்கான நிதியை, ஜெர்மன் அரசு வழங்கி இருந்தது. தங்களது கடவுச்சீட்டுகள், உடமைகளை சோதனையிடக் கூடாது என்று நிபந்தனை போட்ட பின்னர் தான், லெனின் அந்த ரயில் வண்டியில் செல்ல சம்மதித்தார். அந்த ரயில் வண்டியில், வேறெந்தப் பயணியும் அனுமதிக்கப் படவில்லை. போல்ஷெவிக் உறுப்பினர்களின் ரயில் பயணம் மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது.

சுவிட்சர்லாந்தில் இருந்து ஜெர்மனி ஊடாக சென்று, பின்னர் கடல் தாண்டி, சுவீடன், பின்லாந்து வழியாக சென்ற ரயில், ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பெர்க் நகரை சென்றடைந்தது. லெனினை வரவேற்கவும், நேரில் பார்ப்பதற்குமாக, ஏராளமான மக்கள் ரயில் நிலையத்தில் ஒன்று கூடினார்கள். லெனின் சென் பீட்டர்பெர்க் நகருக்கு வந்து சேர்ந்த பின்னரும், நிம்மதியாக இருக்க முடியவில்லை. இடைக்கால அரசாங்கம் அவரைக் கைது செய்ய முயன்றது. அதனால், மீண்டும் தலைமறைவாகி பின்லாந்துக்கு சென்றார். இதற்கிடையே நவம்பர் 7 ம் தேதி, ஒக்டோபர் புரட்சி வெடித்தது. ஆயுதபாணிகளான போல்ஷெவிக் தொழிலாளர்கள், கடற்படை வீரர்கள், அரசு அலுவலகங்களை கைப்பற்றினார்கள். ரஷ்யாவின் புதிய தலைவராக லெனின் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இப்போது ஒரு சோதனைக் காலம் தொடங்கியது. ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உள்நாட்டுப் போரைக் காரணமாகக் காட்டி, லெனின் ஒரு வருடம் பின் போட்டார். ஆனால், புதிய சோவியத் ஒன்றியம் ஏகாதிபத்திய போரில் இருந்து விலகிக் கொள்ளும் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை. 3-3-1918 அன்று, ஜெர்மனிக்கும், ரஷ்யாவுக்கும் இடையில், பிரெஸ்ட்- லித்தொவ்ஸ்க் (Brest - Litovsk)  சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. அதன் படி, ரஷ்யா முதலாம் உலகப் போரில் இருந்து உத்தியோகபூர்வமாக விலத்திக் கொண்டது. 

பிரெஸ்ட்- லித்தொவ்ஸ்க் ஒப்பந்தம் போடுவதற்கு முன்னர், புதிய சோவியத் அரசாங்கத்திற்கு, ஜெர்மன் அரசு மில்லியன் கணக்கான ரூபிள்களை நிதியாக வழங்கி இருந்தது. அந்தப் பணம் உண்மையில் ஒரு நஷ்டஈடாகத் தான் வழங்கப் பட்டது. ஏனெனில், அந்த ஒப்பந்தத்தினால், சோவியத் அரசு இழந்தது அதிகம். இன்றைய உக்ரைனின் மேற்குப் பகுதி பறிபோனது. எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா போன்ற பால்ட்டிக் நாடுகள், ஜெர்மனியின் பகுதிகளாகின.

அன்று, சோவியத் யூனியன், வெறும் நிலப் பகுதிகளை மட்டும் பறிகொடுக்கவில்லை. நிலத்தோடு சேர்த்து, கோடிக்கணக்கான பெறுமதியான தொழிலகங்களும் பறி போயின. சமாதான ஒப்பந்தம் போட்டிருக்கா விட்டால், மீண்டும் ஜெர்மனியுடன் போர் வெடித்திருக்கும். ஜெர்மனியை எதிர்த்து நிற்கும் அளவிற்கு, சோவியத் அரசிடம் பலமில்லை, என்ற நிலைப்பாட்டில் தான் அந்த ஒப்பந்தம் போடப் பட்டது. லெனினின் புரட்சிக்கு ஜெர்மனி நிதி வழங்கியது என்று குற்றம் சாட்டுவோர், அதனால் லெனின் இழந்தது எவ்வளவு என்பது பற்றிப் பேசுவதில்லை.

எதற்காக ஒரு முதலாளித்துவ நாடான ஜெர்மனி, தனது சித்தாந்த எதிரிகளுக்கு உதவி செய்ய வேண்டும்? அதனை ஒரு சித்தாந்தப் பிரச்சினையாக, அன்றைய ஜெர்மன் அரசு கருதவில்லை. உலகில் எந்த நாட்டிலும், ஒரு சோஷலிசப் புரட்சி சாத்தியம் என்று அது நம்பவில்லை. இன்றைய உலகில், சோஷலிசம், கம்யூனிசம், புரட்சி பற்றிப் பேசுவோரை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? "இதெல்லாம் நடைமுறைச் சாத்தியமற்ற கொள்கைகள்." என்று சொல்வார்கள். அவற்றை நம்புவோரை பைத்தியக்காரர்கள் போன்று பார்ப்பார்கள். உலகில் எந்தவொரு அரசாங்கமும், அவர்களை தனது இருப்புக்கு ஆபத்தானவர்களாக கருதுவதில்லை.

இப்போது, ரஷ்யப் புரட்சிக்கு முந்திய உலகத்தை மனக்கண்ணில் கொண்டு வாருங்கள். உலகில் எங்குமே சோஷலிசப் புரட்சி ஏற்பட்ட வரலாற்றைக் கண்டிராத காலகட்டத்தில், யாராவது லெனின் போன்றவர்களை பொருட்படுத்தி இருப்பார்களா? சோவியத் யூனியன் உருவாகி பத்து வருடங்கள் ஆகியும், அங்கே சோஷலிசப் பொருளாதாரம் கொண்டு வரப் படவில்லை. "புதிய பொருளாதாரத் திட்டம்" (NEP) என்ற பெயரில், பெருமளவு முதலாளித்துவ பொருளாதார அமைப்பு தொடர்ந்திருந்தது.

உலக வரலாற்றில் பல தடவைகள் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. லெனின், ஜெர்மனியிடம் இருந்து நிதி பெற்று புரட்சி செய்ததாக குற்றம் சாட்டுவோரில் சிலர், புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகள் ஆவர். ஈழப் போராட்டத்தின் தொடக்கத்தில், புலிகளுக்கு இந்தியா நிதி வழங்கியதை, அவர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்தில், இந்திய அரசு புலிகளுக்கு ஆயுதம், நிதி, பயிற்சி வழங்கியது தெரிந்ததே. இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்ட பின்னரும், இந்திய மத்திய அரசு, கோடிக் கணக்கான ரூபாய்களை புலிகள் அமைப்பிற்கு கொடுத்திருந்தது. 2002 ம் ஆண்டு, ரணில் - பிரபா ஒப்பந்தம் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த காலத்திலும், ஜப்பான், நோர்வே ஆகிய மேற்குலக நாடுகள், புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கி இருந்தன.

கியூபப் புரட்சிக்கு முன்னரும், அதற்குப் பிறகு சில வருடங்களும், அமெரிக்கா காஸ்ட்ரோ குழுவினருக்கு உதவி வழங்கிக் கொண்டிருந்தது. சேகுவேரா என்ற ஆர்ஜெந்தீன கம்யூனிஸ்ட் காஸ்ட்ரோ குழுவில் இருந்த விடயம், அமெரிக்காவுக்கும் தெரியும். ஆனால், கியூபாவில் சோஷலிசப் புரட்சி ஏற்படுவது, ஒரு  நடைமுறைச் சாத்தியமான விடயம் என்று அமெரிக்கா நம்பவில்லை. காஸ்ட்ரோவின் இயக்கமும், அன்று எந்த சந்தர்ப்பத்திலும் கம்யூனிசம் பேசவில்லை.

அநேகமாக, காஸ்ரோ- சேகுவேரா குழுவினர், கியூபாவில் ஒரு ஜனநாயக- முதலாளித்துவ ஆட்சியை கொண்டு வருவார்கள், என்று தான் அமெரிக்கா நம்பியது. காஸ்ரோ குழுவினரும், தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. அமெரிக்க நிறுவனங்களை தேசியமயப் படுத்திய பின்னர் தான், பிரச்சினை தொடங்கியது. அத்துடன் அமெரிக்காவுடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப் பட்டது. கியூபா சோஷலிசப் பொருளாதாரத்தை முழு வீச்சுடன் நடைமுறைப் படுத்தியது.

ரஷ்ய போல்ஷெவிக் கட்சியினருக்கு, ஜெர்மனி வழங்கிய நிதி உள்நோக்கம் கொண்டது என்பதில் ஐயமில்லை. பிரெஸ்ட்- லித்தொவ்ஸ்க் கைச் சாத்திடப் பட்ட பொழுது, ஜெர்மனியின் நோக்கம் பகிரங்கமாக தெரிய வந்தது. ஆயினும், பிற்காலத்தில் ஸ்டாலின் ஆட்சியில், நாஸி ஜேர்மனியோடு நடந்த போரில், சோவியத் யூனியன் இழந்த பகுதிகள் யாவும் திரும்பப் பெறப் பட்டன. பால்ட்டிக் நாடுகள், உக்ரைனின் மேற்குப் பகுதி, பெலாரஸ் மேற்குப் பகுதி என்பன ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றப் பட்டன.

உண்மையில், இரண்டாம் உலகப்போரின் முடிவில், சோவியத் ஒன்றியம் இழந்ததை விட அதிகமாகவே எடுத்துக் கொண்டது. முன்னாள் புருஷிய சாம்ராஜ்யத்தின் பாரம்பரிய பிரதேசமான, கேனிக்ஸ்பேர்க் (Königsberg, இன்று: காலினின் கிராட்) பகுதியும், சோவியத் வசமானது. அங்கு வாழ்ந்த ஜெர்மன் மொழி பேசும் மக்கள் அனைவரும், இன்றைய ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்து சென்று விட்டனர். அந்த மாநிலம், இன்று முழுக்க முழுக்க ரஷ்ய மயமாகி உள்ளது. ஜெர்மனியைப் பொறுத்தவரையில், இது போன்ற தோல்விகளை ஜீரணிக்கும் நிலையில் இல்லை. ஜெர்மன் பேரினவாதிகள், இழந்த சொர்க்கத்தை நினைத்து இன்றைக்கும் ஏங்குகின்றனர்.

Offline Maran

Re: பதிவுகள்
« Reply #10 on: April 21, 2014, 01:15:00 PM »
சோழர்கள் தமிழர்களா? அல்லது தெலுங்கர்களா?

பதிவர் : கலையரசன்


(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உலகப் புகழ் பெற்ற ராஜ ராஜ சோழனும் அவனது சோழப் பரம்பரையும், தமிழர்கள் என்பதை விட தெலுங்கர்கள் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.)

பார்ப்பனர்களும், மதவெறியர்களும், சாதிவெறியர்களும், ராஜ ராஜ சோழனுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவதற்கான காரணம் மிகவும் தெளிவானது:

ராஜராஜன் ஆட்சியில் ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூஜைமுறைகள் தடைசெய்யப் பட்டு, ஆகமமுறை கட்டாயமாக்கப் பட்டது. இந்த ஆதிக்கக் கட்டமைப்புக்கு செவி சாய்க்கவும், செய்து முடிக்கவும் பிராமணர்கள் தேவைப் பட்டார்கள். அரசரின் கட்டளையை ஏற்று நடந்ததால், பிராமணர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப் பட்டன.... மதங்களைக் கொண்டு மக்களைக் கட்டுப்படுத்தவும் ஒற்றுமையோடு செயல்படவும் பிராமணர்களின் பங்களிப்பு அவசியம் என்று ராஜராஜன் நினைத்தார். இதனால் சோழர்கள் காலத்தில் ஆதிக்கத்தின் கருவியாக பிராமணர்கள் செயல்பட்டார்கள்.

ராஜராஜன் காலத்தில் பிராமணர் ஆதிக்கம் மட்டுமில்லாமல், வேளாளர்களின் ஆதிக்கமும் அதற்குச் சமமாக இருந்தது. நில நிர்வாகம் செய்யும் ஆதிக்கம் அவர்களிடம் இருந்தது. வேளாண்மை செய்யும் புதிய நில உரிமையாளர்கள் அனைவரும் வேளாளர்கள் என்று அழைக்கப் பட்டார்கள். பிராமணர்களுக்கும், வேளாளர்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருந்ததால், ஜாதி ஏற்றத்தாழ்வுகளும் அடிமைமுறைகளும் அக்காலக் கட்டத்தில் நிலவி வந்தன. ஒரு சாரார் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தப் பட்டார்கள் என்பது மறுக்க முடியாத இன்னொரு உண்மை.

அதிகச் சலுகைகள் அனுபவித்து வந்த பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்து நிறைய போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இவ்விருவரையும் எதிர்ப்பவர்கள், இருபதினாயிரம் காசுகள் தண்டம் செலுத்த வேண்டும் என்றும், தண்டம் செலுத்தத் தவறினால் நில உரிமை பறிக்கப்படும் என்று இது போன்ற கிளர்ச்சிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப் பட்டன. இதனால் சாதிப்பிளவும், உரிமைப் போராட்டங்களும் அக்காலகட்டத்தில் நிலவியது உண்மை தான்.//

- ச. ந. கண்ணன் எழுதிய ராஜராஜ சோழன் நூலில் இருந்து.

 இந்தக் கட்டுரை முழுவதும், ராஜ ராஜ சோழன் போன்ற பிற்காலச் சோழர்கள் பற்றியது ஆகும். சோழர்கள் உண்மையிலேயே தமிழர்கள் தானா? அல்லது ஆரிய மயப் பட்ட தெலுங்கர்களா? சோழர்களின் வரலாற்றில் எந்த இடத்திலும், அவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. "தமிழர் திருநாள்" என்று கருதப் படும் தைப் பொங்கலைக் கூட சோழர்கள் கொண்டாடி இருக்கவில்லை.

 //தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாக எது இருந்தது? தைப்பொங்கல்? கிடையாது. .... சோழர் ஆட்சிக் காலத்தில் இந்திர விழாவுக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு ஆண்டின் தொடக்கத்தில் விழா எடுக்கிற மரபு பல ஆண்டுகளாக சோழ நாட்டில் இருந்து வந்துள்ளது. கி.பி. 13 ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான், வேளாளர் சமூகத்தினரால் தைப்பொங்கல் தமிழர்களின் முதன்மையான விழா ஆனது. இதனால் ராஜராஜ சோழன் காலத்தில் மட்டுமல்ல, சோழர் காலம் வரைக்கும் உழவர்களின் விழாவாகப் பொங்கல் இருந்தது கிடையாது.//

- ச. ந. கண்ணன் எழுதிய "ராஜ ராஜ சோழன்" என்ற நூலில் இருந்து.


 சோழர்கள் தமிழர்கள் என்று நீண்ட காலமாக நம்பப் பட்டது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் தேசியவாதிகள் (அவர்களும் உண்மையான தமிழர்களா என்பது சந்தேகம்) அந்தக் கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி வந்துள்ளனர். ஆனால், வரலாற்றில் எங்கேயும் சோழர்கள் தமிழர்கள் என்று நிரூபிப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடையாது. மேலும் சோழர்கள் தெலுங்கர்கள் என்பதை, ஆந்திரப் பிரதேச வரலாற்று நூலும் கூறுகின்றது. (The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D.)

சோழர்கள் ஆண்ட ஆந்திரா மாநிலப் பகுதிகளை, நமது தமிழ் தேசியவாதிகள் யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. சோழர்கள் தமது தலைநகரத்தை ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு மாற்றி இருக்கலாம். தமிழ்ப் பெயர்கள் வைத்துக் கொண்டிருக்கலாம். சோழர்கள் பிராமணர்களை குடியேற்றினார்கள். ஆகம சைவ மதத்தை பின்பற்றினார்கள். சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால், அவர்களது குடிமக்களும், போர்வீரர்களுமாக தமிழர்களே பெரும்பான்மையாக இருந்துள்ளார்கள்.

ச. ந. கண்ணன் எழுதிய ராஜ ராஜ சோழன் என்ற நூலில், சோழர்களின் பூர்வீகம் பற்றி தெளிவாக குறிப்பிடப் படவில்லை. சோழ அரச பரம்பரையினர் தங்களுக்கு தமிழ்ப் பெயர்களை சூட்டிக் கொண்டிருக்கலாம். அதெல்லாம் சோழர்கள் தமிழர்கள் என்று நிரூபிக்க போதுமானவை அல்ல. சோழர்களுக்கு முன்னர் தஞ்சையை ஆண்ட முத்தரையர்கள் கன்னடர்கள் என்று குறிப்பிடப் படுகின்றது. பல்லவர்கள், முத்தரையர்களை வெளியேற்றுவதற்கு, சோழர்களை பயன்படுத்தி உள்ளனர். அநேகமாக, சோழர்களும் முத்தரையர்களின் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், வெவ்வேறு இனக் குழுக்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம். அந்தக் காலங்களில் உறவினர்களே ஒருவரோடு ஒருவர் பங்காளிச் சண்டையில் ஈடுபடுவது சாதாரண விடயம்.

ஆரம்ப கால சோழர்கள், பல்லவர்களின் அடியாட் படையாக இருந்துள்ளனர். சோழ பரம்பரையின் முதலாவது மன்னன் விஜயாலன், பல்லவர்களின் பேரில் முத்தரையர்களுக்கு எதிரான போரை நடத்தியுள்ளான். அதற்கு பிரதியுபகாரமாக, பல்லவர்கள் தஞ்சையை சோழர்களுக்கு பரிசளித்தார்கள்.  (சோழர்களின் புலிக் கொடி கூட, பல்லவர்களிடம் இருந்து கடன் வாங்கியது தான்.) பிற்காலத்தில் பலமான இராணுவ சக்தியாக வளர்ந்த சோழர்கள், பாண்டியர்களையும், பல்லவர்களையும் போரில் வென்று, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டார்கள். அதே நேரம், கன்னட சாளுக்கியர்களுடன் திருமண உறவுகள் வைத்துக் கொண்டார்கள்.

சோழர்களின் படைகளில், தமிழ்ப் போர்வீரர்கள் பெரும்பான்மையாக இருந்துள்ளனர். இந்தோனேசியா, மலேசியா, சீனா போன்ற நாடுகளுடனான வணிகத் தொடர்புகள் காரணமாகவும், நிறைய தமிழ் வணிகர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அதற்காக தமிழர்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். ஆனால், அதன் அர்த்தம் சோழர்கள் தமிழர்கள் என்பதல்ல. குடிமக்கள் தமிழர்களாக இருந்தாலும், அவர்களை ஆண்டவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. உலகில் உள்ள வரலாறு முழுவதும் மன்னர்களைப் பற்றி மட்டுமே எழுதப் பட்டுள்ளது. அன்று வாழ்ந்த மக்களைப் பற்றி யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. அதனால் தான் இந்தக் குழப்பம்.

தமிழகத்தில் சோழர்களின் வரலாற்றைக் கூறும் சரித்திர நூல்களில், "சோழர்களின் பூர்வீகம் பற்றி எதுவும் தெரியாது" என்று எழுதி இருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்களுக்கு எதுவும் தெரியாதா? அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லையா? ஏனென்றால், ஆந்திரா பிரதேச வரலாற்றைக் கூறும் சரித்திர நூல்களில், சோழர்களின் பூர்வீகம் குறித்த தெளிவான தகவல்கள் உள்ளன.

ஆந்திரா வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும், சோழர்களின் பூர்வீகம் பற்றிய தகவல் மட்டுமே வித்தியாசம். மற்றும் படி, சோழ மன்னர்களின் பெயர்கள்,வரலாற்றுத் தகவல்கள் இரண்டு இடத்திலும் ஒத்துப் போகின்றன. ஒரு எழுத்துக் கூட வித்தியாசம் இல்லை என்பது தான் ஆச்சரியம்.

ஆந்திரா மாநில வரலாற்றைக் கூறும் நூல்களில் எல்லாம், சோழர்கள் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள். சுருக்கமாக: சோழர்கள் ஆந்திரப் பிரதேச வரலாற்றின் ஓர் அங்கம். ஆந்திராவில் அவர்களை "சாளுக்கிய சோழர்கள்" என்று அழைத்தார்கள். ஏனென்றால், தென்னிந்திய சோழ சாம்ராஜ்யம், சாளுக்கியர்களுடனான ராஜதந்திர உறவுகள் இன்றி சாத்தியப் பட்டிருக்காது. சோழர்களுக்கும், சாளுக்கியர்க்ளுக்கும் இடையில், பரம்பரை பரம்பரையாக நெருக்கமான திருமண உறவுகள் இருந்து வந்துள்ளன.

தமிழக சரித்திர ஆசிரியர்கள், சோழர்களின் தென்னிந்திய சாம்ராஜ்யத்தை சோழர்கள் மட்டுமே ஆண்டதாக கருதுகிறார்கள். அதற்கு மாறாக, அது ஒரு "சாளுக்கியர் - சோழர்களின் கூட்டு சாம்ராஜ்யம்" என்று, தெலுங்கு சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதனால் தான், ஆந்திராவில் சோழர்களை, "சாளுக்கிய சோழர்கள்" என்று அழைக்கிறார்கள். அது மட்டுமே வித்தியாசம். "ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், குந்தவை, கங்கை கொண்ட சோழபுரம்....." இது போன்ற வரலாற்றுக் குறிப்புகள், ஆந்திரா சரித்திர நூல்களிலும் அப்படியே எழுதப் பட்டுள்ளன.

அதாவது, சோழ மன்னர்களின் பெயர்களும், வரலாற்றுக் குறிப்புகளும் எந்த மாற்றமும் அடையவில்லை. ஆனால், ஆந்திராவில் தெலுங்கு சோழர்கள் என்றும், தமிழ்நாட்டில் அவர்களை தமிழ்ச் சோழர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமே வித்தியாசம். சோழர்களை ஒரு மொழித் தேசியத்திற்குள் திணிக்கும் போக்கு, பிற்காலத்தில் (இருபதாம் நூற்றாண்டில்) தோன்றி இருக்க வேண்டும். ஒரு பக்கம் தெலுங்கு தேசியவாதமும், மறுபக்கம் தமிழ் தேசியவாதமும் அரசியல் சக்திகளாக வளர்ந்து வந்தன. சரித்திர ஆசிரியர்களும் ஏதாவது ஒரு தேசியத்தை சார்ந்து எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.



மேலதிக தகவல்களுக்கு:

1. ராஜ ராஜ சோழன், ச.ந. கண்ணன்
2. A History of Vijayanagar: The Never to be Forgotten Empire, by Suryanarain Row
3. The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D., by Yashoda Devi
4. History of the Andhras, by Durga Prasad


பின்னிணைப்புகள்:



ராஜ ராஜ சோழன் தனது மகள் குந்தவியை சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளான். சாளுக்கிய, சோழ வம்சாவளியை காட்டும் வரைபடம். (நன்றி: History of the Andhras, by Durga Prasad)

தமிழ்க் காதலன் said...

    வெறும் எழுத்தாளர்களின் கதைப்புனையும் கற்பனைகளுக்கு இடம் தரும் வகையில் இந்த பதிவின் போக்கு இருக்கிறது. வரலாற்று தடங்களை சரியாக உற்றுநோக்காமல் வெங்கியை பற்றிய வரலாறும் சரிவர புரியாமல், யாரோ ஒரு தெலுங்கை உயர்த்தி பிடிக்க விரும்பிய மனிதனின் அல்லது சமூகத்தின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டது மட்டுமே புலனாகிறது. தெலுங்கு சோழர்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகிறோம் என்பதும், சாளுக்கிய, துளுவ தேசியத்தோடான உறவுநிலை பற்றிய சரியான தெளிவில்லாமல், பொதுவாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் படியாக உள்ளது. இது ஒரு புகழ் தேடல் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

கலையரசன் said...

    ஒரு கேள்வி. உங்களது பெற்றோர் காலத்தில் இருந்து சிங்களப் பிரதேசமான கொழும்பு நகரில் வாழ்ந்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்களை சிங்களவர்கள் என்று கருதிக் கொள்ள வேண்டுமா? இந்தக் கேள்வி உங்களுக்கு அபத்ததமாகப் படுவது போன்றது தான், சோழர்கள் பற்றிய உங்களது கருதுகோளும் உள்ளது. ராஜ ராஜ சோழன் தஞ்சாவூரில் இருந்து ஆட்சி செய்தான். இன்றைய தஞ்சாவூர் தமிழ் நாட்டுக்கு சொந்தமானது. ஆகவே சோழர்களும் தமிழர்கள் தான் என்று நிறுவுவது அபத்தமானது.

    சோழர்கள் தமிழர்களாக இருக்கலாம், அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் தமிழர்கள் தான் என்று அறுதியிட்டு கூற முடியாது. அதற்குப் பல காரணங்களை தந்துள்ளேன். சோழர்களுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்கள் காலத்திலேயே, தஞ்சாவூரில் கன்னடர்கள் குடியேறி விட்டார்கள். இதனை நான் கூறவில்லை. ராஜ ராஜ சோழன் பற்றிய தமிழ் நூலில் எழுதியுள்ளது.

    சோழர்கள் போன்று, முத்தரையர்களும் தமிழ்ப் பெயர்களை வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் கன்னடர்கள். தஞ்சையை சுற்றிலும் உள்ள பகுதிகளை ஆட்சி செய்த பல்லவர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் ஈரானிய அரச வம்சத்தை சேர்ந்தவர்கள். தெற்கே இருந்த பாண்டியர்கள் மட்டுமே தமிழ் மன்னர்கள். இந்தப் பின்னணியை கொண்டு பார்க்கும் பொழுது, பல்லவர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்த சோழர்கள் தமிழர்கள் ஆக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு.

    "சாளுக்கிய சோழர்கள்" என்பது, குலோத்துங்கனுக்கு பிந்திய சோழர்களை குறிப்பது அல்ல. ராஜ ராஜ சோழன் கூட சாளுக்கிய சோழ பரம்பரை தான். அதற்குக் காரணம், தென்னிந்தியாவில் சாம்ராஜ்யம் ஒன்றை அமைப்பதற்காக, சோழர்கள், கிழக்கு - மேற்கு சாளுக்கியர்களுடன் இராஜ தந்திர உறவுகளை பேணி வந்தனர். இன்று நாங்கள் சாளுக்கிய சோழர்கள் அவர்களை சாளுக்கிய சோழர்கள் என்று பிரித்து ஆராய்ந்து, இலகுவாக புரிந்து கொள்ளலாம். அது, அந்தக் காலத்தில் இருந்த, பிற சோழர் அரச பரம்பரைகளில் இருந்து, அவர்களை தனியாக பிரித்து அறிவதற்கான முயற்சி மட்டுமே. உண்மையில், அன்று எல்லோரும் தம்மைத் தாமே சோழர்கள் என்று தான் அழைத்துக் கொண்டிருப்பார்கள். எந்த சோழர்? என்று கேள்வி எழும் அல்லவா? மேலும், சோழர்கள் தமிழர்களா அல்லது தெலுங்கர்களா என்பது அவர்களது பரம்பரை சம்பந்தமானது.

    சோழர்கள் தமிழர்களின் பகுதிகளை ஆண்டார்கள் என்பதை நான் எங்கேயும் மறுக்கவில்லை. தமிழர்களை ஆண்டார்கள் என்ற காரணத்திற்காக, ஆட்சியாளர்களும் தமிழர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அன்று வாழ்ந்த, சாதாரண தமிழர்கள் அதைப் பற்றி எல்லாம் அக்கறைப் படுபவர்கள் அல்ல. இருபதாம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய தேசியவாதக் கண்ணாடி கொண்டு, நாம் பண்டைய காலத்தை பார்க்க முடியாது. அது தவறு. இன்றுள்ள சமுதாய அமைப்பு, அரசியல் கருத்துக்கள், அன்று இருக்கவில்லை. அன்றிருந்த சமுதாய அமைப்பு வேறு. அந்தக் காலத்தில், மன்னரோ, மக்களோ எந்த இனத்தை சேர்ந்தவர், எந்த மொழியை பேசுகிறவர் என்று யாரும் கவலைப் படவில்லை. அன்று யாருக்கும் அந்த உணர்வே இருக்கவில்லை.


இரவுப்பறவை said...

    //ஆரம்ப கால சோழர்கள், பல்லவர்களின் அடியாட் படையாக இருந்துள்ளனர். சோழ பரம்பரையின் முதலாவது மன்னன் விஜயாலன், பல்லவர்களின் பேரில் முத்தரையர்களுக்கு எதிரான போரை நடத்தியுள்ளான்//

    EARLY CHOLAS எனப்படும் ஆரம்பகாலச் சோழர்களின் காலம் தொடங்குவது 300 BCE.

    ஆனால் பல்லவர்களின் மொத்த காலமே (உங்கள் விக்கியை மூலமாக கொண்டால் கூட) 2-9 CE தான்.
    இவர்கள்(சோழர்கள்) அவர்களிடம்(பல்லவர்களிடம்) அடியாட்களாக இருந்தார்கள் என்கிறீர்களே இதற்கு தரவு என்ன?

    CE க்கும் BCE க்கும் உங்களுக்கு வித்யாசம் தெரியும்தானே?


கலையரசன் said...

    //EARLY CHOLAS எனப்படும் ஆரம்பகாலச் சோழர்களின் காலம் தொடங்குவது 300 BCE.//

    மன்னிக்கவும். இந்தக் குழப்பம் எனது தவறு தான். இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே, இது பிற்கால சோழர்கள் சம்பந்தமானது என்று குறிப்பிட்டு இருக்கிறேன். எனினும் கொஞ்சம் தெளிவாக எழுதி இருக்க வேண்டும்.

    பிற்காலச் சோழர்களின் ஆரம்ப கால சோழர்களை பற்றித் தான் அவ்வாறு குறிப்பிட்டேன். சங்க கால சோழர்களை அல்ல. பிற்கால சோழ பரம்பரையின் ஆரம்ப கால மன்னர்களான விஜயாலன் போன்றோர், பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசர்களாக இருந்துள்ளனர். பல்லவர்கள் உத்தரவுக்கு இணங்க போரிட்டு வந்தனர். அதனால் பல்லவர்களின் நம்பிக்கைக்கு உரிய சிற்றரசர்களாக இருந்துள்ளனர்.

    இதற்கு ஆதாரம், சோழர்களைப் பற்றிய அனைத்து வரலாற்று நூல்களிலும் எழுதப் பட்டுள்ளது


காரிகன் said...

    கலையரசன்,
    வழக்கம் போல எழுதுவதைப் போலே (இஸ்லாமிய சார்பாக) இதில் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டீர்களோ என்று தோன்றுகிறது. வரலாற்றை புரட்டிப் போடும் துணிச்சல் அதிகமாகவே இருக்கிறது உங்களிடம். என்ன ஒன்று. உங்கள் விருப்பங்களை எழுதுவதோடு கொஞ்சம் உண்மையையும் சேர்த்து எழுதலாமே.



Vijithan said...

    ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ் என்ற ஒரு மொழி தான் தென் இந்தியாவிலே இருந்ததாக வரலாறு சொல்கிறது.ஏனைய மொழிகள் தமிழில் இருந்து தோன்றியதாக சொல்லப் படுகிறது.நீங்கள் ராஜ ராஜ சோழன் மட்டும் தான் சோழர் தொடக்கம் என்பது போல் எழுதியிருக்கிறீர்கள்.1ம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே கரிகால சோழன் ஆட்சியும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சோழர் ஆட்சி இருந்த்தா வரலாறு கூறுகிறது.தமிழ் சோழர்கள் ஆந்திராவில் ஆட்சி செய்ததாக ஏன் எழுத முடியாது.ஊகிப்பது எல்லாம் சரியென்று எழுதாதீர்கள்.பிழையான தகவல்களை மக்களிடம் சேர்க்காதீர்