மதங்களும் கடவுளும்
மதங்கள் எதற்காகத் தோன்றியது, மதங்களின் மூலம் கடவுளைப் பற்றி பிரசாரம்செய்வதற்காகவா, அல்லது மதங்களின் பெயரால் குழுக்களாக மனிதர்களை பிரிப்பதற்கா, மதங்களை தோற்றுவித்தவர்களுக்கு பின்வரும் காலங்களின் மதம் மனிதர்களின் ஒற்றுமையை குலைக்கும் என்பது அறிந்திருக்குமா, அப்படிஅவர்கள் அறிந்திருந்தால் மதங்களையும் கடவுள்களையும் அடையாளம் காண்பித்திருப்பார்களா.
வரைமுறையற்ற வாழ்க்கையை வாழ்ந்த மனிதர்களுக்கு மதங்களைப்பற்றியும் கடவுளைப்பற்றியும் தெரிந்து கொள்வதற்கு பல நூறாயிரம் ஆண்டுகள் ஆனது, மதங்களும் கடவுளைப்பற்றிய செய்திகளும் மனிதனை ஒழுங்குபடுத்தவே கூறப்பட்டது, அப்படியென்றால் மதங்களைப்பற்றிய செய்திகள் பொய்யா என்றால் இல்லை, மனிதர்கள்தான் வகுத்துக்கொண்டனர். கடவுளைப்பற்றி சொல்லி வாழ்க்கையில் வரம்புகள் வரையறைகள் ஏற்ப்படுத்தப்பட்டது, அப்படியென்றால் கடவுளுக்கும் மதத்திற்கும் சம்பந்தமே இல்லையா என்றால் இல்லை என்று கூட பதில் கூறலாம். மதங்களை உருவாக்கும் முன்னர் இருந்த மக்களை வரம்புகுட்படுத்த உருவாகியது. மதங்கள், கடவுள் என்பதை அதற்க்கு காரணமாகவும் அல்லது அடிப்படையாகவும் கொண்டு வரம்புகள் வகுக்கப்பட்டது.
இன்றைய வாழ்க்கை முறையில் மதங்களையும் கடவுள்களையும் அடிப்படையாகக் கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையும் அதனால் ஏற்பட்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளும் பிரிவினை மற்றும் பாகுபாடுகளும், நன்மை தீமைகளையும் யாரும் வரையருக்காமலேயே மனிதர்கள் தங்கள் வசதிக் கேற்ப அமைத்துக்கொண்டிருப்பது போலவே அன்றும் மதங்களும் கடவுள்களும் கையாளப்பட்டு வந்திருக்கின்றது. கடவுளைப்பற்றி புகழ்பாடுவதற்கோ மத பிரச்சாரங்கள் செய்து கூட்டம் கூட்டி யாருக்கு அதிக கூட்டம் என்று பெருமைபட்டுக் கொள்வதற்கு மதங்களும் கடவுள்களும் உருவாக்கப்படவில்லை. மாறாக ஒழுக்கமும் வரையறைகளை உள்ளடக்கிய வாழ்வின் நெறிகளை எல்லோரும் இவற்றின் வாயிலாக அறிந்து கொண்டு அதன்படி தங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்லவே மதமும் கடவுளும் மனிதர்களால் கண்டறியப்பட்டது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடவுளின் பெயரால் மதக் கலவரங்கள், பல தவறுகள் என்று எண்ணிலடங்கா பிரச்சினைகள் நடப்பதை காணும் போது சிலர் கடவுளே இல்லை மதங்களே வேண்டாம் அவையெல்லாம் பொய் என்று இன்னொரு குழுவாக மாறியுள்ளதும் காலத்தின் கோலங்கள். அவ்வாறு சொல்லுவதுடன் நிற்காமல் ஒழுக்கமின்றி அல்லது தனி மனித ஒழுக்கங்களை மீறிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் போது பல எதிர்வினைகளை சந்திக்க நேருவதும் அதனால் பல வன்முறைச் சம்பவங்கள் பெருகுவதும் தற்காலத்தில் நாம் கண்டு கொண்டிருக்கும் மாற்றம். சட்ட திட்டங்களை அவமதிப்பதும் கடவுள் கிடையாது என்று ஒழுக்கமற்ற வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதால் வாழ்க்கை மிகவும் சோதனைக்குரியதாகி விடும். வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதால் பாவம் இல்லை என்ற எண்ணம் தோன்றும், அதன் முடிவு விபரீதமான விளைவுகளை ஏற்ப்படுத்துவது இன்றைய நிலை.