நீர்யானைகள் பற்றிய தகவல்கள்:-

நீர்யானைகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாலூட்டிகளாகும். இது ஒரு தாவர உண்ணி ஆகும். சிறிய புல்வகைகளே இதன் முக்கிய உணவு. நீர்த்தாவரங்களையும் உண்கின்றன. கூட்டங்களாக வாழும். ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும். ஒரு நீர்யானை கூட்டத்தை ஒரு பெரிய ஆண் நீர்யானை தலைமை தாங்கி நடத்திச் செல்லும். நீர்யானைகள் தாமாக மனிதரைத் தாக்குவதில்லை. ஆனால், அவற்றின் எல்லைக்குள் நுழைவோரை மூர்க்கமாக தாக்கக்கூடியவை. இவை 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இவை 3.5 மீட்டர் நீளமானவை. 1.5 மீட்டர் உயரமுடையவை. அளவில் யானைகளுக்கு அடுத்தப்படியாக பெரியவை. 1500 முதல் 3600 கிலோகிராம் எடையுடையவை. பெண் நீர்யானைகள் ஆண் நீர்யானைகளை விட சிறியவை. இரவில் நீரிலிருந்து வெளியேறும் இவை ஒரு நாள் இரவில் சுமார் 60 கிலோ உணவு உட்கொள்கின்றன. முக்கியமாக சூரியன் உதிப்பதற்குமுன் நீருக்கு திரும்பிவிடுகின்றன.
நீர்யானைகள் பெரும்பாலான நேரம் தண்ணீருக்குள்ளேயே இருக்கும். இவற்றின் வியர்வை சிகப்புநிற எண்ணெய் பசை போல் இருப்பதால் அதை ரத்தம் என மக்கள் தவறாக எண்ணுகின்றனர். இவற்றால் ஐந்து நிமிடம் வரை நீருக்குள்ளாகவே மூச்சுவிட முடியும். ஒரு பெண் நீர்யானை தனது ஏழு வயதில் இனப்பெருக்கத்திற்கு தயாராகிறது. நீர்யானைக் குட்டிகள் நீரினுள்ளேயே பிறப்பதால் தம் முதல் மூச்சுக்காகவே நீந்தி நீர்மட்டத்திற்கு வருகின்றன. நீருக்கடியிலேயே தாய்ப்பால் அருந்துகின்றன.