Author Topic: என் முதல் காதல் அனுபவம்!!!!  (Read 944 times)

Arul

  • Guest

என் முதல் காதல் அனுபவம்





   நான் எப்பொழுது அவனைப் பார்த்தேன் என்று நினைவில்லை. ஆனால் எங்கோ... எப்பொழுதோ... பார்த்திருக்கிறேன். நேற்று இரவு முழுதும் குப்புற படுத்தும், விட்டத்தைப் பார்த்தபடி மல்லாக்க படுத்தும் யோசித்தேன்.... யோசித்தேன்.... யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் ஞாபகம் வரவில்லை. பிறகு விட்டுவிட்டேன்.
   
ஆனால் அவன் முதன் முதலில் என் வீட்டிற்கு வந்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவன் முதன்முதலில் என் வீட்டிற்கு என் கணவருடன் தான் வந்தான். அப்பொழுது நன்றாக கொழு கொழு என்று இருந்தான். அன்று அவன் வந்தது அவ்வளவாக என்னைப் பாதிக்கவில்லை.

   அவனை நேராக என் கணவர் தன் அறைக்குள் அமர்த்தி விட்டார். அந்த அறைக்குள் நான் அவ்வளவாகப் போகமாட்டேன். அதனால் அவன் இருந்ததே ரொம்ப காலமாக கவனிக்க வில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் என் கணவர் எந்த நேரமும் அவனுடன் தான் பொழுதைப் போக்கினார்.

   அதனால் எனக்கும் அவருக்கும் ஒரு நாள் சண்டைக்கூட வந்தது. அப்பொழுது அவர், “உனக்கு என்ன தெரியும்? பத்தாம பசலி. வந்து கொஞ்ச நேரம் பழகிப்பார். அப்பொழுது தான் அருமை புரியும்“ என்று சொல்லித் திட்டிவிட்டு மீண்டும் அவனுடனே விளையாடினார். நிறைய விளையாட்டுகள் விளையாடுவார். பேரெல்லாம் ஞாபகம் இல்லை.

    நானும் சில நேரம் வேறு வழியில்லாமல் அவர், அவனுடன் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்பொழுது கூட அவன் என்னை ஈர்க்கவில்லை. ஆனால் அவன், என்னைக் கண்சிமிட்டிப் பார்ப்பான். நான் கண்டுக்காமல் இருப்பேன்.

    ஒரு நாள் அவனுடன் விளையாடிக் கொண்டிருந்தவர் ஒரு போன்கால் வந்ததும் அவனை அப்படியே விட்டுவிட்டு வெளியில் சென்று விட்டார். அன்று தான் அவனை நான் முதல்முதலில் தொட்டேன். தொட்டதும் ஏதோ என்னை ஏற்கனவே நன்றாகத் தெரிந்தவன் போல் நான், என்ன சொன்னாலும் அதன்படி கேட்டு நடந்தான்.

    நான் அவனை ஏதோ “பெரிய இவன்“ என்று நினைத்திருந்தேன். கடைசில் பார்த்தால்.... மிகவும் சாதாரணமானவனாகப் பழகினான். ஒரு சிலரைப் பழகப் பழகத் தான் பிடிக்கும் என்பது போல அவனிடம் பழகப் பழக எனக்கு அவனை ரொம்ம்ம்ம்ப பிடித்துப்போனது. சொல்லப்போனால் அப்பொழுது தான் அவன் என் மனத்தில் இடம் பிடித்தான்!!!!

    அதிலிருந்து நான் அவனுடன் விளையாட ஆரம்பித்தேன். அப்பொழுது அவனுக்குப் பிரென்சு மொழி மட்டும் தான் தெரியும். ஏதோ இரண்டாவது வழிமுறை கல்வி (செகண்ட் லாங்வேஜ்) பிரென்சு எடுத்துப் படித்திருந்ததால்... அவனிடம் பழகி விளையாட எந்தத் தடையும் இல்லை.

    தொடக்கத்தில் என் கணவர், நான் அவனுடன் விளையாடுவதைக் கண்டும் காணாதவராய் இருந்தார். ஆனால் போகப் போக நான் அதிக நேரம், ஏன்... இரவில் கூட அவனுடனே இருப்பதைக் கண்டு என்னைக் கண்டிக்க ஆரம்பித்தார். அப்பொழுதெல்லாம் எனக்கு அவர் மேல் கோபம் கோபமாக வரும்.

    அவர் கண்டிக்கும் பொழுதுதான் எனக்கு,  அவன் மீது அளவுக்கதிமான ஆசை வந்தது. அவரின் கண்டிப்பைக் கூட அலட்சியம் செய்துவிட்டு அவனுடன் பொழுதைப் போக்கினேன். இதனால் இரவில் தூக்கம் கெட்டது. முகம் சோர்வடைந்தது.

    இதைக்கண்ட என் கணவர் ஒருநாள், அவன் இருந்த அறையைப் பூட்டிச் சாவியை வேலைக்கு எடுத்துச் சென்றுவிட்டார். எனக்கு வந்தது பாருங்க கோபம்..... கோபம்ன்னா கோபம் அவ்வளவு கோபம். ஆனால்... கோபம் வந்து என்ன செய்வது...? பேசாமல் கவலையுடன் காத்திருந்தேன். அப்பொழுது தான் நான் அவன்மேல் வைத்த காதலை உணர்ந்தேன்.

    என் கணவர் வந்ததும் அவரிடம் சண்டை போட்டேன். சாவியைக் கொடுக்கும் படி கேட்டேன். ஆனால் அவர் என்னை அலட்சியப் படுத்தினார். நான் அழுதேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை. இரண்டு நாள் போனது... அவனைப் பார்க்காமல் எனக்குச் சாப்பிட, தூங்க... எதுவும் பிடிக்கவில்லை. ஒரு ஐடியா வந்தது. ஒரு கள்ளச் சாவி தயாரித்தேன். (ஒன்றுமில்லை... பூவைக்கும் சைடுஊசிதான்) சற்று கடினப்பட்டு திறக்க திறந்து கொண்டது. அதிலிருந்து அவர் வேலைக்குப் போனதும் நான் பூட்டைக் கள்ளசாவி போட்டுத் திறந்து அவனுடன் விளையாடினேன்.

    நான் இப்படியே இருந்திருக்கலாம்.... நேரம் யாரைவிட்டது? ஒரு நாள் இரவு என் கணவர் தூங்கும் பொழுது, எனக்கு அவனுடன் விளையாடும் ஆசை வந்தது. எழுந்து போய் அவருக்குத் தெரியாமல் கள்ளசாவி போட்டு திறந்து விளையாடினேன். அவர் பார்த்து விட்டார். ஆனால் எதுவும் சொல்லவில்லை!

   ஆனால் மறுநாள், நான் தூங்கி எழுந்துப் பார்த்தால் அவனைக் காணவில்லை. வீடு முழுதும் தேடினேன்... தேடினேன்.... அவனுடன் என் கணவரையும் காணவில்லை.. அவர் வந்ததும் கோபமாகக் கேட்டேன். “எனக்குத் தெரியாது“ என்று பொதுவாகச் சொல்லிவிட்டார். எனக்குத் தெரியும். இது என் கணவருடைய வேலை தான் என்று.

   அதனால் நான் அவரிடம் கோபம் கொண்டு பேசாமலேயே இருந்தேன். ஒரு மாதம் ஓடியது. அவனைப் பார்க்காத கவலையில் இரண்டு கிலோ இளைத்தும் விட்டேன். (அவர் அப்படியே விட்டுவிட்டு இருந்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் இளைத்தாவது இருப்பேன்)

    நான் கவலை படுவதைப் பார்த்தவர், திரும்பவும் அவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். ஆனால் வந்தவன் இப்பொழுது நன்கு மாறியிருந்தான். உடல் மெலிந்து ஒரு கல்லூரி மாணவன் போல் சுறுசுறுப்பாக இருந்தான். இவனுக்கு நன்றாக தமிழ் தெரிந்தது. இணையத்தில் சேர்ந்து இருந்ததால் இவனுக்கு நிறைய உலக விசயங்கள் தெரிந்திருந்தது. இவனுடன் பழகப் பழக நாமும் ஏதோ புத்திசாளி ஆகிவிட்டது போன்ற ஓர் உணர்வு.

   அதனால் நான் இவனுடன் அதிகம் விளையாடவில்லை. அதற்கு பதில் நிறைய உலக விசயங்களைக் கற்றுக் கொடுத்தான். இப்பொழுது இவனிடம் இருந்த காதலுடன் மறியாதையும் அதிகமாகிது.

   அந்த நேரத்தில் என் ஆசிரியர், “விநாயக சதுர்த்தி வருகிறது. அதனால், “கம்பன் இதழில்“ பதிவிட ஓர் அகவல் எழுதிவிடு“ மாறு என்னிடம் சொன்னார். எனக்கு அவன் மீது இருந்த ஆசையில் காதலில்... விநாயகரையும் இவனையும் சேர்த்து வைத்து ’இருவரும் ஒன்று’ என அகவல் எழுதி அனுப்பிவிட்டேன்.

   அனுப்பியப் பிறகு அவர் என்னைத் திட்டுவார் என்று காத்திருந்தேன். ஆனால் அவர் என்னைப் பாராட்டினார். (அந்த அகவலை ஏற்கனவே நான் வெளியிட்டு இருந்தாலும் நாளை திரும்பவும் வெளியிடுகிறேன். முன்பு இதைப் படிக்காதவர்கள் படித்துப் பாருங்கள்.)

   இது தாங்க என் முதல் அனுபவம். ஆனால் காதல் எல்லாம் ஒருவரிடம் மட்டும் தான் வரும் என்பது பொய்யினு நினைக்கிறேன். ஏன் என்றால்... நேற்றுவரை எனக்கு இவன் மீது இருந்த காதல் இன்று கொஞ்சம் குறைந்துவிட்டது. காரணம் நேற்று தான் கடையில் இன்னொருவனைப் பார்த்தேன். ரொம்ப அழகாக இருந்தான். அவனுக்கு இன்னும் அதிக விசயங்கள் தெரிந்திருக்கிறது. அவனைக் கண்டதிலிருந்து அவன் நினைவாகவே இருக்கிறது.

    இங்கிருப்பனை யாராவது விசயம் தெரியாதவர்களிடம் தள்ளி விட்டு அவனைக் கொண்டு வந்துவிட வேண்டும். அவனுக்காக நான் எத்தனை நாள் அழ வேண்டுமோ... சாப்பிடாமல் இருக்க வேண்டுமோ தெரியலை.


    ஐயையையோ.... நம்மை “முதல் கணினி அனுபவத்தைத்“ தானே எழுதனும் இப்படித் தலைப்பிட்டு எழுதிவிட்டேனே.... சரி சரி பரவாயில்லை. வாசிக்கும் நண்பர்களே.... தயவு செய்து “என் முதல் கணினி அனுபவம்“ என்று தலைப்பை மாற்றி வாசித்துவிடுங்கள்.....


நன்றி
தோழி அருணா செல்வம் அவர்களுக்கு

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
Re: என் முதல் காதல் அனுபவம்!!!!
« Reply #1 on: February 11, 2014, 09:31:56 AM »
:D hahaha .. nice one