« on: December 27, 2013, 04:07:43 PM »
புட்டு

தேவையானவை:
புழுங்கலரிசி - 2 டம்ளர். தேங்காய் துருவல் - கால் மூடி, சர்க்கரை - 2 கைப்பிடி அளவு (அல்லது தேவைக்கேற்ப), ஏலக்காய் - 4 (பொடித்துக் கொள்ளவும்), நெய் (விருப்பப்பட்டால்) - தேவைக்கேற்ப, தண்ணீர் - இரண்டு கை அளவு, உப்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை:
புழுங்கலரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து ஃபேனின் கீழ் ஈரம் போக காய வைக்க வேண்டும். பின்பு, இதை மெஷினில் கொடுத்து புட்டுக்கு ஏற்றாற்போல அரைத்து வைத்துக் கொள்ளவும். இட்லிப் பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, இட்லித் துணியை நனைத்துப் பிழிந்து இட்லித் தட்டின் மேல் விரித்துவிடுங்கள். இனி, இரண்டு கை அளவு தண்ணீர் எடுத்து அதில் கால் டீஸ்பூன் உப்பை சேர்த்து கலக்கி, இந்த நீரை மாவின் மேல் தெளித்து பிசிறிக் கொள்ளுங்கள். பிசிறிய மாவை இட்லித் துணியின் மேல் பரப்பினாற்போல தூவி, மூடி போட்டு பத்து நிமிடம் வேகவிடுங்கள். வெந்ததும் மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, துருவிய தேங்காய், ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை (தேவைக்கேற்ப), நெய் விட்டுக் கலந்து சாப்பிட்டால்... புட்டு தேவாமிர்தமாக இருக்கும்.
உங்களுக்கு காலையில் அதிகம் நேரம் இருந்தால், புட்டுக்கு சைட் டிஷ்ஷாக மசால் வடை செய்து, இதனுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
« Last Edit: December 27, 2013, 04:12:12 PM by MysteRy »

Logged