Author Topic: ஆன்மீகத்திற்கு திருமணம் தடையா?  (Read 1618 times)

Offline Global Angel

ஆன்மீகத்திற்கு திருமணம் தடையா?

எனக்கு தெரிந்து சிறந்த ஆன்மீகவாதிகளாக கருதப்படும் யாரும் திருமண பந்தத்தில்  இருந்துகொண்டு ஆன்மீக முன்னேற்றம் அடைந்ததாக தெரியவில்லை.


இங்கே நான் ஆன்மீகம் என்பது அகத்தவம் அல்லது அகத்தாய்வு செய்து தான் யார் என்ற இரகசியத்தை உணர்ந்து யோகத்தின் மூலம்   இறையடி சேர்தலாகும்.

அதேபோல் திருமணம் புரியாமல் அகத்தவம் செய்தவர்கள் அனைவரும் இறையடி சேர்ந்தார்கள் என்றும் சொல்வதற்கில்லை.

புத்தர் திருமண வாழ்வை உதறி தள்ளியவர்.
ஏசுநாதர் திருமணம்  செய்து கொண்டு வாழ்ந்ததாக  தெரியவில்லை.
வள்ளலார், ராகவேந்திரர் இவர்கள் திருமண பந்தத்தில் நீடிக்கவில்லை.

இப்படி ஏராளமான உதாரணங்கள் சொல்லலாம்.
நான் இவர்கள் மட்டும் தான் உண்மையான ஆன்மீகவாதிகள்  என்று சொல்லவில்லை. இதை ஒரு உதாரணத்திற்காக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
இவர்கள் நமக்கு ஆன்மீக வாதிகளாக அறிமுகப்படுத்தப்படுள்ளனர் அல்லது சந்தைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சொல்லலாம். சந்தைப்படுத்தபடாத எண்ணற்ற ஆன்மீகவாதிகள் இவர்களை விட சிறந்த சிந்தனைகளை வாழ்வியலை கொண்டவர்களாக கூட இருந்திருக்கலாம்.

சில சித்தர்கள் சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களும் நிலையான திருமண வாழ்வை கொண்டிருக்கவில்லை.

சில ரிஷிகள் திருமண பந்தத்தில் இருந்துள்ளனர் என்று சில செய்திகள் கிடைத்தாலும் அவர்களுக்குள்ளான உறவுமுறை எப்படி  இருந்தது, அவர்கள் யோகத்தின் மூலம் இறையடி சேர்ந்தார்களா என்று (எனக்கு) தெரியவில்லை.

திருமணம் ஏன்  அகத்தவம் புரிய  தடையாக உள்ளது?

அகத்தவம் எனக்கு தெரிந்து கடுமையான (ஒரு விதத்தில் இனிமையான) பாதை. எப்படி ஒருவன் காதலிக்கும் பொழுது அந்த பெண்ணின் நினைப்பாகவே பித்துப் பிடித்தவன் போல் இருக்கின்றானோ அதைப்போலவே அகத்தவம் புரிபவனும் இறை சிந்தனை  மட்டுமே கொண்டவனாக இருப்பான். 

ஒரு பெண், குடும்பம்  தரும் இன்பத்தை விட இறைசிந்தனை அல்லது அந்த பயணம் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதால் அவன் மற்றவற்றை துச்சமாக மதிக்க ஆரம்பித்து விடுவான்.

திருமணத்தின்  மூலம் பற்று ஏற்ப்படுகிறது. மனைவி மீது பற்று, குழந்தைகள் மீது பற்று பிறகு பேரகுழந்தைகள் மீது பற்று.

மனைவி  என்று வந்தவுடனே சில கடமைகளும் கூடவே வந்துவிடுகிறது. அவளுக்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். பிறகு அவளுக்கென்று  சம்பாதிக்க வேண்டும். இந்த இரண்டு கடமைகள் செய்வதற்கே ஒருவனின் நேரம் போதுமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். பிறகு எங்கே  அகத்தவம் புரிவது?

அந்த பெண்ணை விட்டு விட்டு இவன் மட்டும் அகத்தவம் புரிகிறேன் என்று எந்நேரமும் கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் அந்த பெண்ணின் நிலை?

சரி மனைவியையும் அகத்தாய்வு  புரிய வைத்தால் என்ன என்று தோன்றலாம். ஆனால் அப்படிப்பட்ட மனைவி கிடைப்பதற்கு  வரம் வாங்கி வந்திருந்தாள் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது.

அப்படியும் ஒருவனுக்கு அகத்தவம் செய்வதற்கு ஏற்றார் போல மனைவி அமைந்து விட்டால் அவன் கொடுத்து வைத்தவன் தான். இருப்பினும் அவர்கள் பிள்ளை பெற்றுக்கொண்டு அகத்தாய்வை  தொடர முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.

 சரி பிள்ளையே பெறாமல் இருந்தால் என்ன என்று தோன்றினாலும் அவர்கள் சமுதாயத்தின் ஏளனமான பேச்சுக்கும், பார்வைக்கும் ஆளாக நேரிடும். இதனாலோ என்னவோ அன்று திருமணம் செய்து கொண்ட ரிஷிகள் கூட காட்டிலே தான் வாழ்ந்துள்ளனர். அவர்கள் சமூகத்தோடு வாழ்ந்ததாக தெரியவில்லை.

இதை அனைத்தும் சமாளிக்கும் திறன் கொண்ட தம்பதிகளால் மட்டுமே அகத்தவத்தின்  மூலம் இறையடி சேர முடியும்.

ஆக ஆன்மீக பயணத்திற்கு திருமண வாழ்வு தடையா என்றால் பொதுவாக பார்க்கும் பொழுது தடை என்று தான் தோன்றுகிறது. அரிதினும் அரிதாக சில தம்பதிகளுக்கு மட்டும் திருமணம் தடையாகாமல் வரமாகலாம்.
தடையை வரமாக்கி அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன்.