கண்ணில் ஏன் மைதீட்டவில்லை
என்கிறாயா தோழி
சொல்கிறேன்
கண்ணுக்குள் என் காதலர்
அவர் முகத்தில்
கரி பூசலாமா?
என் சூரியன் மீது
இருட்டை தடவலாமா?
அது சரியாகுமா?
வீட்டுக்குள் அவர்
வெளியில் எதற்கு
வரவேற்புக்கோலம்?
கண்ணை விட
மென்மையானவர் என் காதலர்
கோல்பட்டால் வலிக்காதா?
அவரை வைத்த இடத்தில்
வேறொன்றை வைத்தால் அது
கற்புக்கு இழுக்காகாதா?