தேவையான பொருட்கள்:
வடைக்கு...
பாசிப்பருப்பு - 250 கிராம் (இரவில் ஊற வைத்துக் கொள்ளவும்) உப்பு - தேவையான அளவு
புளி சட்னிக்கு...
புளிச்சாறு - 1 கப் தண்ணீர் - 1/2 கப் உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மற்ற பொருட்கள்...
தயிர் - 100 கிராம் சர்க்கரை - 4 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கருப்பு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 கப்
செய்முறை:
முதலில் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை நன்கு சுத்தமாக கழுவி, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து, உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள மாவை உருண்டையாக்கி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பௌலில் தயிர், சர்க்கரை, உப்பு, சீரகப் பொடி, மிளகாய் தூள் சேர்த்து கலந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியில் புளிச்சாறு மற்றும் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதித்ததும் உப்பு, சர்க்கரை, மிளகாய் தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து, கலவை கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இறுதியில் ஊற வைத்துள்ள வடைகளில் உள்ள தண்ணீரை பிழிந்துவிட்டு ஒரு அகன்ற பௌலில் வைத்து, அதில் தயிரை ஊற்றி, அதன் மேல் லேசாக புளி சட்னியை ஊற்றி பரிமாறினால், தயிர் பல்லே ரெடி!!! இதன் மேல் லேசாக கருப்பு உப்பு, சீரகப் பொடி, மிளகாய் தூள் தூவி பரிமாறினால் இன்னும் சூப்பராக இருக்கும்.