முடிவற்ற அப்பாதையின் கடைக்கோடியை கண்டுவிடும் எண்ணத்திலே…
நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்…..
நாகரீக கப்பலொன்றில் நானேறி
திசையறியா நகரம் வந்தடைந்தேன்,
ஊர்புற பல ஏக்கரை விற்றுத்தள்ளி, பட்டம் படித்து
பன்னாட்டு நிறுவனத்திலே முதல் தேதியினை நோக்கியோடிக்கொண்டிருக்கிறேன்..
பேருந்து நெரிசலிலே வயோதிகரின் வாட்டம் புரியாமல்
நளினித்தபடி அமர்ந்தோடிக்கொண்டிருக்கின்றேன்..
பசிக்கழும் குழந்தையினை பக்கத்து வீட்டில் கொண்டபடி,
பாலாடைக்கட்டிகளை தினம் சுவைத்தோடிக்கொண்டிருக்கின்றேன்
பல்லட்ச வீட்டை மறைத்திருந்த முருங்கையை வெட்டி எக்காளித்து,
முற்றத்தில் குரோட்டன்ஸ் விதைத்தோடிக்கொண்டிருக்கின்றேன்
அகரங்களை புறந்தள்ளி என் மழலை ஆங்கிலம் பேசுவதை
நாகரீகமென ரசித்தோடிக்கொண்டிருக்கின்றேன்..
மருது சகாப்தம் நான் மறைத்து பல ஹாரிபாட்டர்களை
என்மகனுக்கு அளித்தோடிக்கொண்டிருக்கின்றேன்..
சிரித்துப் பேசும் முகில்களையும், அம்புலியையும் கேளிக்கைதொலைக்காட்சிகளில் மட்டும்,
என் மகளை பழக்கியோடிக்கொண்டிருக்கின்றேன்..
யுகங்கள் கழித்து என் மனை சேரும் என் பெற்றோர்களை இனங்காணமல்
அப்பா யாரோ வந்திருக்காங்க என் வீறிட்டபடி என்னறை நோக்கி ஓடத்துவங்கிய
என் மகளோடு நானும் ஓடிக்கொண்டிருக்கின்றேன்…