தென்னிந்தியாவில் வடை மிகவும் பிரபலமானது. அதிலும் கிராம பகுதிகளில் சென்றால், காலை மற்றும் மாலை வேளைகளில் வடை, பஜ்ஜி போன்றவற்றை வீட்டில் செய்தோ அல்லது கடைகளில் வாங்கியோ சாப்பிடுவார்கள்.
அத்தகைய வடையில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான சட்னி செய்வதற்கு பயன்படுத்தும் பொட்டுக்கடலையை வைத்து, வித்தியாசமான சுவையில் ஒரு வடை செய்து சாப்பிடுவோமா!!!
தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை - 1/2 கப்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரி - சிறிது
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்ஸியில் பொட்டுக்கடலை, முந்திரி, கசகசா, சோம்பு போட்டு, நன்கு நைஸாக அரைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடேறியதும், அதில் பிசைந்து வைத்துள்ள மாவுக் கலவையை எலுமிச்சை பழ அளவில் எடுத்து, லேசாக தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான பொட்டுக்கடலை வடை ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.