Author Topic: எட்டிலிருந்து எண்பது வரை!-டிச., 24 – வைகுண்ட ஏகாதசி  (Read 1351 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
"எங்கும் உளன் கண்ணன்’ என்கிறார் நம்மாழ்வார். கண்ணன் மட்டும் தானா! நரசிம்மரும் எங்கும் வியாபித்திருப்பவர் தான். "எங்கேயடா உன் ஹரி?’ என்று இரணியன் கேட்டதும், பிரகலாதன் என்ன பதில் சொல்லப் போகிறானோ என்று, திருமாலுக்கு பயம் வந்து விட்டது. அதனால், உலகிலுள்ள எல்லா பொருட்களிலும், தூசு, துரும்பில் கூட வியாபித்து நின்றாராம். பிரகலாதன் தூணைக் காட்ட, தூணை பிளந்து கொண்டு வெளிப்பட்டான். இரணியன் வதம் முடிந்து, சமாதானமான நரசிம்மர், "குழந்தாய்… நீ ஏன் தூணைக் காட்டினாய்? ஒரு துரும்பைக் காட்டியிருக் கலாமே… தூண் என்றதால், உன் தந்தை அதை உடைக்கும் வரை, நான் உனக்கு உதவுவதற்கு ஓடிவர காலதாமதம் ஆனதல்லவா… துரும்பு என்றால் உடனே உடைத்துப் போட்டிருப்பான். நான் உடனே பிரசன்னமாகி இருப்பேனே…’ என்றார்.
தன் நிஜ பக்தனுக்கு உதவுவதற்கென்றே காத்திருக்கும் திருமால் ஸ்தலங்களில், வைகுண்ட ஏகாதசி விழா பிரசித்தம். திதிகளில் 11வதாக வருவது இது. ஏகம்+தசம் என்று பிரிக்கப்படுவதே, ஏகாதசி ஆயிற்று. ஏகம் என்றால் ஒன்று. தசம் என்றால் பத்து. பத்தும் ஒன்றும் பதினொன்று. காயத்ரிக்கு மேல் மந்திரமில்லை, அம்மாவுக்கு மிஞ்சிய தெய்வமில்லை; காசியை விட உயர்ந்த தீர்த்தமில்லை, ஏகாதசிக்கு உயர்ந்த விரதமில்லை என்று, இந்த விரதத்தின் மகிமை பற்றி கூறுவர்.
ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க, குறைந்தபட்ச வயது எட்டு. அதிகபட்ச வயது 80. ஆண், பெண் வித்தியாசமில்லை. இவர்கள் வைகுண்ட ஏகாதசி மட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகளை அனுஷ்டிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. இதை ஒரு காலத்தில் அனுஷ்டிக்கவும் செய்தனர்.
தர்ம சாஸ்திரத்தில், "அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய’ என்று இதை சொல்லியிருக்கின்றனர். அஷ்டம் என்றால் எட்டு. வர்ஷாதிக என்றால் எண்பது. மர்த்ய என்றால், மனிதனாகப் பிறந்த எல்லாரும். இதிலே இன்னொரு நன்மையையும் பெரியவர்கள் கண்டனர். நம் தேசமே ஒரு பொழுது சாப்பிடாமல் இருந்தால், உணவு மிச்சம். இதனால், தேவை குறையும்.
சாப்பிடாமல் எப்படி இருக்க முடியும் என்று ஒரு கேள்வி எழும். நம்மால் முடியும் என்று தொடங்கப் படும் எந்தச் செயலும் தோல்வியடைவதில்லை. மகாராஷ்டிராவில், பச்சைக் குழந்தைகளுக்கு கூட, ஏகாதசியன்று தாய்மார்கள் பால் கொடுக்காமல் இருந்ததும், அந்த குழந்தைகள், இறையருளால் நன்றாக இருக்குமென்று நம்பியதும், அவர்களின் மன உறுதியையே குறிக்கிறது.
எதுவுமே முடியாது என்கிற பட்சத்தில், ஒரு வேளை பால், பழம். இன்னொரு வேளை பழச்சாறு அல்லது சத்துமாவு கரைத்துக் குடிக்கலாம். இரவில் மட்டும் இட்லி அல்லது உப்புமா. எக்காரணம் கொண்டும் சாதம் சாப்பிடக் கூடாது. இதுதான் ஏகாதசிக்குரிய விதிமுறை.
"எங்கள் வீட்டில் தீட்டு, இதனால், ஏகாதசி விரதம் இருக்க முடியாது’ என்று கூட யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில், தீட்டு உள்ளவர்களும் இந்த விரதத்தைக் கைக்கொள்ள சாஸ்திரம் கட்டளையிடுகிறது. ஆரோக்கியமான உடற்தகுதியுள்ள எல்லாரும் இதை அனுஷ்டித்துப் பாருங்கள். ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் செல்வது மரபு. ஏனெனில், மற்ற கோவில்களில் இருப்பவர் பெருமாள். இங்கிருப்பவர் பெரிய பெருமாள். ராமபிரான், இத்தலத்து ரங்கநாதரை வழிபட்டிருக்கிறார். பெருமாளே, பெருமாளை வழிபட்டதால், "பெரிய பெருமாள்’ எனப்படுகிறார். ஸ்ரீரங்கம் செல்ல முடியாவிட்டாலும், உள்ளூர் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பின் போது பங்கேற்று, திருமாலின் திருவருளைப் பெறுங்கள்.