முருக்கைக்காய்ப் பிரட்டல்
தேவையான பொருட்கள்
1. முருங்கைக் காய் - 2
2. உருளைக் கிழங்கு பெரியது - 1
3. பெரிய வெங்காயம் - 1
4. தக்காளி -4
5. பச்சை மிளகாய் - 1
6. பூண்டு – 2
7. வெந்தயம் - 1 ரீ ஸ்பூன்
8. தேங்காய்த் துருவல் - 1 கப்
9. மிளகாய்ப்பொடி – 1 ரீ ஸ்பூன்
10. தனியாப்பொடி – 1/2 ரீ ஸ்பூன்
11. சீரகப்பொடி - 1/2 ரீ ஸ்பூன்
12. மஞ்சள்பொடி சிறிதளவு
13. உப்பு தேவைக்கு ஏற்ப
தாளித்துக்கொள்ள
1. கடுகு சிறிதளவு
2. உழுத்தம் பருப்பு - 1/2ரீ ஸ்பூன்
3. ரம்பை ஒரு துண்டு
4. கறிவேற்பிலை சிறிதளவு
5. தாளிக்க எண்ணெய் - 2 ரேபில் ஸ்பூன்
செய்முறை
முருங்கைக்காயை சின்ன விரலளவு துண்டங்களாக வெட்டி எடுங்கள். கிழங்கையும் தக்காளியையும் தனித்தனியே துண்டங்களாக வெட்டி வையுங்கள். வெங்காயத்தை சிறியதாக வெட்டுங்கள். மிளகாயை நீளவாட்டில் 2 துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். உள்ளியை பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய்த் துருவலிலிருந்து 2 கப் பால் தயாரித்துக் கொளளுங்கள்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை விட்டு கடுகு உழுத்தம் பருப்புப் போட்டு, உள்ளிப் பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின்பு வெந்தயம் ரம்பை கருவேற்பிலை போட்டு முருங்கைக்காய்களைக் கொட்டி 2 நிமிடங்கள் வதக்குங்கள். சற்றுப் பச்சை வாசம் போக பாலூற்றி கிழங்கு சேர்த்து 9-13 வரையான பொருட்களைச் சேர்த்துக் கிளறி, இறுக்கமான மூடி போட்டு அவிய விடுங்கள்.
5 நிமிடத்தின் பின் திறந்து பிரட்டி விடுங்கள். மீண்டும் மூடி போட்டு 2 நிமிடம் அவிய விடுங்கள்.
2 நிமிடத்தின் பின் திறந்து தக்காளி சேர்த்து திரும்பவும் மூடி, அடுப்பைக் குறைத்து 5 நிமிடம் விடுங்கள்.
இப்பொழுது திறந்தால் இறுக்கமாக வந்திருக்கும். அடியில் சற்று குழம்பு இருந்தால் திறந்தபடி விட்டுப் பிரட்டி, குழம்பு நன்றாக வற்றி வரள இறக்குங்கள்.
முருங்கைக் காய்களின் மேற் தோலும் மென்மையாக வந்து விடும். மணமும் ஊரைக் கூட்டும்.