அனைவருக்குமே எது ஆரோக்கியமான பழக்கம், ஆரோக்கியமற்ற பழக்கம் என்ற ஒரு அடிப்படை அறிவு இருக்கும். ஆனால் அவ்வாறு இருக்கும் எண்ணத்தில் சில சமயங்களில் ஆரோக்கியமானது கூட ஆரோக்கியமற்றதாக இருக்கிறது. எப்படியெனில் எந்த ஒரு செயலுக்கும் ஒரு லிமிட் இருக்கிறது. அதை செய்ய வேண்டிய அளவு செய்தால் உடலுக்கு நல்லது. ஆனால் அதையே அளவுக்கு அதிகமாக செய்தால், தீங்கில் தான் முடியும். அப்படி நாம் தினமும் செய்யும் பழக்கங்களில், சில உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் உடல் ஆரோக்கியத்திற்காக சுத்தம் சுத்தம் என்று சிலர் உயிரையே விடுவது போல், அவ்வளவு சுத்தத்துடன் இருப்பார்கள். அவர்கள் சுத்தமாக இருப்பதுடன், தம் வீட்டிற்கு வருபவரிடமும் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.
மேலும் சிலர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று வீட்டில் இருக்கும் குழந்தைகளைக் கூட சுதந்திரமாக விளையாட விடமாட்டார்கள். இதனால் குழந்தைகள் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் அவர்களுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு கூட ஏற்படும். ஆகவே உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்காக சுத்தம் நிச்சயம் இருக்க வேண்டியது தான். ஆனால் அளவுக்கு அதிகமான சுத்தம் உடலுக்கு வராத வியாதிகளைக் கூட வரவைத்துவிடும்.
இப்போது எந்த ஆரோக்கியமான பழக்கங்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கின்றன என்றும், அதனால் உடலுக்கு எந்த நோய் வரும் வாய்ப்பு உள்ளது என்றும் பார்ப்போமா!!!
ஆரோக்கிய உணவுகள்
அதிகமான அளவில் வைட்டமின் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று அவற்றை அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அளவுக்கு அதிகமானால், அதுவே குமட்டல், வயிற்றுப்போக்கு, முறையற்ற குடல் இயக்கம், சரும அலர்ஜி மற்றும் ஏன் புற்றுநோய் போன்றவற்றை கூட ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
சுத்தம்
எதிலுமே அதிக சுத்தத்துடன் இருப்பது கூட உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் வீட்டை அடிக்கடி தினமும் ஒரு முறைக்கு இரு முறை துடைத்தால் மட்டும் நோய்கள் வராதா என்ன? நிச்சயம் வரும். எப்படியெனில் பொதுவாக பாக்டீரியாக்கள் மற்றும் இதர கிருமிகள், ஈரமான இடங்களில் தான் அதிக அளவில் வளரும். ஆகவே இதுவும் ஒருவித ஆரோக்கியமற்றதே.
தண்ணீர்
அனைவருக்குமே குறைந்த அளவில் தண்ணீர் குடித்தால், உடலுக்கு ஆபத்தானது என்று தெரியும். ஆனால் அதையே அளவுக்கு அதிகமாக குடித்தால், உடலில் உள்ள சோடியத்தின் அளவு குறைந்துவிடும். இதனால் குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை ஏற்படும்.
பல் துலக்குதல்
பற்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்து, ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் பற்களை துலக்குவோம். ஆனால் அவ்வாறு அடிக்கடி பற்களை துலக்கினால், பற்களில் உள்ள எனாமல் அழிந்துவிடும். பின் பற்கள் அதிக சென்சிட்டிவ் ஆகிவிடும்.
வலி நிவாரணிகள்
உடலில் ஏதேனும் சிறு வலிகள் ஏற்பட்டாலும், சிலர் உடனே மருந்து மாத்திரைகளை சாப்பிடுவார்கள். ஆகவே உடலில் எந்த இடத்தில் வலி ஏற்பட்டால், அப்போது அதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அவை உடலில் நிறைய நோய்களை ஏற்படுத்தும். சில சமயங்களில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.