உண்டு என்பதிலும் உள்ளான்
இல்லை என்பதிலும் உள்ளான்
இறைவன்..
உண்டு என்பதற்கு உடன்பட்டுத்தான்
இல்லை என்கிறோம்
இல்லை என்பதற்கு உடன்பட்டுத்தான்
உண்டு என்கிறோம்..
உண்டும் இல்லையும் ஒன்று
இரண்டிலும் இறைவன் உண்டு..
பிறக்கும் முன் நாமில்லை
இறந்தப் பின் நாமில்லை
எனினும் இன்று நாமிருப்பது உண்மை..
இவ்வாறே இறைமையும்..
எங்கும் இருப்பவனை
இங்கிரு என கோவில் அடைப்போம்
வேண்டுதல் வேண்டாமை இலானுக்கு
வேண்டுதலாய் பொன் பொருள் படைப்போம்
பேரண்டம் ஆக்கியவனை
ஊரண்ட விடோம்
இருவினைக் கடந்தவனை
இருக்கும் பேதங்களால் பிரிப்போம்..
உயிர் கொடுத்தவனுக்கு
உயிர் பலிக் கொடுப்போம்..
ஒரு நாள் இறைவனையும் எரிப்போம்
தேவதூஷனம் என்போம்..
பிறகொரு இறைவனை தேடி திரிவோம்..