Author Topic: ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! ஆய்வில் எச்சரிக்கை  (Read 886 times)

Offline kanmani

தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, "டிவி' பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தினசரி 6 மணிநேரம் டிவி பார்ப்பவர்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறைகிறது. எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைக்கு தொலைக்காட்சி பெட்டி இல்லாத வீடுகளே இல்லை. நடைபாதையில் வசிப்பவர்கள் கூட ஏதாவது ஒரு வகையில் தொலைக்காட்சியை பார்த்து பொழுதை கழிக்கின்றனர். இந்த தொலைக்காட்சி மனிதர்களின் நேரத்தை கொல்வதோடு உடல் நலத்திற்கும் வேட்டு வைக்கிறது. இது குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற குயின்ஸ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் மக்கள் தொகை நலன் குறித்தான பள்ளி ஆய்வு மாணவர்கள், 25 வயதுக்கு மேற்பட்ட 11 ஆயிரம் பேரிடம், தொலைக்காட்சி பார்ப்பது குறித்த ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவில் அவர்கள் எட்டு ஆண்டுகளில், 9.8 பில்லியன் மணி நேரம், டிவி பார்த்துள்ளதும், அதன் மூலம், இரண்டு லட்சத்து, 86 ஆயிரம் மணி நேரம் அவர்களது ஆயுள் குறைந்து விட்டதும் தெரிந்தது. இதன் மூலம் ஒரு மணி நேரம், "டிவி' பார்த்ததால், 22 நிமிடங்கள் ஆயுள் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. இது ஒரு மணி நேரத்தில், இரண்டு சிகரெட்டுக்கள் புகைத்தால் ஏற்படும் பின் விளைவிற்கு ஒப்பானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தொடர்ந்து டிவி பார்த்த காரணத்தினால் அவர்களுக்கு இதயநோய், நீரிழிவு, உடல் எடை அதிகரித்தல் போன்ற பல்வேறு உடல் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதும் தெரிந்தது. இது தவிர, உரிய காலத்திற்கு முன்பாகவே இறப்பதற்கான வாய்ப்பு, 8 சதவீதம் அதிகரிப்பதும் தெரிய வந்தது.

ஆய்வு நடத்தப்பட்ட ஆண்டுகளுக்கு இடையே, புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை சரிவு அடைந்துள்ளதும், "டிவி' பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை என்பதும் தெரிய வந்தது.எனவே டிவி பார்த்து நேரத்தையும், ஆயுளையும் கொல்வதை விட உடற்பயிற்சி மேற்கொண்டு ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.