Author Topic: ஒல்லியானவர்களுக்கும் நீரிழிவு வரும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை!  (Read 784 times)

Offline kanmani

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை மேற்கொள்ளாமல் உடலை ஒல்லியாக வைத்திருப்பவர்களுக்கும், நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவும் இதயநோயும் உடல் பருமனானவர்களுக்கு மட்டுமே வரும் என்று இதுநாள் வரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் அந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் அமைந்துள்ளது புதிய ஆய்வு முடிவு ஒன்று.

பசிக்கு சத்தானதை சாப்பிடும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை விடுத்து கண்டதை சாப்பிட்டு வாழும் அவசர வாழ்க்கை முறையாகிட்டது. உடல் பருமனாகிவிடுமோ என்ற அச்சத்தில் அவசியமான, தேவையான சத்துணவுகளைக்கூட சிலர் எடுத்துக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் ஒட்டிய வயிறும், ஒல்லிப்பிச்சானாக காட்சியளிக்கின்றனர். தங்களை நோய் எதுவும் தாக்காது என்று நம்பிக்கையோடு இருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது ஆய்வு முடிவு.

உடல் மெலிந்துள்ளது என்பது முழுமையான திருப்திக்கு உரிய விசயமல்ல. உடல் மெலிந்து காணப்படுவதற்கு காரணமாக இருப்பது ஒரு மரபணு. ஆனால் அதே மரபணு அவர்களுக்கு நீரிழிவும், இருதயக் கோளாறும் ஏற்படவும் காரணமாகிவிடுகிறது என்கிறது ஆய்வு தரும் தகவல்.

எனவே உடல் ஒல்லியாகி, வயிறும் ஒட்டிப்போய் காணப்படுகின்றவர்கள் தாங்கள் நினைக்கின்ற அளவுக்கு ஆரோக்கியமானவர்கள் அல்ல என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒல்லியான உடலமைப்பு கொண்டவர்களின் உடல் உள் உறுப்புக்களைச் சுற்றி கொழுப்புப் படிவத்தை ஏற்படுத்தும் மரபணுவே தற்போது இனம் காணப்பட்டுள்ளது. இதற்கென ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 75000 பேரில்,அவர்களின் தசைக் கொழுப்போடு ஒப்பீட்டளவில் இந்த மரபணுவும் இனம் காணப்பட்டுள்ளது. பொதுவாக IRS1 என்று இந்த மரபணு இனம் காணப்படுகின்றது.

இந்த ஜீன் உள்ளவர்கள் இரத்தத்தில் கொழுப்புப் படிவு அதிகம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர். உடம்பில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றுவதிலும் இவர்களின் உடல் செயல்பாடு சிரமத்திற்குள்ளாகிறது. இதனால் இந்த மரபணு உடையவர்களுள் 20 சதவிகிதமானவர்கள் டைப் 2 நீரிழிவு நோயை எதிர்நோக்கும் ஆபத்தில் உள்ளனர்.

இந்த மரபணுவானது சருமத்துக்கு கீழ் பகுதியிலும், இதயம், நுரையீரல் உட்பட பல உறுப்புக்களைச் சுற்றியும் கொழுப்பைத் தேக்கி வைக்கின்றது. நடுத்தர வயதினரையே இது பெரிதும் பாதிக்கின்றது. உலகின் பத்து நாடுகளில் 72 நிலையங்களைச் சேர்ந்த குழுக்கள் நடத்திய வெவ்வேறு ஆராய்ச்சிகளைத் தொகுத்தே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். எனவே ஒல்லியான உடலமைப்பு கொண்டவர்கள் இனிமேலும் அலட்சியமாக இருந்து விட முடியாது என்பது ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.