அந்த ஏதோ ஒரு நிமிடத்தில்தான்…
என் சுவாசக் காற்றில்
கூடுதல் வாசம் சேர்ந்தது!
அந்த ஏதோ ஒரு நிமிடத்தில்தான்…
என் மேல் மட்டும் கொஞ்சம்
சாரல் மழை பொழிந்து போனது!
அந்த ஏதோ ஒரு நிமிடத்தில்தான்…
எனக்கு மட்டும் நிலவு கூடுதல்
ஒளியைப் பொழிந்தது!
அந்த ஏதோ ஒரு நிமிடத்தில்தான்…
நட்சத்திரங்கள் இறங்கி வந்து
என் காதோரம் கிசுகிசுத்தது!
அந்த ஏதோ ஒரு நிமிடத்தில்தான்…
இருட்டு எனக்குள்
வெளிச்சத்தைக் கொப்பளித்தது!
அந்த ஏதோ ஒரு நிமிடத்தில்தான்…
இதயத்தின் துடிப்பு
சில கணங்கள் இறுக்கித் தவித்தது!
அந்த ஏதோ ஒரு நிமிடத்தில்தான்…
எனக்கும் உனக்கும் மட்டும்
தனியே ஒரு உலகம் பிறந்தது!
அந்த ஏதோ ஒரு நிமிடத்தில்தான்…
உதிரத்தின் ஓட்டம்
உருக்குலைந்து தடுமாறியது!
அந்த ஏதோ ஒரு நிமிடத்தில்தான்…
பிரிவின் கசப்புச் சொட்டு
சொட்டச் சொட்ட வார்க்கப்பட்டது.
ஒவ்வொரு சந்திப்பிலும் தோன்றுகிறது
பிரிந்திடாமல் இருந்திடாலாமோயென்று!
ஒவ்வொரு பிரிவிலும் தோன்றுகிறது
சந்திக்காமலே இருந்திருக்கலாமேயென்று!
ஏனோ தெரியவில்லை
அந்த ஏதோ ஒரு நிமிடத்தை
பிடித்து வைத்துக்கொள்ளவும்
பிடிபடாமல் தப்பித்துக்கொள்ளவும்!