ஊட்டோரம் ஒசந்த தென்னையில
ஒய்யாரமா வளைஞ்ச மட்டையில
எங்கிருந்தோ வந்த ஒரு குருவி
என்னமோ மாயம் பண்ணுச்சு
ஓடியாடி வேல பாத்து தேடித்தேடி
எடுத்து வந்து அவசரமா கட்டுனதுல
ஆடி அசையுது அழகான கூடு ஒண்ணு
ஓலக்கீத்துல ஒட்டிவச்ச பந்து போல
ஆடி மாசம் அடிச்சு தள்ளுன காத்துல
பத்தாளு மேஞ்ச கூரை பறந்து போகப்பாத்துச்சு
மரம் ஆடுச்சு, மட்டையும் ஆடுச்சு கூடவே
கூடும் ஆடுச்சு ஆனா குருவி ஆடுச்சு ஒய்யாரமா
ஐப்பசியில பேஞ்ச அடமழைக்கு
ஆறேழுபக்கம் ஒழுகுது ஊத்துது...
குருவியும் குறுகுறுனு கூடு தங்குச்சு
ஒரு சொட்டு தண்ணி உள்ள படாம
மலைய கொடஞ்சோம், மரத்த வெட்டுனோம்
மழைய தொலச்சோம், மண்ண கெடுத்தோம்
ஆனா ஒருத்தருக்கும் தெரியலையே
ஒரு தூக்கணாங்குருவி போலக் கூடுகட்ட
எழுதியது ஈரோடு கதிர்