Author Topic: யாரொடு நோக..!  (Read 5517 times)

Offline Yousuf

யாரொடு நோக..!
« on: May 27, 2012, 08:06:06 AM »

பின்னிரவு நிறை போதையில் வந்து படுத்ததால் “ட்ரீங்..” என போனில் அலரிக் கொண்டிருக்கும் அலாரத்தைக் கூட நிறுத்த முடியாதவனாய் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன். இந்த அலாரம் கூட நேற்றைய பார்ட்டியில் தண்ணியடிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் ‘செட்’ செய்யப்பட்டது. இன்று எப்படியாவது வழமைபோல வேலைக்குப் போயே ஆக வேண்டிய கட்டாயம். பல கஸ்டங்களுக்கு மத்தியில் அண்ணன் வாங்கித் தந்த வேலை. அவன் பெயர் எந்தவொரு காரணத்துக்காகவும் கெட்டு விடக்கூடாது என்பதில் நிரஞ்சன் எப்பொழும் அக்கறையுடன் இருப்பான். உயிர் நண்பனின் திருமணத்திற்காக இன்று லீவு எடுக்காமல் நேற்றிரவே கல்யாண வேலைகளையெல்லாம் தடல்புடலாக கவனித்து விட்டு வந்துவிட்டான். பதிலுக்கு நண்பனும் தண்ணீரால் அபிசேகம் செய்து அனுப்பிவிட்டான்.

“ட்ரீங்… ட்ரீங்…”
“ஏனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே…”
“ட்ரீங்… ட்ரீங்…”
“ஏனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே…”

அலாரமும், சாமினியின் அழைப்பும் மாறி மாறிக் கேட்டுக்கொண்டதால் உறக்கத்தை முறித்து நேரத்தைப் பார்த்தான் மணி 8.30. காலை 9 மணிக்கு எப்படியாவது ஆபிஸில் நிற்க வேண்டும். தவிர, இன்று புதுக் ‘கான்ராக்ட்’ விடயமாக வெளியில் வேறு செல்ல வேண்டும். ‘பற பற..” என வெளிக்கிட்டு 8.45 இற்கு முற்றத்தில் இறங்கிவிட்டான்.
“அட! க்ளீன் பண்ண மறந்திட்டனே!” என சேறு படிந்த தனது கறுப்புக் கலர் ‘சி.பி.இசட் எக்ஸ்ரீம்’ மோட்டார் சைக்கிளைப் பார்த்துக் கொண்டான். வேறு வழியில்லை ஏறி உட்கார்ந்து ‘ஸ்டார்ட்’ செய்தான். ‘எயார் ப்ரஸ்’ பபில்க்கத்தை வாயில் போட்டு சப்பியபடி புறப்பட்டான்.

 “ஏனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே…”

மீண்டும் அழைப்பில் சாமினி. “இவள் வேற..” மனதில் சொல்லியவாறே ஆபிஸ் நோக்கிக் சென்றான்.
(((((((((((((((((0)))))))))))))))))

யார் இந்த சாமினி? ஒரு மாதத்திற்கு முன்னர் தான் நிரஞ்சனுக்கு அறிமுகமானாள். இப்பொழுது அவனைத் தீவிரமாகக் காதலிக்கிறாள். அப்படியானால் நிரஞ்சன்..?? அவனும் காதலிக்கின்றான். அப்படித்தான் அவள் நம்புகிறாள்.

நிரஞ்சன் ரொம்பவே நல்ல பையன். வயது வேறுபாடின்றி அவனை எல்லோருக்கும் பிடிக்கும். அவன் முகத்திலும், பேச்சிலும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கின்றது. ஆன்டிமார் கூட அவனுடன் பேச ஆசைப்படுவார்கள். அப்படியானால் இளம் பெண்கள்..? அதுவே அவனது ‘வீக்னெஸ்’ ஆகவும் மாறிவிட்டது. “யாராவது ஒரு பெண்ணைக் காதலிக்க வேண்டும்” என்று அவன் நினைத்ததில்லை. இத்தனை பெண்கள் காதலிக்க விண்ணப்பிக்கும் போது எந்த மடையனுக்குத் தான் அதில் ஒருத்தியை காதலிக்க மனம் வரும். எல்லோரையும் காதலித்தான். எல்லோருடனும் பழகினான். அதில் ஒன்று மற்றையவருக்கு தெரிந்து விடாமல் மட்டும் கவனமாகப் பார்த்துக் கொண்டான்.

நிறைஞ்சனுக்கு சாமினியைத் முன்னர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருமுறை பேஸ்புக்கைத் தட்டும் போது ஏதேச்சையாக அவளது ப்ரோபைல் மாட்டுப்பட்டது. அவளுக்கும் தனக்கும் பொதுவான ப்ரெண்டாக தன் நண்பன் வசந்த் இருப்பதைக் கண்டான். நேரே வசந்த்தின் காலிலேயே விழுந்து விட்டான். அவன் அதிஸ்டம் ஏதோ ஒரு வகையில் சாமினி, வசந்த்திற்கு அறிமுகமானவள் தான். போன் நம்பரும் கிடைத்தாகி விட்டது. பிறகென்ன..

“ஹலோ யாரு?..” இது சாமினி.
“….”
“ஹலோ..!”
“சா..மி..னி.. அது வந்து..”
“யாரு மகேஸ் அண்ணாவா!”
பழம் நழுவிப்பாலில் விழுந்தது போலிருந்தது நிரஞ்சனுக்கு..
“ஓமோம். நான் மகேஸ் தான்…”
சம்பாசனைகள் தொடர்ந்தன. ஒருவரை ஒருவர் பார்க்காமலே கதைத்தார்கள். ஒருநாள் உண்மையான மகேஸ் அண்ணன் சாமினி வீட்டில், அந்த நேரம் சாமினியின் போனுக்கு அழைப்பு வருகின்றது. ‘மகேஸ் அண்ணா ஹோலிங்..’
சாமினிக்கு ‘பக்’ என்றது. உண்மை புரிந்து விட்டது. யாரோ ஒருவன் நன்றாக ஏமாற்றி விட்டான்.

நான்கைந்து நாட்களாக அந்த நம்பரில் இருந்து வந்த ஹோலுக்கு எந்தவொரு பதிலும் கொடுக்கவில்லை. நிலைமை தெரியாத நிரஞ்சனும் ஹோல் பண்ணுவதை நிறுத்தவில்லை.

தன்னுடன் கதைத்த முகம் தெரியாதவன் யார்? என அறியும் ஆவல் மெதுவாக சாமினிக்கு துளிர் விட்டது. ஒரு நாள் போனுக்கு பதிலளித்தாள்.
“ஹலோ! நீங்க மகேஸ் இல்லை என்கிறது எனக்கு தெரிஞ்சு போச்சு. யார் எண்டு சொல்லுங்க இல்லாட்டி பொலிஸிட்ட இந்த நம்பரைக் குடுப்பன்”
‘இந்த சிம் என்ர இல்லை’ என நிரஞ்சன் மனசுக்குள் சொல்லியவாறு “சாரி சாமினி. எனக்கு வேற வழி தெரியல. உங்க கூட கதைக்கணும். எப்பிடி கதைக்கிறெண்டு தான் தெரியல. நீங்களாவே ஒரு பெயரைச் சொல்லிக் கதைக்கும் போது அந்த சான்ஸை மிஸ் பண்ண விரும்பல. அது தான் இப்பிடி நடந்து போச்சு. என்னை மன்னிச்சிடுங்க” ரொம்ப கனிவாக தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டான்.
“சரி, ஓகே மன்னிச்சு விடுறன். நீங்க யார் எண்டு சொல்லுங்க. எதுக்கு எனக்கு ஹோல் பண்ணிட்டு இருக்கீங்க. உங்களுக்கு என்ன வேணும்”.
“எனக்கு நீ தான் வேணும்”. இந்த ஒரு வரிப்பதிலால் ஆடிப்போனாலும் கொஞ்சம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு “புரியல..” என்றாள் சாமினி.
“அது.. வந்து நான் உன்னை சின்சியரா லவ் பண்ணுறன். நீ மட்டும் ஓமெண்டு சொல்லாட்டி செத்துடுவன்”

பாடசாலைக் காலங்களில் ஒரு தலைப்பட்சமாக ஒரு சில காதல்கள் சாமினி மனதைத் தைத்திருக்கின்றன. அதேபோல ஒரு சில ஆண் நண்பர்களும் காதல் விண்ணப்பம் செய்திருக்கின்றார்கள். அதெல்லாம் பாடசாலை வாழ்க்கையுடனேயே முடிந்து போயிற்று. தற்பொழுது கணனிக் கல்வி நிலையம் ஒன்றில் ‘கிளார்க்’ ஆக வேலை பார்க்கும் சாமினிக்கு எந்தக் காதலும் வந்திருக்கவில்லை. திடீரென நிகழ்ந்து விட்ட காதல் பிரேரணை அவளை ஒரு கணம் ஆட்டிவிட்டது.

“ஹலோ! சாமினி.. நீங்க இப்ப முடிவைச் சொல்லணும் எண்டு இல்லை. கொஞ்சம் டைம் எடுத்துக்குங்க. எவ்வளவு நாளானாலும் காத்திருப்பன். உங்களைப் போல அழகான ஒரு மனைவி கிடைக்கிறதுக்கு நான் முற்பிறப்பில குடுத்து வைச்சிருக்கோணும்” என்றான் நிரஞ்சன். பிறகு பல விடயங்களைக் கதைத்தாலும் “உங்களைப் போல அழகான..” என்ற வார்த்தை தான் அன்று முழுவதும் சாமினியின் மனதில் ஓடியது. இப்படியான ஒரு வர்ணிப்பை இன்று வரை அவள் கேட்டதில்லை. ‘தான் அழகு’ என ஒரு போதும் அவள் நினைத்தில்லை. இன்று அந்த நினைப்பு லேசாக துளிர்விட்டது. கண்ணாடியில் ஒருமுறை தன்னை வழக்கத்துக்கு கொஞ்சம் அதிகமாகவே பார்த்துக் கொண்டாள். மறுநாள் அவனின் போனுக்காக வெயிட்டிங். ஹோலும் வந்தது.

“ஹலோ! சாமினி. ஏதும் முடிவெடுத்தீங்களா?”
“அது.. வந்து..”
“என்ன தயக்கம். அதுவும் என் கிட்ட..”
“இல்ல உங்களை யாரெண்டே தெரியாதே. எப்பிடி..”
“அட! இவ்வளவு தானா.. நீ ஓம் எண்டு ஒரு வார்த்தை சொல்லு. அடுத்த நிமிசம் உன் முன்னாடி நிற்பன்”
“…”
“என்ன ஓ.கே யா?”
“ம்..”
“என்ன உம்.. வடிவா வாயைத்திறந்து சொல்லு என்னை காதலிக்கிறன் எண்டு”
“அது தான் சொல்லிட்டனே! அதுக்காக இப்பவே பார்க்க வந்திடாதீங்க..”
“என்ன சாமினி உன்னை பார்க்கணும் எண்டுற ஆசை இருக்காதா எனக்கு”
“உங்களுக்குத் தானே என்னை நல்லாத் தெரியும். நான் தான் உங்களைப் பார்க்கணும். வெயிட் பண்ணுங்க சொல்லுறன்..”
“என்ன சாமினி.. என்னை இப்பிடி காக்க வைக்கிறாய்?”
“அது சரி, நீங்க உங்க பேரைச் சொல்லவே இல்லையே! நான் உங்களை எப்பிடிக் கூப்பிடுறது?”
“ஹா ஹா… அது தானே! ரஞ்சன்” என்றான் நிரஞ்சன்.

இருபது நாட்கள் போனில் பழகியாகிவிட்டது. இன்று ரஞ்சனைப் நேரில் பார்க்கப் போகின்றாள் சாமினி. ஒரே படபடப்பு. ஏற்கனவே அவனுக்கு போனில் கூறியது போல நீல நிற சல்வார் போட்டாள். சரியாக மாலை 4 மணிக்கு பார்க்கிற்கும் வந்து விட்டாள். 4.05 இற்கு ரஞ்சன் கூறிய கறுப்பு கலர் ‘சி.பி.இசட்’ இல் வருகின்றான். தலைக்கு ஹெல்மட் போட்டிருந்ததால் முகத்தைப் பார்க்க முடியவில்லை. சாமினியை அடையாளம் கண்டு கொண்டவன் அருகில் வந்ததும் இன்னொரு ஹெல்மட்டைக் கொடுத்து “இதைப் போடு. இங்கையிருந்து கதைக்கேலாது. இன்னொரு இடத்துக்குப் போவம்” என்றான். திட்டமிடாத இந்த நிகழ்வால் சஞ்சலப்பட்டாலும், அங்கு தொடர்ந்து நிற்பது தனக்கு ஆபத்து என்பதால் விரைவாக மோட்டார் சைக்கிள் ஏறிக்கொண்டாள். மோட்டார் சைக்கிளின் வேகத்தால் தன்னையும் அறியாமல் ரஞ்சனை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

இப்பொழுதெல்லாம் போனில் கதைப்பதை விட நேரில் கதைப்பது தான் அதிகம். மிக மிக நெருங்கிவிட்டார்கள் இருவரும்.
(((((((((((((((((0)))))))))))))))))

வேலை முடிந்த நிரஞ்சன் சாமினிக்கு ஹோல் எடுத்தான்.
“உனக்கு எத்தினை தரம் சொல்லுறது. வேலையில நிக்கேக்கை எடுக்காதை எண்டு. சரி, இரு ஆறு மணிக்கு வாறன். படத்துக்குப் போவம்.”
“இல்லை. என்னால இனி வெளிக்கிடேலாது. அப்பா கொழும்பில இருந்து வந்து நிற்கிறார். இனி முந்தி போல நெடுகலும் திரியேலாது. அதைச் சொல்லத்தான் விடியல இருந்து அடிக்கிறன்”
“சரி சரி, நாளைக்கு மட்டும் ஒரு பொய்யைச் சொல்லிட்டு வா! தியேட்டர் போவம்”

மறுநாள் ஆபிஸ் லீவு என்பதால் சாமினியை நண்பனின் வீட்டுக்கு கூட்டிப்போக நிரஞ்சன் திட்டமிட்டான். அவனது நண்பன் குடும்பத்தினர் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பு சென்றிருந்தார்கள். நிரஞ்சன் போட்ட ப்ளான் எதுவும் சாமினிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

“சாமினி, தியேட்டர்ல படம் மாத்துவங்கள் என நினைச்சன். ஆனா நான் பார்த்த படம் தான் போகுது. உன்னோட கொஞ்சம் மனம் விட்டு கதைக்கணும். வா, வேற இடத்துக்கு கூட்டிப்போறன்” எதுவும் தெரியாத சாமினி தன் காதலனுடன் செல்கிறாள்.

யாருமற்ற நண்பனின் வீடு. இருவரும் நிறையவே கதைக்கிறார்கள். சாமினி எதிர்கால வாழ்க்கைக் கனவுகளில் மிதக்கிறாள். நிரஞ்சனோ சாமியை அடைந்துவிடத் துடிக்கிறான். தனிமை – நெருக்கம் - காதல் - ஊடல் - காமம், விளைவு பஞ்சும் நெருப்பும் பற்றுகிறது. ஏற்கனவே திட்டமிட்டதால் எல்லாவற்றையும் பாதுகாப்பாகவே முடித்துக் கொள்கிறான் நிரஞ்சன். சாமினியின் வீட்டுக்கு 100 மீற்றர் தொலைவில் யாரும் பார்க்காதவாறு அவளை இறக்கிவிட்டுப் பறந்து விட்டான்.

தலை சரிய, இடை நெளிய, கால்கள் தள்ளாடி அவள் வீட்டினுள் நுழைந்ததை நிரஞ்சன் கண்டிருக்க வாய்ப்பில்லை.

மறுநாள் சாமினி ஏதோ புது மனிசியாக அவதாரம் எடுத்ததைப்போல் பல கனவுகளுடன் ரஞ்சனிற்கு போன் பண்ணினாள்.

“நீங்கள் அழைத்த இலக்கம் தற்போது தொடர்பில் இல்லை”

மறுபடியும் மறுபடியும் அழைத்தாள்..

“நீங்கள் அழைத்த இலக்கம் தற்போது தொடர்பில் இல்லை”


“நீங்கள் அழைத்த இலக்கம் தற்போது தொடர்பில் இல்லை”


யாவும் கற்பனை அல்ல..