Author Topic: 1960கள்... 1970கள் ஏன், 80களிலும் சொல்லலாம்..  (Read 19 times)

Offline MysteRy


காலை ஒன்பதரையைத் தாண்டி பத்து மணி பத்தே கால் மணி என்று ஆகிக் கொண்டிருக்கிறது.

கணவர் அலுவலகம் சென்றிருக்க, குழந்தைகள் பள்ளி சென்றிருக்க, இல்லத்தரசிகள் மிகுந்த ஆவலுடன் ஒருவரை எதிர்பார்த்து நின்றிருப்பார்கள். கைகள் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாலும் காதுகள் ஒரு சத்தத்துக்காகக் காத்திருக்கும். வீட்டில் மூத்த அங்கத்தினர்கள் இருந்தால் அவர்களும் எதிர்பார்ப்போடு நிலைகொள்ளாமல் உள்ளறையிலோ , முற்றத்திலோ காத்திருப்பார்கள். ஈஸிசேரில் அமர்ந்து கையில் விசிறியும், கண்ணில் எதிர்பார்ப்புமாக வந்து வாசலையும், வாசலில் நின்று தெருமுனையையும் எட்டிப் பார்ப்பார்கள்.

"கண்லயே காணோமே...."

யாரை?

போஸ்ட்மேன்...

நிறைய வீடுகளில் சந்தோஷங்களையும், சில வீடுகளில் துக்க, வருத்தங்களையும் விநியோகிப்பவர். ஊரில் எல்லோருக்கும் உறவானவர்.

மூன்று வீடு தள்ளி அவர் வருவது கண்ணில் பட்டுவிட்டால் போதும்.. காய்ந்து கொண்டிருக்கும் துணியை இழுத்து விட்டபடி, செடிகளிலிருந்து இலைகளை பறித்தபடி.. என்று வாசலில் வந்து நின்று விடுவார்கள். ஈஸிச்சேர் தாத்தாவும் படிக்கட்டில் நின்றிருப்பார். தபால்காரரிடமிருந்து கடிதங்களை யார் வாங்குவது என்பதிலேயே போட்டி நிலவும்.

"பார்த்து.. பார்த்து.. கிழிஞ்சிடப்போவுது..."

உறவுகளிடமிருந்தும் நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்களுக்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது அப்போது. வரவேற்பு இருந்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்து விட்டால் மகிழ்ச்சி வெள்ளம்தான், திருவிழாதான். நீ இதைப் படி, நான் அதைப் படிக்கிறேன் என்று பிரித்துக் கொள்வதில் போட்டி. ஆனால் கடைசியில் ஒவ்வொன்றாகப் பிரித்து ஒருவர் வாசிக்க, நடுநடுவே உச் கொட்டிக்கொண்டும் சபாஷ், அச்சச்சோ என்று உணர்ச்சிகளைக் காட்டிக்கொண்டும் மற்றவர்கள் கேட்பது சுகம்.

கணவன் மனைவிக்கு எழுதும் கடிதங்கள் பொதுவில் படிக்கப்படாது. அதை அந்த மனைவி பத்திரப்படுத்திக் கொள்வதை மாமியார் ஓரக்கண்ணால் கவனிப்பார்.

மதியத்துக்கு மேல் ஜாடையாக மருமகளை பார்த்து "என்ன எழுதி இருக்கான் அவன்?" என்று தாங்கமுடியாமல் ஒரு கேள்வி விழும்.

"எல்லோருக்கும் எழுதிய லெட்டரில் இருப்பதை தான் எனக்கும் எழுதி இருக்கார்"

மாமியாரின் முகவாய் என்ன செய்யும் என்பது உங்களுக்குத் தெரியும்..

சில கடிதங்களில் சில வரிகள்... மீண்டும் தனிமையில் எடுத்துக் படிக்க வைக்கும். அல்லது கண்ணீர் வரவழைக்கும். அல்லது கோபத்தில் அந்தத் வரிகளே கசங்கிக் கிழியும்..

சில வரிகள் பென்சிலால் அல்லது சிவப்பு மையினால் அடிக்கோடிடப்படும். பதில் எழுதும்போது சிறப்பு கவனம் பெறவேண்டி...

மாலை அலுவலகத்திலிருந்து கணவர் வந்தததும் கைகால் கழுவிக்கொண்டும் வர, வந்து அமர்நததும் அவரும் ஆவலுடன் கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் படிப்பார். மறுபடி கடிதம் படிக்கும் படலம். யார் எந்தக் கடிதத்துக்கு பிரையாரிட்டி தருகிறார்கள் என்று கவனிக்கப்படும்..

ஏரியாவுக்குள் வரும்வரைதான் போஸ்ட்மேனால் சைக்கிளில் அமர்ந்து பெடல் பண்ணி வரமுடியும். அப்புறம் ஒவ்வொரு வீடாய் தள்ளிக் கொன்டுதான் வரவேண்டும். எத்தனை நூறு வீடுகள் இருந்தாலும் அவர்கள் பெயர், சுய விவரங்கள், அவர்கள் தேவை போஸ்ட்மேனுக்கு அத்துபடி.

"என்னம்மா.. பையனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அடிச்சுட்டாங்க போல..."

"மருமகளுக்கு குழந்தை பொறந்துடுச்சாமா?"

"சார் எப்போ வர்றாராம்? இந்த வாரமாவது லீவு கிடைச்சுதாமா?"

"உங்களுக்கு இன்னிக்கி ஒண்ணும் லெட்டர் வரலை பெரீம்மா..." சங்கடத்துடன் தான் ஒலிக்கும் அவர் குரல். பெரீம்மா முகத்தில் கவியும் ஏமாற்றம் காணப் பிடிக்காமல் தலைகுனிந்து அடுத்த வீட்டுக்கு நகர்வார்.

சில வீடுகளில் ரெகுலராக மோரோ, காபியோ அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கும்.

மே மாதங்களில் பள்ளிப்பிள்ளைகளுக்கு அவர் பெரிய பூச்சாண்டி.. ரிசல்ட் கார்ட் கொண்டுவரும் பூதம்.

எளிமையான இனிமைகளை இன்று நாம் இழக்கிறோம். இழந்தால் தானே அருமை தெரிகிறது..

#அஞ்சல்_வாரம்: October 7-15.

அஞ்சல்துறை அத்தியாவசிய துறை மட்டுமல்ல, உணர்வில் கலந்த துறை