Author Topic: விவேகானந்தரிடம் பேச மறுத்த ராமகிருஷ்ண பரமஹம்சர்....  (Read 282 times)

Offline MysteRy


ஒரு நாள் விவேகானந்தர் தட்சிணேசுவரத்துக்கு வந்த போது அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பரமஹம்சர். விவேகானந்தர் குருநாதரை வணங்கினார். அப்போதும் அலட்சியமாகவே இருந்தார் குரு.

அவருடைய பக்கத்தில் சீடர் அமர்ந்தார். அப்படி ஒருவர் அருகில் உட்கார்ந்திருப்பதைக் குரு மகராஜ் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் ஏதோ தீர்க்கமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றெண்ணிய விவேகானந்தர் அறைக்கு வெளியே வந்தார்.

வெளியே ஹாஸ்ராவுடன் பேசிக் கொண்டே அமர்ந்திருந்தார். அப்போது உள்ளே பரமஹம்சர் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பது கேட்டது. உடனே விவேகானந்தர் ஆர்வத்துடன் அவரது முன்னர் சென்றார்.

என்ன ஆச்சரியம்! இம் முறை ஸ்ரீராமகிருஷ்ணர் அலட்சியம் செய்தது மட்டுமில்லை, விவேகானந்தருக்கு எதிர்ப்புறமாக சுவரை நோக்கி முகத்தைத் திருப்பிகொண்டு விட்டார்.

விவேகானந்தர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டார். அப்போதும் பரமஹம்சரின் போக்கில் மாறுதலே இல்லை.

இரண்டாம், மூன்றாம் முறையாக தட்சிணேசுவரத்துக்கு வந்தார் விவேகானந்தர். நான்காம் முறையும் வந்தார். அவர் வராத இடைக் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரும் விவேகானந்தரின் சௌக்கியத்தைப் பற்றி கேட்டறிந்து தான் வந்தார்.

எனினும் அவர் வந்தபோது ஏனோ கல்லாகச் சமைந்திருந்தார் குருதேவர். இப்படியே ஒரு மாதம் ஆகி விட்டது. ஸ்ரீராமகிருஷ்ணர் அப்படியே தான் இருந்தார். விவேகானந்தரும் முன் போலவே வந்து கொண்டு இருந்தார்.

குருநாதர் தம்மைப் புறக்கணிப்பது பற்றி அவர் யாரிடமும் குறை கூறக் கூட இல்லை . அதற்கு மேலும் பரமஹம்சரால் எப்படி, பொறுக்க முடியும்?

விவேகா, உன்னோடு நான் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமலிருக்கிறேன்; அப்படியும் நீ வந்து கொண்டிருக்கிறாயே! இது எப்படி?” என்று சிஷ்யனைக் கேட்டே விட்டார் ஆசான்.

“நீங்கள் பேசி நான் கேட்க வேண்டும் என்பதற்காக நான் இங்கே வருவதாகவா எண்ணுகிறீர்கள்? நான் அதற்காக வர வில்லை. எனக்கு உங்களிடம் அன்பு இருக்கிறது. அந்த அன்பினால் உங்களைக் காண விரும்புகிறேன். அதற்காகவே நான் தட்சிணேசுவரத்துக்கு வருகிறேன்” என்றார் விவேகானந்தர்.

அன்பு தனக்குப் பிரதியாக எதையும் எதிர்பாராது என்பது உண்மை தான். விவேகானந்தரின் அன்பு அதற்குப் பிரதியாக குருதேவரின் அன்பைக்கூட எதிர்பார்க்கவில்லை.

எதையும் எதிர்பாராது எவரிடமும் அன்பு செலுத்துவதே நம் கடமையாகக் கொள்ளவேண்டும் என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர்.

கோவிலுக்கு செல்கிறோம். அங்கு கடவுள் நம்மோடு பேசுவார் என்பதற்கோ, நாம் அவரோடு பேசுவோம் என்பதற்கோ மட்டும் செல்வதில்லை. பேசுதலைத் தாண்டிய ஒரு அன்பு அங்கே உண்டு. அதை உணர்வோம்.

அன்பே சிவம் 🙏🏻