Author Topic: அது ஒரு கனாக்காலம்...  (Read 249 times)

Offline MysteRy

அது ஒரு கனாக்காலம்...
« on: September 25, 2025, 08:06:16 AM »

பத்து பேர் சேர்ந்து அமுக்கினாலும்,
திமிறி எழுந்து கபடி விளையாட்டில்
எல்லையைத் தொட்டது ஒரு காலம்...

எட்டாத உயரத்தில் நின்று கொண்டு, நண்பர்களை ஆச்சர்யப்படுத்தி
தலைகீழாய் கிணற்றில் குதித்தது ஒரு காலம்...

மாடிப் படிக்கட்டுகளில் இரண்டிரண்டு படிகளாக ஏறி இறங்கி, தாவிக் குதித்தது ஒரு காலம்...

மார்பெல்லாம் கிழித்தாலும் தென்னை மரம் ஏறி அந்தரத்தில் தொங்கி இளநீர் பறித்தது ஒரு காலம்...

ஓடும் பேருந்திலும், ரயிலிலும் ஏறி இறங்கி வேடிக்கை காட்டி விளையாடியது ஒரு காலம்...

டிசம்பர் 31 இரவில் பிரதான சாலையில் 100 கி.மீட்டர் வேகத்தில் பைக் ஓட்டி , புது வருடக் கொண்டாட்டம் கொண்டாடியது ஒரு காலம்..

ஓடும் பாம்பின் வாலை லாவகமாக பிடித்து தூக்கி நண்பர்களை அச்சமூட்டி ஒட வைத்து, பின் அப்பாம்பை உயிருடன் தூக்கி எறிந்து விளையாடியது ஒரு காலம்...

இப்போது சைக்கிள் ஓட்டி பழகும் மகனை, பார்த்து "மெதுவா போப்பா" என எச்சரித்து, அவன் பின்னால் பதட்டத்துடன் செல்வது இக்காலம்...