Author Topic: அம்மாவும் மாமியாரும்... 👨‍👦‍👦  (Read 96 times)

Offline MysteRy


கீதாவின் அக்கா லலிதாவுக்குத் திருமணமாகிப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. முதல் வருடம் அம்மா வீட்டுக்கு வரும்போதெல்லாம் லலிதா கண்ணீர் சிந்தியபடி இருந்தாள். கீதாவுக்கு அப்போது 15 வயது. அக்காவின் அழுகையைப் பார்க்கும்போதெல்லாம் வாழ்க்கையில் திருமணமே செய்யக் கூடாதென்று கீதாவுக்குத் தோன்றும்.
வீட்டில் மாப்பிள்ளை பார்த்தபோது அப்பா, அம்மா இல்லாத பையனாகப் பார்க்க வேண்டுமென்று கீதா சொல்லிவிட்டாள். அப்பா, அம்மா இருந்தாலும் அவர்கள் வேறு ஊரில் இருப்பவர்களாக இருந்தால் ஓகே என்றும் சொன்னாள். பையனுக்கு கீதாவைப் பிடித்துத் திருமணம் நிச்சயமாயிற்று. கீதா தன் பிறந்த வீட்டுக்கு அருகில் வீடு பார்ப்பதாக இருந்தால் மட்டுமே கல்யாணத்துக்குச் சம்மதிப்பேன் என்று மாப்பிள்ளையிடம் கறாராகச் சொல்லிவிட்டாள்.

கீதா மட்டுமல்ல, இன்றைக்குத் திருமணத்தையொட்டி பல பெண்களும் இப்படி கண்டிஷன் போடுகிறார்கள் என்று பயிலரங்குகளில் பலர் சொல்கிறார்கள். இதேபோல் ஆசிரியர்களுக்கான பயிலரங்கில் ஒருமுறை என்னிடம் ஆசிரியர் ஒருவர், மேடம் என் மனைவி அவங்க அம்மா, அப்பா வந்தா பிரியாணி செய்யறாங்க. எங்க அப்பா, அம்மா வந்தால் கஞ்சித்தண்ணிதான் ஊத்தறாங்க என்று சொன்னார்.

பெண்கள் இப்படி ‘திமிர்த்தனமாக’ இருப்பதற்குக் காரணம், வேலைக்குப் போய்ச் சம்பாதிப்பதால்தான் என்று பலர் நினைக்கிறார்கள். திருமண உறவுகளில் ஆண், பெண்ணுக்குள் இங்கு யாருக்கு அதிகாரம் அதிகம் என்ற முறையில்தான் குடும்பங்கள் இயங்குகின்றன. திருமணமான முதலிரண்டு வருடங்களில், அமைதியாக அடங்கி இருக்கும் பெண்கள், வருடங்கள் போகப் போக குடும்ப உறவுகளில் கறாராக இருக்கப் பழகிவிடுகிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால், பலவீடுகளில் ரிடையர் ஆனபின் ஆண்களுக்குக் கிடைக்கும் ‘#மரியாதை’ அவர்கள் தன்மானத்தைக் குலைப்பதாக இருக்கிறது. இரண்டாம் தடவை காபி கேட்டால், ‘இருங்க, வேலைக்குப் போறவங்களை அனுப்பிவிட்டு உங்களுக்கு காபி தருகிறேன்’ என்று மனைவி அலட்சியப்படுத்துவதாக ரிடையரான பல ஆண்கள் புலம்புகிறார்கள்.

ஏன் இப்படி நடக்கிறது? கோளாறு யாரிடம்? காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால், மாறிவரும் காலத்துக்கு ஏற்ப மதிப்பீடுகளும் சிந்தனைகளும் மாறுகின்றனவா? பெண்ணோ, பெண்ணின் குடும்பமோ தங்களை அலட்சியப்படுத்துவதாக நினைக்கும் ஆணும் அவன் குடும்பமும் திருமணமாகி அவர்கள் வீட்டுக்கு வந்த பெண்ணை, இத்தனை காலமாக எப்படி நடத்தினார்கள்?
வீட்டுக்கு வந்த பெண், கணவரின் அப்பா, அம்மாவை அத்தை, மாமா என்று சொல்லாமல் அப்பா, அம்மா என்றே சொல்ல வேண்டும் என்று பல வீடுகளில் வலியுறுத்தப்படுகிறது. கணவனின் அப்பா, அம்மாவைத் தானும் அப்பா, அம்மாவாகப் பெண் நினைக்க வேண்டுமென்றால் கணவனும், மனைவியின் அப்பா, அம்மாவைத் தன் அப்பா, அம்மாவாக நினைக்க வேண்டாமா? ஒரு பெண், கணவனின் பெற்றோரை மருத்துவமனைக்கோ திருவிழாவுக்கோ எந்தப் புலம்பலும் இல்லாமல் கூட்டிக்கொண்டு போக வேண்டுமென்று ஆணும் அவன் பெற்றோரும் நினைக்கிறார்கள். சமூகத்தின் பெரும்பான்மை நினைப்பும் அதுதான். தன் பெற்றோர் வரும்போது வெறுமனே ஹலோ சொல்லிவிட்டு, தான் பிஸியாக இருப்பதாக ஒரு ஆண் பிகு பண்ணிக்கொண்டால், மனைவிக்கு அவன் மேல் கோபம் வருகிறது. அதை அவன் மேல் காண்பிக்கிறாள். முடியாதபோது அவனுடைய பெற்றோர்களை அலட்சியப்படுத்துவதன் மூலம் தன் மன உளைச்சலுக்கு ஆறுதல் தேடிக்கொள்கிறாள்.

..
வினையும் எதிர்வினையும் ...

மனைவியின் பெற்றோரை யார் பார்த்துக்கொள்வார்கள்? அவளுக்குச் சகோதரன் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் மகன் வீட்டிலேயே அவர்கள் காலம் முழுக்க இருக்க வேண்டுமா? ஆணை வளர்த்து, படிக்கவைப்பது போல்தானே பெண் வீட்டிலும் படிக்க வைத்து ஆளாக்குகிறார்கள்? இதெல்லாம் நம் கலாச்சாரம், பண்பாடு இப்படித்தான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறது என்று சொல்லி இனியும் சப்பைக்கட்டு கட்ட முடியாது. நியூட்டனின் மூன்றாம் விதிதான். ஒவ்வொரு செயலுக்கும் பதில்வினை உண்டு. குடும்பங்கள் அதிகாரத்தால் கட்டமைக்கப்படும் வரை இப்படித்தான் இருக்கும். நாம் யாரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ அதுவாக நாம் அவர்களிடம் இருக்க வேண்டும். கணவனின் பெற்றோரை மனைவி பராமரிக்க வேண்டும் என்றால், மனைவியின் பெற்றோரைக் கணவன் பராமரிக்க வேண்டும்.

திருமணமானால், பெண் கணவன் வீட்டில் வந்து வாழ வேண்டும் என்பதுதான் நம் பண்பாடு என்று சொல்லி, பெண்ணை வற்புறுத்துகிறோம். கணவன், அவன் பெற்றோர், சகோதர சகோதரிகளின் உணர்வுக்கு, உறவுக்கு அந்தப் பெண், மரியாதை கொடுக்க வேண்டும் என்கிறோம். அவர்களை மதிக்க வேண்டும் என்கிறோம். அவள் எத்தனை நாள் இதற்குக் கட்டுப்படுவாள்? அவள் கை தாழ்ந்து இருக்கும்வரை கட்டுப்படுவாள். கணவரது உடன்பிறந்தவர்கள் திருமணமாகிப் போன பின்பு, மாமனார், மாமியாருக்கு வயதாகி முடியாமல் போகும்போது அலட்சியப்படுத்த ஆரம்பிப்பாள். அவள் அதுவரை பெற்றதை பிறகு திரும்பத் தருகிறாள். வயதான இரண்டு பக்கப் பெற்றோரையும் கணவன், மனைவி இருவரும் சரிசமமாக நடத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இந்தக் கற்பனை சாத்தியப்பட்ட வீடுகளும் இருக்கின்றன. அங்கே பரஸ்பர அன்பு, மரியாதை, நம்பிக்கை அடிப்படையில் உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி இல்லாதபோது, மனைவி அடங்கிப்போகும் இடத்தில் கணவனும்.. கணவன் அடங்கிப்போகும் இடத்தில் மனைவியும் ஒருவர் மேல் மற்றொருவர் அதிகாரம் செலுத்துகிறார்கள்.

...
இரு உறவும் முக்கியம்:

ஒரு பயிற்சியில் ஐம்பது வயது ஆன ஆண் சொன்னார். “திருமணமான புதிதில் மனைவி கண்ணைக் கசக்கி, என் அம்மா பற்றிப் புகார் சொன்னாள். அன்றைக்கு முடிவெடுத்தேன், இந்தப் பெண்ணைக் கஷ்டப்படுத்தக் கூடாதென்று. வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி வந்துவிட்டேன். என் குடும்பத்தோடு உறவு விட்டுப்போயிற்று. என் மனைவிக்காக அதைச் செய்தேன். இன்று அவள் தன் குடும்பத்து மனிதர்களோடு நல்ல உறவில் இருக்கிறாள். எனக்குத்தான் யாருமில்லை” என்றார். கோளாறு அந்த பெண்ணிடம் மட்டும் இல்லை; ஆணிடமும்தான். மனைவிக்குக் கணவனின் பெற்றோருடன் பிரச்சினை என்றால், மனைவியை அவர்களிடம் அன்பாக இரு என்று கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. ஆனால், எனக்கு நீயும் முக்கியம், அவர்களும் முக்கியம். உனக்குப் பிடிக்கவில்லை என்றால் நீ அவர்களைப் பார்க்க வேண்டாம், பேச வேண்டாம். ஆனால், நான் அவர்களோடு பேசுவதை, பார்ப்பதை நீ தடுக்க முடியாது. உனக்கும் எனக்குமான உறவைப் போலவே எனக்கும் அவர்களுக்குமான உறவு என்ற ஒன்று உள்ளது என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும். ஆணோ, பெண்ணோ ஒருவர் மேல் மற்றொருவர் புகார் சொல்வதல்ல வாழ்க்கை. அதிகாரத் தராசின் முள் ஒரு பக்கமாகச் சாயலாம். மாறி, மாறிச் சாயலாம். இரண்டு தராசுத் தட்டிலும் சமமாக எடை வைக்கும்போது தராசு சமநிலையில் இருக்கும். இதுதான் வாழ்க்கை. ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் அன்போடும் மரியாதையோடும் நடத்தினால் வாழ்க்கை எனும் நியாயத் தராசு சமநிலையில் இருக்கும்.