கர்ணனின் காலம் 
நதியில் மிதந்து வந்தவன், 
சூரியனின் அருளால் பிறந்தவன், 
குந்தியின் புதல்வன், 
தேரோட்டி வீட்டில் வளர்ந்தவன், 
துரியோதனன் தோள் பற்றியவன், 
நட்பின் உயிராய் வாழ்ந்தவன், 
சாபங்கள் சூழ்ந்த வாழ்க்கையிலும்
வீரம் தளராமல் நின்றவன். 
அந்தக் கர்ணனை, 
கிருஷ்ணனின் சூழ்ச்சியால், 
போர்க்களத்தில் அவன்
மார்பில் அம்புகள் பாய, 
அர்ஜுனன் கையால் வீழ்ந்தவன். 
ஆனாலும், அவன் புகழ்
என்றும் அழிந்ததில்லை. 
இன்று,  
அவன் சாயலில்,  
சமூகநீதி பேசிக்கொண்டும்,  
சுயமரியாதை காத்துக்கொண்டும்,  
வாழ்வு உரிமையை,  
கொண்டாடிக்கொண்டும்,  
பல்லாயிரம் கர்ணன்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  
இன்றைய அரசியல் சூழலில்,  
எத்தனை கிருஷ்ணர்கள்,  
சூழ்ச்சி செய்தாலும்,  
அவர்கள் வீழ்வதில்லை.  
ஏனென்றால்,  
அவர்கள் தீட்டுவது வாள் மட்டும் அல்ல,  
அவர்கள் புத்தியையும் தான்.  
நமது தேவைகளை நாமே தேடவேண்டும்,  
நமது அரசியலை நாமே பேசவேண்டும்,  
நமது கடமைகளை நாமே காக்க வேண்டும்,  
நமது உரிமைகளை நாமே பெற வேண்டும்.  
கர்ணனே,  
இன்றைய காலம் நம்முடையது.  
ரௌத்ரம் பழகு, கற்றுக்கொள்.  
கருத்து போரில் உண்டாகும் வெற்றி,  
அறிவின் மலர் பொங்கும் நேரம்,  
சிந்தனைத் தீபம் ஒளிரும் போது,  
உலகம் புதியதாய் தோன்றும்.  
வாளையும் புத்தியையும் நம்பு,  
அதை மூலதனமாக்கு,  
நமது சமூகத்தை முன்னேற போராடு.  
ஏனெனில்,  
இன்றைய கர்ணனை,  
எந்த கிருஷ்ணர்களின்
சூழ்ச்சியும் வீழ்த்தாது.