வாழ்க்கையை
இருட்டில் தொலைத்துவிட்டு
வெளிச்சத்தை வீதியில்
தேடும் இளைஞனே - இதோ
இந்த தன்னம்பிக்கை
பூக்கள் - உனக்காக ...!
இந்த பூக்களை
நினைவுகளில் கோர்த்துப்பார்
உன்னை அறியாமல்
உனக்கு ஒருநாள்
அவைகள் சந்தன மாலைகளாகும் ....!
தோல்விகளைக்கண்டு
துவண்டு விழாதே
தோல்விகளில் தொலைந்துபோன
வாழ்க்கையை கண்டுபிடி
அன்று
தோல்விகளே உனக்கு
வெற்றி படிக்கட்டுகளாக மாறும் ...
இதயத்தை
இருட்டாக்கிக்கொண்டு
விழிகளால் வெளிச்சத்தை தேடாதே ...!
மனமது செம்மையானால்
மந்திரங்கள் எதற்கு ...?
சிந்தனை என்னும் சிறகுகள்
விலங்குகளுக்கு இல்லை
இளைஞனே
சிந்தனை உன் சொத்து
இதுதான் உன் மூலதனம் ...
சிந்தனையும் உழைப்பும்
உன்னுள் பிறந்தால்
வெற்றிப்பூக்கள் உன்னை ஆசிர்வதிக்கும்...!
வாழ்க்கைப்பயணம்
ஒரே ஒருமுறை
வாழ்ந்து பார்க்கலாமென
தன்னம்பிக்கையோடு
சிந்தனைச்சாட்டையை
சொடுக்கிவிடு ... இளைஞனே ...!
வெற்றிப்பூக்கள்
உன்னை ஆசிர்வதிக்கட்டும் ...!