ஒருவருக்கு துணையாகவும்
சிற்சிலருக்கு மகனாகவும்
தந்தையாகவும் தூணாகவும்
பலருக்கு உறவாகவும்
வேறு பலருக்கு நட்பாகவும்
ஒரு சிலருக்கு உறுதுணையாகவும்
வேறு சிலருக்கு போட்டியாகவும்
ஏன் சிலநேரம்
பகையாகவும் இருக்கிற நானும், நீங்களும்
இவர்கள் எல்லோரும் அடுத்த கணமே
மற்றனைவருக்கும் வெறும்
ஒரு நினைவாக மட்டும் மாறிவிட கூடியவர்கள் தானே...
இதை நினைவூட்ட தானோ என்னவோ என் இறைவன்
இடையிடையே ஒருவரை பறித்துகொள்கிறான்...
அவ்விதம் பறிக்கப்படும் பொழுது மட்டும் தானே
என் இதயம் மரணம் என்கிற இந்த நிதர்சனத்தை
நினைத்து பார்க்கிறது.
திடீர் மரணமொன்றின் பாதிப்பாய்
மனம் முணுமுணுத்துக் கொண்டிருந்த
"இவ்வளவு தான் வாழ்கையா?." வின் தீவிரத்தன்மை
இறுதிச்சடங்கு முடிந்து திரும்புகையில்
சாலையோர தேநீர்கடையில் அருந்தும் முதல் தேநீரின் போதே
நீர்த்துப்போய்விடுகிறது...
மரணத்திற்குண்டான ஆற்றலின்/ வல்லமையின் சிறுபகுதி கூட
மரணம் குறித்தான
மனிதனின் நினைவுகளுக்கு இருப்பதில்லை..
அடர்ந்த மரணத்தை குறித்தான
நீர்த்துப்போன நினைவுகளுடன்
வாழுவதென்பதே வாழ்க்கையின் சாராம்சம் போலும்...