விடுபடுதல்
சாத்தானின் குரலென ஓங்கி
ஒலிக்கும் மனதில்
பேரமைதிக்கும் பெருங்கூச்சலுக்குமான
இடைவெளிகளில் நிறைந்திருக்கிறாய்
உன் கைகளைக் கோர்த்து
கடந்து வந்த நிச்சயமின்மைகளின்
ஈரச்சுவடு இன்னமும் மிச்சமிருக்கிறது
விலகி நின்று எனை நீயும்
உனை நானும் பார்ப்பதுமென்ற நிலை
மாய யதார்த்தமாகியிருக்கிறது
'உன்னுடன்' என்பதாக தொடங்கும் பொழுகள் பல இரவுகளையும் பல பகல்களயும் கடந்து செல்லும் காலம்
நீண்டதொரு கனவாக இருக்கிறது
அழுகைகளை கடத்தும் தலையணை
புகும் இரவிற்கு
நிஜமென்றறியாத கனவுகள்
ஒரு கணம் வரம்
மறுகணம் சாபம்
கனவிலிருந்து விடுபடும் நாளொன்று
வாய்க்கும் அதுவரை,
கனவுகள் கனவாக இருப்பதே நலம்.
தொலைதூர பயணத்திற்கான காத்திருப்பில் சுயம் தொலைந்து திரியும்
எனை மீட்கும் முயற்சிகளில்
மீண்டும் தொலைந்து போகிறேன்
நினைவுகளை மட்டும் கிளறிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை
கிழிப்பதற்கான சாத்தியங்களை பரீட்சித்து பார்க்கிறேன்
ஒளியைச் சுற்றும் விட்டிலாய் எனை நோக்கி நீளும் உன் கைகள்
காட்சிப்பிழை என மனதடக்கி
தோற்றுப் போகிறேன்
நினைவில் காதலுள்ள மிருகம் தான் நான்
பெருங்காதலில் சுற்றித் திரியும்
பைத்திய நிலையடைந்த சாத்தான் தான்
நான்
பேரன்பை புறகணிக்கவியலாத பேதை தான்
நான்
சிறு தலைகோதலுக்கு ஏங்கித் திரியும்
ஒரு பூனைக்குட்டி தான்
நான்
ஆதலால்,
உன் கோப்பையில் கலந்த துரோகமெனும் விஷத்திற்கு
சிறு துளி அன்பை பரிசளிப்பாயா