பாரிஜாத மலரின் சவ ஊர்வலம்
வீரராகவன் தெருமுக்கிலிருந்த
பாரிஜாத மலர்கள் சொரிந்து கிடக்கும்
கிணற்றில் பூவக்காவின் சடலம்
மிதந்து கொண்டிருந்தது
அக்கிணற்றடியில் எப்பொழுதும்
பாரிஜாத மலர்களை பொறுக்க
அக்காவின் பின் அலையும்
என் பாதங்கள் கிணற்றை
எட்டிப் பார்க்க வலுவற்று நின்றிருந்தது
நான் பெத்த மவளே என்ற
அவள் அம்மாவின் அலறலில்
ஊர் கூடி நின்ற கிணற்றடி அதிர்ந்திருந்தது.
ஊரின் பேரழகியின்
உதட்டோரம் புதிர்மை
நிறைந்த புன்னைகை இன்னும் மீதமிருந்தது
புடவை நுனியில் வைத்து கடித்து
பாதி மிட்டாய் தரும் பூவாக்காவின்
புடவை
முழங்காலுக்கு மேலேறியிருந்தது.
தினவெடுத்து திரியறவ என மதனிமார்கள் வம்பளக்கும்
பூவக்காவின் திரண்ட உடல்
ஊதிப் பெருத்து நீலம் பாரித்திருந்தது
உடல் கழுவி,
அடர் பச்சை நிற புடவை உடுத்தி,
மல்லிகை சரம் சூடி,
குங்குமம் ஒளிரும் மஞ்சள் முகத்தில்,
மின்னும் மூக்குத்தி ஒளியழகில்
இப்பொழுதும் கூட
மதுரை மீனாட்சி தோற்றுப் போவாள்
ஒரு கணம் கண்விழித்து பார்ப்பது போல்
இருந்த பூவக்காவின்
மைவிழிகள் மீது
ஈக்கள் அமர்ந்து செல்கின்றன
வானம் பார்த்த ஊரில்
திசை மாறிய பறவையாய்
டிவிஎஸ் எக்சலில் பறக்கும்
பூவக்கா
குட்டிநாயக்கன் கண்மாயை
ஒரு நீலக்கொப்பரன் போல நீந்திக் கடக்கும்
பூவக்கா
உடல் தின்னும் கழுகுப் பார்வைகளை ஒற்றை முறைப்பில் ஊதித் தள்ளும்
பூவக்கா
மழையில் சிலிர்த்து மறையும்
நிலவைப் போன்ற பூவக்கா
சரக்கொன்றை மலர் நிறம் கொண்ட
பூவக்கா
ஒரு பூவைப் போலவே இருக்கும் பூவக்கா
நாடகம் ஒன்றை முடித்து வைத்த
பாங்கில்,
பேரமைதியுடன்
சலனமின்றி உறங்குகிறாள்.
தேரோட்டம் போல் அசந்தாடி
செல்லும் பூவக்காவின் சவ ஊர்வலத்தின்
பின்னே
பல பூக்களுக்கிடையே
நான் விசிறிச் சென்ற
பாரிஜாத மலர்களும் மௌனித்து கிடக்கின்றன