தேவதையின் ஒற்றைச் சிறகு
வீட்டின் தேவதை
என்றென்றைக்குமாய்
வெளி சென்ற ஒரு மழை நாளில்
தீபாவளி புகை இருளில்
ஊர் மூழ்கியிருந்தது
அந்நாளின் ஆராவாரத்திற்காய்
பெருக்கி துடைக்கப்பட்டவைகளும்
மடிப்பு கலையாமல்
அடுக்கி வைக்கப்பட்டவைகளும்
நிச்சலனத்தின் சாட்சியமாய் நிற்கின்றன
விசும்பல்களும்
பொருமல்களும் ஆத்திரங்களும்
பதிலற்ற கேள்விகளுமாய் அந்நாள்
வெய்யிலினூடே மெதுவாக நகர்ந்து
கொண்டிருந்தது.
இருளற்ற அந்த மாலையில்
ஒரு நொடி பெருவெளிச்சங்களிடையே
புன்னைகையை ஒளியென
ஏந்தி நிற்கும்
தேவதை சர்வநிச்சயமாய்
தோற்றப் பிழை தான்
உன் வெளிச்சம் தேடி
திரியும் விட்டில் பூச்சிகளாய்
வழி தப்பி
நிற்கிறோம்
நொடிக்கொருமுறை
நாம் இருவரும் கைகோர்த்து
நிற்கும் புகைப்படத்தை பார்த்துக் கொள்கிறேன்
தேவதைக்கு பட்டாம்பூச்சியின் சாயலை
அளித்தது பெருங்குற்றமொன்றுமில்லை
இருளில் நின்று எந்த நட்சத்திரங்களிடையே
நீ நின்றிருப்பாய் என நாங்கள் தேடும்
இந்நாளை வெறுத்திருந்தோம்
தூரத்து வெடி சத்தங்கள்
தேற்றவியலாது தேம்பியழும் மனங்களின் கங்குகளை பிரதிபலிக்கிறது.
மஞ்சள் ஈரம் இன்னும் காய்ந்திராத
புது துணிகளிடையே
தேவதை விட்டுச் சென்ற
செம்பருத்தி நிற உடையினூடே ஒர்
ஒற்றைச் சிறகு
நிசப்தங்களை மட்டும் தாங்கி நிற்கும்
அவ்வீட்டில்
பின் எத்தனை தீபாவளிகள் கடந்தும்
நினைவடுக்குகளின் எச்சமாய் நிற்பது
அக்கடைசி தீபாவளியில்
தேவதை விட்டுச்சென்ற
ஒற்றைச் சிறகு மட்டுமே