உன்னை பார்க்க வேண்டும் என்பது
பலநாள் கனவு
காதில் கேட்கும் ஒலியாக
தழுவிச் செல்லும் காற்றாக
எப்போதும் என்னுடனேயே இருக்கிறாய்
உன்னைப் பார்க்கத்தான் முடியவில்லை
அனுதினமும் உன்னை
எனக்குள் உணருகிறேன்
அணுக்களாக என் ரத்தத்துடன்
கலந்திருப்பதை உணருகிறேன்
உணர முடிகிறது தவிர
பார்க்க முடியவில்லை
எதோ ஒரு தடங்கல்
ஒவ்வொரு தடவையும்
ஒரு முறை
ஒரே ஒரு முறை
பார்த்தால் போதும்
எனது வாழ்வுக்கு ஒரு
அர்த்தம் கிடைத்துவிடும்
ஒன்றும் வேண்டாம் எனக்கு
வேறு ஒன்றுமே வேண்டாம்
உன்னை பார்த்தாலே போதும்
என்னை அனுதினமும்
கொல்லாமல் கொல்பவள்
கனவிலும் நினைவிலும் வந்து
என்னை வாட்டி வதைப்பவள்
என் தூக்கத்தை தொலைத்தவள் யாரென்று
ஒரு முறை பார்த்தால் போதும்
நிலவைத் தொட நினைப்பதும்
காற்றை கட்டித் தழுவதும்
பேராசை தான்
ஆசையே மனிதனின் முன்னேற்றத்துக்கு
ஏணிப் படி
ஆசைப்பட்டதாலே தானே
மனிதன் நிலவைத் தொட்டான்
ஆசைப்பட்டதால் தானே
இமயத்தையும் தொட்டான்
நான் உன்னைத் தொட நினைக்கவில்லை
ஒரு முறை பார்த்தாலே போதும்