பெரும் பிரயத்தனத்தோடு வெகுநேரமாய்
காலதர் கண்ணாடியில் முட்டி மோதுகிறது
அந்த புறா.
தனிமையில் கிடப்பவனைப் பார்த்து
அலகு விரித்து கெஞ்சுகிறது அது.
வாய்க்குள் தானியத்தை குதப்பி
தாய்ப்புறா கைவிட்ட குஞ்சுப்புறாக்களுக்கு
இரையூட்டியதைப்போல் இதற்கும் ஊட்ட
ஒரு போதும் விரும்பியிருக்கவில்லை அவன்.
எதன் யார்த்தலுமற்ற கூட்டிலிருந்தே
பறந்து வந்திருக்க கூடுமது.
அனுவாதங்களின் சாளரத்தை திறக்க
அனுமதியாதவனைப் போலே உறக்கத்தை
அதீதமாக்குகிறது அவன் மூச்சின் சப்தம்.
ஒரு கட்டத்தில்
முட்டி முட்டி மூக்குடைந்த புறா
அரை மயக்கத்தில் தூரத்து
மின்சார கம்பியில் போய் அமர்கிறது.
இப்போது பிடி தளர்த்தி
மெல்ல எழ சம்மதிக்கிறது
உடைபடாத கட்டமைப்பு மனது.
"துரத்தித் துரத்தி காதலித்தும்
கைவிடப்பட்ட ஆன்மாவின் ரத்தமிதுவென"
கண்ணாடியில் அதன் தூதுச்செய்திக் கண்டு
அதிர்ச்சியில் எழுந்தோடுகிறான்
அரைநிர்வாணமாய் புறாவை நோக்கி.
கட்டுமானங்கள் கரைந்ததறியா புறா
இருகால்களையும் இருகம்பியிலாக்கி
தனக்குத் தானே மின்சாரம் பாய்ச்சி
உயிரற்று தலைகீழாய் விழுகிறது.
இரு கைகளிலும் அள்ளியெடுக்கிறான்
அதுவொரு அழகிய பெண்புறா.
நடுவீதியில் நெஞ்சணைத்த புறாவோடு
வருவோர் போவோரிடமெல்லாம் கதறியழுதவனை
ஆறுதல் படுத்துகின்றனர் சிலர்.
பரிதாபமாய் பார்த்துச் செல்கின்றனர் சிலர்.
இன்னும் சிலரோ புதுப்பெயரிட்டனர்.
என்ன இருந்தாலும்
இப்போதெல்லாம் தூங்குவதேயில்லை
அந்த "பைத்தியக்காரன்".