தர்பார் மண்டபம்
தர்பாரின் இருபுறமும்
அமைச்சர் பெருமக்கள்
பணிப்பெண்கள் சாமரம் வீச
சிம்மாசனத்தில் நான்..
தங்களை காண புலவர் வந்துள்ளார்
கூறியது அரண்மனை சேவகன்
வரச்சொல்லும் இது நான்
சேவகன் புலவரை அழைக்க
புலவர்... மன்னவன் வாழ்க
வெண்கொற்ற குடை வாழ்க
வழக்கமான கீர்த்தனைகள்
கீர்த்தனைக்கு பின்
புலவரின் பாடல்
விளங்காத தமிழ்நடை
அந்த வகையில்
தமிழும் பெண்ணும் ஒன்றுதான்
அனைவருக்கும் எளிதில் விளங்காது
ஆஹா அருமை அருமை
கூறியது ராஜ குரு
கொண்டுவாருங்கள் பொற்கிழியை
குருவே அருமை என்றதால்
பரிசு புலவனுக்கு
புலவர் மீண்டும் மன்னவன் துதி பாட
ஒருங்கே முடிகிறது
தர்பார் மீண்டும் கூடியபோது
நடன அழகிகளின் நாட்டிய நாடகம்
என்னே நடை
என்னே இடை
என்னே இசைவு
என்னே அசைவு
காண கண் கோடி
அருமையான நடனம்
நடனத்திற்கு பின்
மக்களின் குறைகள்
மக்கள் குறை கலைந்து
களைத்து
அந்தபுறம் திரும்பும் வேலை
அந்தி பொழுது
வானத்தின் எதிரெதிரே
ஒருபுறம் ஞாயிறு மறைய
மறுபுறம் வெண்ணிலவு தோன்ற
கீழ்வானம் சிவக்க
வெப்ப காற்று மறைந்து
பனிக்காற்று சிலிர்க்க
இறை தேடிய பறவைகள்
வரிசையாய் கூட்டிற்கு திரும்ப
கரிய மேகங்கள் மெதுவாய் நகர
மெல்ல இருள் சூழ
முற்றத்தில் நின்று
இயற்கையை உள்வாங்கி
ஒரு ஆனந்த குளியலிட்டு
ஏகாந்த மண்டபத்தில்
நறுமண மலர்சொலையில்
ராணியின் கரம் பற்ற .....சீ என்றும்
மடி சாய்ந்து இதழ் சுவைக்க .....ம்ம் என்றும்
சிணுங்கள் கீதங்கள் செவிகளில்..
மன்னா ..... மன்னா.....
அழைத்தது மெய்க்காப்பாளன்
திடுக்கிட்டு எழுந்தேன்
ராணியும் இல்லை
அந்தப்புறமும் இல்லை
என்னை அழைத்தது யார்......?
மீண்டும் குரல்
கண்ணா.... அடேய் கண்ணா....
இடம் மாறியது
காட்சி மாறியது
எதிரே நண்பன்
என்னடா பகலில் உறக்கம்
...சே
அவ்வளவும் பகல் கனவா
என்னே ராஜ வாழ்க்கை
நனவாகுமா.....?