Author Topic: ~ ஏப்., 23 - உலக புத்தக தினம்! புத்தகம் வாசிப்பே சுவாசமாகட்டும்! ~  (Read 1328 times)

Offline MysteRy

ஏப்., 23 - உலக புத்தக தினம்! புத்தகம் வாசிப்பே சுவாசமாகட்டும்!



காகிதம், இரண்டு இடங்களில் புகழடைகிறது; ஒன்று, பணமாகும் போது, மற்றொன்று புத்தகமாகும் போது என்பர். கையில் பிரம்பின்றி, கற்றுக் கொடுக்கும் ஒரே ஆசிரியர், புத்தகம் மட்டுமே!

உலக புகழ்பெற்ற நாடக ஆசிரியர், ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும், ஏப்., 23ம் தேதி. மேலும், ஸ்பெயின் நாட்டு இலக்கியவாதியான, செர்வான்டிஸ் இறந்ததும், இந்நாளில் தான்!

யுனெஸ்கோவின், 28வது மாநாடு, 1995-ல் பாரிசில் நடைபெற்ற போது, அறிவை விரிவு செய்யும் விதமாகவும், பல்வேறு நாட்டின் கலாசாரத்தை அறிய உதவும் கருவியாகவும் புத்தகம் இருப்பதால், அதை கொண்டாடும் பொருட்டு, பிரபல எழுத்தாளர்களின் நினைவாக, ஏப்., 23ஐ தேர்வு செய்து, உலக புத்தக தினமாக அறிவித்தது. இதை, பல நாடுகள் ஏற்று, கொண்டாடி வருகின்றன.

முதல் உலக புத்தக தினத்தன்று, லண்டனில், பள்ளிக்குழந்தைகளுக்கு ஒரு பவுண்ட் மதிப்புள்ள அடையாள வில்லை வழங்கப்பட்டு, அவர்கள், எங்கு வேண்டுமானாலும் அவர்களுக்கு பிடித்த புத்தகத்தை வாங்கலாம் என்று ஏற்பாடு செய்தனர். இது, மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

'சிறையில், வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம்; புத்தக வாசிப்பை மட்டும் அனுமதியுங்கள்...' என்றார் நெல்சன் மண்டேலா.

 'அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு...' என்றார் பாரதிதாசன்.

நைனிடால் சிறையில் அடைபட்டிருந்த காலத்தில், தன், 13வயது மகள் இந்திராவுக்கு, நேரு எழுதிய கடிதங்கள் உலகப்புகழ் பெற்றவை.

ஒரு சமுதாயத்தின், ஒட்டு மொத்த வாழ்க்கையை உயர்த்தும் நெம்புகோல்கள், புத்தகங்கள் தான்! 'புத்தகம் திருடுவது வெண்ணெய் திருடுவது போல இனிப்பானது...' என்றார், வலம்புரிஜான்.

'கல்வி அனைவருக்குமானது; புத்தகம் பொதுவானது...' என, துண்டு பிரசுரம் கொடுத்ததற்காக, கைது செய்து, சிறையிலடைக்கப்பட்டார், பிரபல ஆங்கில கவிஞர் ஜான் மில்டன்.

கண் பார்வையற்றவரான மில்டன், 'இழந்த சொர்க்கம் மற்றும் மீண்ட சொர்க்கம்' என்ற, இரு காவியங்களை படைத்தார்.

'ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீர்கள்...' என்றதற்கு, 'நான் நூலகம் கட்டுவேன்...' என்றார் காந்திஜி.

மேலும், 'பெண்கள் முன்னேற்றமடைய வேண்டுமெனில், அவர்கள் கைகளில் உள்ள கரண்டியை பிடுங்கி விட்டு, புத்தகத்தை கொடுங்கள்...' என்றார் ஈ.வெ.ரா.,

தமிழகத்தில் உ.வே.சா., மேற்கொண்ட புத்தக தேடல் தான், தமிழர்களின் கலாசாரத்தின் தொன்மையை உலகிற்கு பறைசாட்டியது.

புத்தகம் தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், எளிமையாய் எழுதிய திருக்குறள், இன்றைய மனிதர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் இருக்கிறது.

மூட நம்பிக்கையை எதிர்த்தும், முற்போக்கை முன்னிறுத்தியும் எழுதப் பட்ட புத்தகங்கள்,   சமூக மறு மலர்ச்சிக்கு வித்தட்டன. இதற்கு சான்று,
அ. மாதவய்யாவின் புத்தகம்!

புத்தகம் என்பது சிந்தனையின் வெளிப்பாடு. அது, படிப்பவரை மேலும் சிந்திக்க தூண்டி, அறியாமையை விலக்குகிறது. இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. சமூக கொடுமைகள் மற்றும் அநியாத்திற்கு எதிராக கோபம் கொள்ளச் செய்கிறது.
இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், புத்தகம் படிப்பதென்பது குறைந்து வருகிறது. படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள், ஒவ்வொரு வீட்டிலும் அதிகம். படிக்காத அப்புத்தகத்தில் தான், நம் அறிவின் ஆன்மா ஒளிந்து கொண்டிருக்கிறது.

நல்ல புத்தகங்களுக்கு சிறகுகள் உண்டு; நாமும் அதனுாடே பறப்போம்!