மனமே என்ன மயக்கமா
பிறந்து விட்டோம் என்று கலக்கமா
உளிபட்டால் கல்லுக்கு வலிக்கும்
அப்படி நினைத்தால்
கல் எங்கே காவியமாகும்
வழிபடும் கடவுளாகும்
துயரங்களின் பிடியில் சிக்கிவிட்டால்
வாழ்வே கசப்பாகும்
துயரங்களை சிறைப்படுத்து
வாழ்வு தேனாகும்
சிறிய விதை தான்
பூமியைப் பிளக்கும்
சிறிய காற்றுசூழல் தான்
புயலாக மாறும்
விதையின் முனைப்பை நீ காட்டு
இனி விடியும் பொழுதை உனதாக்கு
ஏற்க மறுக்கும் கரையை
விடாமல் துரத்தும் அலையைப் பார்
அதன் நம்பிக்கையைப் பார்
ஒரு நாள் கரையுடன் கை கோர்ப்போம்
என்ற போராட்டத்தைப் பார்
நம்பிக்கை நாளும் கொண்டால்
நிலவில் உழவு உழலாம்
கடலுக்கு மூடி போடலாம்
காற்றுக்கு வேலி போடலாம்
வானவில்லில் அம்பு தொடுக்கலாம்
கேலியாக நீ சிரிப்பாய்
இவையெல்லாம் சாத்தியமா என
நேற்றைய மனிதனின் நம்பிக்கையால்
இன்றைய மனிதவாழ்வு எளிதானது
நீயும் நம்பிக்கை கொள்
வாழ்வு உன் வசப்படும்