Author Topic: ~ விநாயகருக்கு பிடித்த ருசியான கொழுக்கட்டை! செய்வது எப்படி? ~  (Read 325 times)

Offline MysteRy

விநாயகருக்கு பிடித்த ருசியான கொழுக்கட்டை! செய்வது எப்படி?



நீர் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 2 கோப்பை, (தேவைப்பட்டால் 2 ஸ்பூன் பாசிப்பருப்பு சேர்த்துக்கொள்ளலாம்)
உப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் துருவியது – 1 மூடி
சீரகம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
வர மிளகாய் – 4
எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை

அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த மாவைக்கொட்டி இடை விடாமல் மிதமான தீயில், கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும்.
பின் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.
பின் அதனை எலுமிச்சம் பழ அளவிற்கு உருண்டையாக உருட்டி ஆவியில் வேக வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான நீர் கொழுக்கட்டை தயார்.

கார கொழுக்கட்டை

தேவையான பொருள்கள்


அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
காராமணி – 1 பிடி
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
உப்பு, கடுகு – தேவையான அளவு
எண்ணெய், , உளுத்தம் பருப்பு- தேவையான அளவு
பெருங்காயம், கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை

பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அரிசி மாவை வெறும் கடாயில் போட்டு நிதானமான சூட்டில் சிவக்குமாறு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
காராமணியை குக்கரில் போட்டு வேக வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளித்து அத்துடன் காராமணியைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் தேங்காய்த் துருவலையும் சேர்த்து மாவைக் கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.
பின் இறக்கிய மாவை இளம் சூட்டில் கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லித் தட்டில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கார கொழுக்கட்டை தயார்!

காராமணி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்


வறுத்து அரைத்த அரிசி மாவு – 1 கப்
காராமணி – 1 கைப்பிடி அளவு
பொடியாக நறுக்கிய தேங்காய் 1/2 கப்
வெல்லம் 1/2 கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை

காராமணியை வறுத்து குக்கரில் வேக வைக்கவும்.
வெல்லத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேங்காய், நெய், வேகவைத்த காராமணி, ஏலக்காய் தூள், வறுத்த மாவு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
ஆறியதும் தட்டை வடிவில் தட்டி அதை, இட்லி தட்டில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் சுவையான காராமணி கொழுக்கட்டை தயார்!

கடலைப்பருப்பு கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்


வெல்லம் – கால் கிலோ
பச்சரிசி மாவு – கால் கிலோ
கடலைபருப்பு – ஒரு டம்ளர்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – மூன்று தேக்கரண்டி

செய்முறை

வாணலியில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பாகு போல காய்ச்சவும்.
கடலை பருப்பை 30 நிமிடம் ஊற விட்டு ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அதை பாகுடன் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறவும்.
பாகுடன் நன்றாக கலந்ததும் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும். தண்ணீர் இல்லாமல் வற்றி வாணலியில் ஒட்டாமல் வரும். அப்போது தனியே எடுத்து ஆற வைக்கவும்.
பச்சரிசி மாவுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியால் கிளறி பின் இளம் சூட்டில் கையால் பிசைந்து வைக்க வேண்டும்.
மாவை கையில் வைத்து விருப்பத்திற்கு ஏற்ப தட்டி அதன் உள்ளே பூரணம் சேர்த்து மூடி வைக்கவும். முழு மாவிலும் இப்படி செய்து வைக்கவும்.
பின் அதனை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சூடான சுவையான கடலைபருப்பு கொழுக்கட்டை ரெடி!

வாழை இலை பூர்ணம் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்


அரிசி மாவு – 3/4 கப்
தண்ணீர் – தேவையான அளவு
நெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – சிறிது
பூர்ணத்திற்கு தேவையானவை
பாசிப்பருப்பு – 1/2 கப்
வெல்லம் – 3/4 கப்
தண்ணீர் – 1/2 கப்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை

செய்முறை

வெல்லத்தை வெதுவெதுப்பான நீரில் போட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை அடுப்பில் வைத்து, ஓரளவு கெட்டியாக வெந்ததும், அதனை இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, உப்பு சேர்த்து கிளறி, சுடுநீரை கொஞ்சமாக ஊற்றி கரண்டியின் பிடியைக் கொண்டு கிளறி விட வேண்டும். பின்பு மாவானது சற்று வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின்னர், கையால் மென்மையாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து அதில் தண்ணீரை ஊற்றி, மென்மையாக வேக வைக்க வேண்டும்.
பின் அதனை நன்கு மசித்து, பின் அதில் வெல்லப் பாகு சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் உள்ள நீர் வற்றியதும், நெய் சேர்த்து சிறிது நேரம் குளிர விட வேண்டும்.
வாழை இலையை சதுரங்களாக வெட்டி. அதை எடுத்து, அதில் எண்ணெய் சிறிது தடவி, எலுமிச்சை அளவு பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து உருண்டையாக உருட்டி, அதை இலையில் வைத்து வட்டமாக தட்டி, அதன் ஒரு பாதியில் மட்டும் பாசிப்பருப்பு கலவை சிறிது வைத்து, வாழை இலையுடன் சேர்த்து மடித்துக் கொள்ள வேண்டும்.
மடிக்கும் போது, முனைகளை நன்கு ஒட்டி விட வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். இட்லி தட்டில் மடித்து வைத்துள்ள வாழை இலைகளை வைத்து, இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 12 நிமிடம் வேக வைத்து இறக்கினால்
இப்போது சுவையான வாழை இலைக் கொழுக்கட்டை ரெடி!