Author Topic: ~ பருப்புக் குழம்பு [வாழைத் தண்டு] ~  (Read 332 times)

Offline MysteRy

பருப்புக் குழம்பு [வாழைத் தண்டு]



தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
வாழைத் தண்டு – ஒரு சாண் நீளம்
துவரம் பருப்பு – 3/4 கப்
சாம்பார்ப் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லித் தழை

தாளிக்க:

எண்ணெய், உளுத்தம் பருப்பு, வெந்தயம் (விரும்பினால்), சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
வாழைத் தண்டை நார் நீக்கி, வட்டவட்ட துண்டுகளாகவோ, சற்றே அகலமாக இருந்தால் அரைவட்ட துண்டுகளாகவோ நறுக்கி, (கருக்காமல் இருக்க) மோர் கலந்த நீரில் போட்டுக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
மோர்நீரை வடித்து, நறுக்கிய வாழைத் தண்டு துண்டங்கள், உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மூடி வேக வைக்கவும்.
அந்த நேரத்திற்குள் புளியை வெந்நீரில் ஊறவைத்து, நீர்க்கக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
அரைப்பதம் வெந்த காயுடன், புளி, மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
பச்சை வாசனை போனதும், வேக வைத்த பருப்பைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
நறுக்கிய மல்லித் தழை தூவி உபயோகிக்கவும்.
* இந்த முறையில் பூசணி, கத்தரி, வெண்டை, கொத்தவரங்காய், பரங்கி, அவரை, முருங்கை என்று நாட்டுக் காய்கறிகள் எல்லாவற்றிலும் செய்யலாம். அனைத்துக் குழம்பும் எந்தக் காயை உபயோகிக்கிறோமோ, அதற்கான பிரத்யேகமான சுவையோடும் மணத்தோடும் இருக்கும்.
* கத்தரி வெண்டை போன்ற காய்களை முதல் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கத் தேவை இல்லை. தாளித்ததும் சிறிது வதக்கி, நேரடியாக புளிநீரைச் சேர்க்கலாம்.
* அவரை போன்ற காய்களுக்குப் பொருத்தமாக பச்சை மொச்சை போன்ற பயறுகளும் சேர்ப்பதால் அதிக மணத்தைக் கொடுக்கும்.
* காய்களுக்குப் பதில் கீரை வகைகளையும் பொடியாக நறுக்கி, வதக்கி குழம்பில் சேர்க்கலாம்.