இடுப்பில் துண்டும்
தலையில் முண்டாசும் கட்டி
கையில் துடைபத்துடன்
குடில் உள்ளே ஒட்டடை
அடித்தான் தம்பி...
நிலத்தில் வெட்டிவந்த
மண்ணை குழைத்து
சுவர் தரை என மேடு
பள்ளம் பூசி, தீத்து கல்லால்
பளபளக்க செய்தாள் அன்னை ..
வாங்கிய சுண்ணாம்பில்
சுடுநீர் ஊற்றி வண்ணம் இட்டு
சுவர் எல்லாம் புது வர்ணம்
பூசினான் அண்ணன் ..
மண்ணோ,உலோகமோ
எல்லா பாத்திரமும்,
கோரை பாயையும்,தலை அணையும்
அலசி உலர்த்தினாள் தங்கை ..
அரிசி மாவை அரைத்து
நீர் சேர்த்து ,தன் கற்பனை
வளமெல்லாம் கொட்டி
இல்லமெங்கும் , வாசலெங்கும்
மாக்கோலமிட்டாள் அக்கா...
வியர்வையால் நீர் பாய்ச்சி
விளைந்திட்ட புது நெல்
கொண்டுவந்து
வீடு சேர்த்தார் அப்பா ..
மண் பானை ,அகப்பையும்
மஞ்சள் கொத்தும் ,இஞ்சி கொத்தும்
தித்திக்கும் செங்கரும்பும் ,
குழை வாழை எல்லாமே
கொண்டுவந்து சேர்த்திட்டார் தாத்தா..
மஞ்சளால் சாமி செய்து
பக்கம் இரண்டு கரும்பும் வைத்து
குத்துவிளக்கும் ஏற்றி
கழுத்தில் கட்டிய
மஞ்சள்,இஞ்சி கொத்துகளுடன்
கம்பீரமாய் அடுப்பில்
அமர்ந்தன பொங்கல் பானைகள்..
புத்தரிசி ,சக்கரையும்
பசும்பாலும் தண்ணீரும்
தேங்காயும் தான் இட்டு
விறகால் எரித்திடவே!
பொங்கியது பானை இரண்டும்
பொங்கியது மகிழ்ச்சி எங்கும் !
பொங்கலோ பொங்கல் !
பொங்கலோ பொங்கல் !
பொங்கலோ பொங்கல் !
விண்ணை முட்டின சந்தோச குரல்கள் .,,