Author Topic: ~ வாய்ப்புண் அலட்சியம் வேண்டாம் ~  (Read 471 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226799
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாய்ப்புண் அலட்சியம் வேண்டாம்



வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம்.

அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம். நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும். ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு.

இதனால் இவர்களுக்கு வாய்ப்புண் வருகிறது. அடுத்து, இவர்கள் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகளும் வாய்ப்புண் ஏற்படக் காரணமாகின்றன. வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் முக்கியக் காரணம்தான். உணவு ஒவ்வாமை - குறிப்பாகச் செயற்கை வண்ண உணவுகள் - மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம். வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும். பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகி விடும்.

அதேநேரத்தில், வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல், காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு மற்றும் வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவலாம்.

jlkk" width="300" height="225" class="alignnone size-full wp-image-208537

இவற்றோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட வேண்டும். லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாய்ப்புண் மீண்டும் வராது. பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிட்டும். வாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் புகை பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.

பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளை கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.