போர்களின் சுவடுகள்
ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்களின் விளைவுகள் நினைத்துப் பார்க்க முடியாத ரத்தத் தடங்களில் பயணிப்பவை. புத்தக மூட்டை தூக்கும் வயதில் ஆயுதங்களைச் சுமக்கும் அவலம் நேர்ந்த குழந்தைகளின் கண்ணீர்க் கதைகளும் இவற்றில் அடக்கம். நைஜீரியாவில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்தவரான உஸோடின்மா இவெலா எழுதிய ‘பீஸ்ட்ஸ் ஆஃப் நோ நேஷன்’ (Beasts of No Nation- 2005) எனும் நாவல், ஆப்பிரிக்க நாடு ஒன்றில் நடக்கும் உள்நாட்டுப் போரின் பின்னணியில் எழுதப்பட்டது. மருத்துவராகும் கனவுடன் இருக்கும், ஆகு எனும் சிறுவனின் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது உள்நாட்டுப் போர். தாயும் சகோதரியும் தப்பிச் செல்ல, தந்தை சுட்டுக்கொல்லப்படுகிறார். எப்படியோ உயிர் பிழைக்கும் ஆகு, ஆயுதக் குழு ஒன்றில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்படுகிறான். கொலை செய்யவும், கொள்ளையடிக்கவும் நிர்ப்பந்திக்கப்படுகிறான். அவனும், குழுவின் மற்ற சிறுவர்களும், குழுத் தலைவனால் பாலியல் சீண்டல்களையும் எதிர்கொள்ள நேர்கிறது.
கடவுள் தன்னைக் கைவிட்டுவிட்டதாக உடைந்து நிற்கும் அவனுக்குக் கடைசியில் வழி பிறக்கிறது என்று செல்லும் நாவல் இது. ‘டைம் மேகஸின்’, ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’போன்ற இதழ்களின் பாராட்டைப் பெற்றது. அதே பெயரில் திரைப்படமாக வெளியாகவிருக்கிறது இந்நாவல். வெனீஸ் திரைப்பட விழா, டொரன்டோ திரைப்பட விழா போன்ற விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘பீஸ்ட்ஸ் ஆஃப் நோ நேஷன்’திரைப்படம். ‘ஜான் ஐரே’போன்ற படங்களை இயக்கிய கேரி ஃபுகுநாகா இயக்கியிருக்கும் இத்திரைப்படம், ரத்தம் வழிந்தோடும் ஆப்பிரிக்கக் கிராமங்களின் வலியை அசலாகச் சித்தரிக்கிறது. கல்லூரியில் படித்தபோதே இந்நாவலைப் படித்துவிட்ட ஃபுகுநாகா, அதைத் திரைக்கதையாக எழுதத் தொடங்கிவிட்டார். 2009-ல் அவர் இயக்கிய ‘சின் நோம்ப்ரே’திரைப்படமும், மெக்ஸிகோவில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் அமெரிக்காவுக்குத் தப்பிச் செல்லும் சிறுமியைப் பற்றிப் பேசியது.
‘பீஸ்ட்ஸ் ஆஃப் நோ நேஷன்’ திரைப்படத்தின் களன் பொதுவாக ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் நடக்கும் கதை என்பதால், ஏதாவது ஒரு ஆப்பிரிக்க நாட்டில் எடுக்கலாம் என்று திட்டமிட்டிருந்தாராம். கென்யாவில் படமெடுக்க நினைத்திருந்தபோதுதான் நைரோபியின் வணிக வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. வேறு வழியில்லாமல், கானா நாட்டில் இப்படம் படமாக்கப்பட்டது. அங்கோ மலேரியா கொசுக்கள், பிளாக் மாம்பா எனும் கடும் விஷம் கொண்ட பாம்பு, உள்ளூர் கொள்ளைக்காரர்கள் என்று பல்வேறு சவால்கள் களைப்படைய வைத்துவிட்டன என்று அதிர்ச்சி மாறாத குரலில் சொல்கிறார் ஃபுகுநாகா. படத்தில் ஆயுதக் குழுவின் தலைவனாக நடித்திருப்பவர் ‘பசிபிக் ரிம்’, ‘தோர்’போன்ற படங்களில் நடித்திருப்பவரும், ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் நடிக்கப்போகும் முதல் கறுப்பின நடிகர் என்று பேசப்பட்டவருமான இத்ரிஸ் எல்பா!